பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் பங்களாதேஷ்.

(தி ஹிந்து நாளிதழின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் கல்லோல் பட்டாசார்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  பி. குருமூர்த்தி)

பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர தினமான டிசம்பர் 16 ஆம் தேதியன்று, தங்களுக்குள்ள வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய நினைவு மண்டபத்தில் குழுமின. நாட்டின் சுதந்திரத்தினைக் காக்க தங்கள் உறுதிப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தின.  எனினும், வரும் 30 ஆம் தேதியன்று, நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளின் கொள்கை வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.

பாகிஸ்தானின் அட்டுழியங்களுக்கு எதிராக, எப்படி நாடு ஒன்று திரண்டதோ, அதுபோல, தற்போதைய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் நாடு ஒன்று திரள வேண்டும் என்று, புதிதாக உருவாகியுள்ள ஜதியோ ஒய்கியோ முன்னணி தலைவர் டாக்டர் கமல் ஹுசைன் கூறியுள்ளார். ஆளும் கட்சியான அவாமி லீக்கின் ஊடக ஆதிக்கத்தையும் தாண்டி, ஒன்றுபட்டுள்ள இந்த முன்னணி, ஒரு முக்கிய சக்தியாக உருவாகியுள்ளது.

ஆளும் கட்சியான அவாமி லீக் எளிதாக தேர்தலில் வெற்றி பெறும் என்று கருதப்பட்டு வரும் நிலையில், இந்த முன்னணி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. டாக்டர் கமல் ஹுசைன் தலைமையிலான ஜதியோ ஒய்கியோ முன்னணியில் ஓர் அங்கமாக, முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சி விளங்குகிறது. அவாமி லீக் கட்சியின் இளைஞர் அணி, எதிர்க்கட்சிகள் மீது வன்முறையில் ஈடுபடுவதாக சமீபகாலமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரதமர் ஷேக் ஹஸீனா, இந்த முன்னணி, நெறிமுறையற்ற நபர்களின் கூட்டு என்று துவக்கத்தில் கூறினாலும், பின்னர், நவம்பர் மாதத்தில் முன்னணியின் தலைவரைச் சந்தித்து, அதன் 7 அம்ச கோரிக்கைள் குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததால், எதிர்க்கட்சிகள் தங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளன.

பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தலைவர் காலீதா ஜிய உள்பட, எதிர்க்க்கட்சித் தலைவர்களின் கைது முடிவுக்கு வரவேண்டும் என்றும், பங்களாதேஷில் நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியும் ஒய்கியோ முன்னணி கோரிக்கை விடுத்து வருகிறது. எதிர்க்கட்களின் குரல் ஓங்குவதற்கு, பிரதமர் ஷேக் ஹஸினா அவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

பிரதமர் ஷேக் ஹஸீனாவைப் பொறுத்தவரையில், வரவிருக்கும் தேர்தல், பங்களாதேஷின் சுதந்திரத்துக்காகப் போராடிய சக்திகளுக்கும், 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் கைகோர்த்து சொல்லொணா அட்ட்டுழியங்களில் ஈடுபட்ட சக்திகளுக்கும் இடையிலான போர் ஆகும். ஆனால், சுதந்திரப் போரின் வரலாறோ அல்லது அதற்குப் பிறகான பதிற்றுக்களோ இந்த இரு தரப்பின் முடிவை நம்பியிருக்கவில்லை என்பது உண்மை நிலையாகும். எனவே இந்த இருநிலைப்பாட்டு விளக்கங்கள் முரணாக உள்ளது. 1975 ஆம் ஆண்டு அவரது தந்தையாரைக் கொலை செய்த கும்பலுக்கு எதிராக நீதியை நிலைநாட்டிய ஷேக் ஹஸீனா அவர்கள் அதனை ஒரு அரசியல் ஆயுதமாக கையில் எடுத்துள்ளார். ஷேக் ஹாஸினாவின் தந்தை ஷேக் முஜீப் அவர்கள், கிழக்கு பாகிஸ்தானில் வசிக்கும் வங்காளிகளின் தன்மானத்தை மீட்பதில் பெரும்பங்கு வகித்தவர். 1972 ஆம் ஆண்டு முதல், கொலையுண்ட 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதிவரை, அவர் பங்களாதேஷை வழிநடத்தினார். அப்போது அவரும் பல பிரச்சனைகளை சந்தித்தார். இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பாக, பங்களாதேஷில் அவசரநிலையை அறிமுகம் செய்து, அனைத்து அதிகாரங்களையும் கையிலெடுத்துக் கொண்டு,  நாட்டில் ஒரு கட்சி ஆட்சியின் ஆதிக்கத்துக்கு அவர் வித்திட்டதே அவர் செய்த மிகுந்த சர்ச்சைக்குரிய முடிவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவாமி லீக் மற்றும் பங்களாதேஷ் தேசியக் கட்சியின் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை முதிர்ச்சி பெற்ற பங்களாதேஷ் மக்கள் நன்கு அறிவர்.

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து சிறிதும் பின்வாங்காத நிலையில், வரும் தேர்தல் பிரச்சாரங்கள் கட்சிகளின் தம்பட்டங்கள் மற்றும் பரஸ்பர காழ்ப்புணர்ச்சி ஆகியவை நிரம்பியதாக இருக்கும். எனவே, தேர்தலுக்கு முன்னதாக, சந்தேகங்களும், வன்முறை அச்சுறுத்தல்களும் தலைவிரித்தாடும் என எதிர்பார்க்கலாம். பாகிஸ்தானின் இழிச்சொல் பெற்ற ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவு பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்க்கட்சிகள், பங்களாதேஷின் தேர்தல் ஆணையம் அதிரடியாக தன்னை மாற்றிக் கொண்டு, நேர்மையான, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றன.

அரசியல் போட்டிகளைத் தாண்டி நோக்குகையில், சமீப காலம் வரை எதிர்ப்புக்கள் இன்றியிருந்த பிரதமர் ஷேக் ஹஸீனா அவர்களின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். இன்னும் 15 நாட்களில் உண்மையிலேயே போட்டிகள் நிறைந்த தேர்தலை நாடு சந்திக்கிறது. வரும் தேர்தல், தலைதூக்கியுள்ள அடிப்படைவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பதையும், மக்களின் வாழ்க்கையில் மேம்பாடும், நாட்டின் சமூக, பொருளாதார நீதியும்  நிலைநாட்டப்படுமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.