புனிதத் தலங்களுக்கு சுற்றுலா – இந்தியா, நேபாளம் ஊக்கம்.

(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நேபாளத்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, இருநாடுகளும் தங்களுக்கிடையேயான தொடர்புகளை ஊக்குவிப்பது தவிர, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தன. இருநாடுகளும் தங்களின் சமய மற்றும் கலாச்சாரப் பிணைப்புக்களை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தின. நேபாளத்தில் இம்மாதத் துவக்கத்தில் நடைபெற்ற விவாஹ பஞ்சமி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, ராம பெருமானின் துணைவியான சீதா தேவியின் பிறப்பிடமான ஜனக்பூர் என்னுமிடத்துக்கு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பயணித்தார். விவாஹ பஞ்சமி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேபாளத்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கூடுவது வழக்கம். கடந்த மே மாதம், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நேபாளத்திலுள்ள ஜனக்பூர் கோவிலுக்குச் சென்றார். அவர், இங்கு விஜயம் செய்யும் முதல் இந்தியப் பிரதமராவார். இந்தக் கோவிலுக்கு வந்தது, தனக்கு நினைவில் நிற்கும் அனுபவமாக விளங்கியதாக, விருந்தினர் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டார். இந்தப் புனிதத் தலத்துக்குப் பயணிப்பது, இந்திய, நேபாள பக்தர்களுக்கு நெஞ்சில் உறையும் சிறந்த அனுபவமாக விளங்குகிறது.

இந்தியாவுக்கும், நேபாளத்துக்குமிடையிலான சமூக, கலாச்சார பிணைப்புக்கள் பல பரிமாணங்களை உள்ளடக்கியதாகும். இருநாட்டு எல்லை தாண்டிய திருமணங்கள், நேபாலி, ஹிந்தி, மைதிலி, போஜ்புரி, ஆவாதி மற்றும் உள்ளூர் மொழிகள், பாரம்பரியங்கள், சமூக, கலாச்சார சடங்குகள் ஆகியவை இருநாட்டு மக்களின் பொதுவான அம்சங்களாக விளங்குகின்றன. இருநாடுகளுக்குமிடையில் நிலவும் புவிசார் மற்றும் கலாச்சார நெருக்கம், இருதரப்பு உறவுகளுக்கு சிறப்பிடத்தையும், ஆழத்தையும் நல்குகின்றன.

தமது பயணத்தின்போது, நேபாளத்தில் மலைப்பாங்கான மாவட்டத்திலுள்ள முக்திநாத் கோவிலுக்கும், காட்மண்டுவிலுள்ள பசுபதிநாதர் கோவிலுக்கும் பிரதமர் மோதி அவர்கள் சென்று இறைவனை வழிபட்டார். ஆண்டுதோறும், இந்தியாவிலிருந்து நேபாளத்துக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள், பசுபதிநாதர் கோவிலுக்குத் தவறாமல் செல்கின்றனர். அதேபோல, நேபாளத்திலிருந்து இந்தியா செல்லும் பயணிகள், உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் வாரனாசி, ஹரித்வார், புத்தகயா, ரிஷிகேஷ் போன்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். மேலும் பலர், குஜராத்திலுள்ள துவாரகாவிற்கும், ஒடிஷாவிலுள்ள பூரி ஜகன்னாதர் கோவிலுக்கும் சென்று வழிபடுகின்றனர். இந்து சமயம் சார்ந்த பல புண்ணியத் தலங்கள் தவிர, இருநாடுகளிலும் பௌத்தமதம் சார்ந்த புண்ணியத் தலங்களும் பரவியுள்ளன. புத்தரின் பிறப்பிடம், அவர் ஞானம் பெற்ற இடம் உட்பட, அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற பல தலங்கள் இருநாடுகளிலும் பரவியுள்ளன. எனவே, இருநாடுகளிலிருந்தும் அதிகளவில் பயணிகள் பயணித்து, சமயச் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கின்றனர்.

நேபாளத்திலுள்ள லும்பினியில் பிறந்த புத்தர் பெருமான், இந்தியாவுக்குப் பயணித்து முக்தி பெற்றபின், இந்தியா, நேபாளம் தவிர, தெற்காசிய நாடுகளிலும், அவற்றைத் தாண்டியும் தனது போதனைகளைப் பரப்பினார். புத்தரின் புனிதத் தலங்களை இணைக்கும் வலையம் முழுமையாக செயல்படுத்தப்பட்டபின், தெற்காசியா  முழுவதிலும் சமய, கலாச்சார சுற்றுலா வளர்ச்சியடையும். தாய்லாந்து, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் ஈர்க்கப்படுவர்.

இந்தியாவுக்கும், நேபாளத்துக்குமிடையிலான கலாச்சார நெருக்கம், மேலும் பலபடிகள் உயர்வதற்கான தருணம் வந்துவிட்டது எனலாம். பிரதமர் நரேந்திர மோதி அவர்களும், நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி அவர்களும் கூட்டாக, ஜனக்பூர் – அயோத்தியா இடையிலான பேருந்து சேவையைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். இதன் மூலம், ராமாயண வலையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த ராமாயண வலையம், நேபாளத்திலுள்ள ஜனக்பூர், உ.பி.யிலுள்ள அயோத்தியா மற்றும் பீஹார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், தெலங்கானா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் 15 முக்கியத் தலங்கள் ஆகியவற்றை இணைக்கும்.

ஜனக்பூர் – அயோத்தியா இடையிலான பேருந்து சேவையைத் துவக்கி வைக்கும்போது, இருநாட்டு புத்த, ஜைன மதத் தலங்களை இணைக்கும் வகையில், மேலும் இரு வலையங்கள் உருவாக்கப்படும் என்று, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அறிவித்தார். இதன் மூலம், இந்தியாவிலும், நேபாளத்திலும் புண்ணியத் தலங்கள் சார்ந்த பல இடங்களில் வசதிகள் பெருகுவதோடு, அங்கு வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புக்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்படும். இருநாடுகளிலும், சமய சுற்றுலாத் துறையில், ஆண்டொன்றுக்கு 100 கோடி டாலருக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்தியா, துடிப்பான சுற்றுலாக் கொள்கையை மேற்கொண்டுள்ளது. இதனை நேபாளமும் பின்பற்றினால், இருநாடுகளிலும் சமய சுற்றுலா பெருமளவில் மேம்பாடு அடையும் என்பது திண்ணம்.

சமய சுற்றுலாவை ஊக்குவிக்கத் தேவையான கட்டமைப்புக்களை உருவாக்கும் பணியில் இந்தியா இறங்கியுள்ளது. இந்தியாவிலும், நேபாளத்திலும் உள்ள புண்ணியத் தலங்களை இணைக்கும், விமான, ரயில் மற்றும் பேருந்து வசதிகள் இத்துறைக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே, விமான சேவைகள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், இருநாட்டு ரயில் மற்றும் சாலைவழி சேவைகளைப் பெருக்கும் பணியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.