பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஜி எஸ் டி வரிக் குறைப்பு.

(மூத்த பொருளாதாரப் பத்திரிக்கையாளர் ஜி ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)

2017 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி அமலுக்கு வந்த இந்தியாவின் மிக முக்கிய மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரியில் வரிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமான 28 சதவீதத்தில் இருந்த 7 முக்கியப் பொருட்களின் வரியை ஜி எஸ் டி சபை குறைத்துள்ளது, இதைத் தவிர, பொதுவான உபயோகத்தில் இருக்கும் 23 நுகர்வுப் பொருட்களின் வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இது, ஒருசில ஆடம்பரப் பொருட்களைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் 18 சதவிகித வரி வரம்பில் கொண்டுவருவதற்கான முயற்சியாகும்.
அதிகபட்ச 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டுள்ள 7 பொருட்களில், விவசாயத்திற்காக உபயோகப்படுத்தப்படும் வாகனங்களின் பாகங்கள், கணினி திரைகள், 32 அங்குலம் வரை உள்ள தொலைக்காட்சிப் பெட்டி, புதுப்பிக்கப்பட்ட டயர்கள், கைப்பேசி மொபைல் பேங்க், டிஜிட்டல் கேமரா, கணினி விளையாட்டு பொருட்கள் ஆகியவை அடங்கும். மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் மற்றும் பாகங்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் முதலீட்டில் இயங்கி வரும் கேளிக்கைத் துறையில், ரூபாய் 100/- க்கு அதிகமான திரைப்பட டிக்கெட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ரூபாய் 100 க்குக் கீழே உள்ள திரைப்பட டிக்கெட்களுக்கு 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும் ஜி எஸ் டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரிக் குறைப்பினைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி வரம்பில் இருக்கும் 1211 பொருட்களில், 97.7 சதவீத பொருட்கள் 18 சதவிகித வரி வரம்பிற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் பொருட்களான சிமெண்ட், மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு, 28 சதவீதத்தில் இருந்து வரியைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அதிக வருமானத்தை இவை நல்குகின்றன என்ற காரணத்தால், தற்போதைக்கு அப்பொருட்களின் மீதான வரிக் குறைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்தத்தில் 28 பொருட்கள் மட்டுமே அதிகபட்சமான 28 சதவீத வரம்பில் உள்ளது. ஜிஎஸ்டி சபையின் கூட்டம் நடைபெற இருந்த சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும்போது, 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீத வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படும் என்று கோடிட்டுக் காட்டியிருந்தார். தற்போது, ஐந்தாவது சுற்று ஜிஎஸ்டி வரி சீரமைப்பு நிகழ்ந்துள்ளது.

தொடர்ந்து, ஒவ்வொரு சுற்றிலும் வரிக் குறைப்பு நிகழ்ந்துள்ளதால், மொத்த வரி வசூலில் தங்கள் பங்கு கணிசமாகக் குறையும் என்று மாநிலங்கள் கவலை கொண்டுள்ளதால், இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சீராக்கப்பட்ட வரிவிதிப்பினால் சில மாநிலங்களின் வரி வசூல் பாதிப்பு அடைந்துள்ளதா எனக் கண்காணிக்க, 7 அமைச்சர்கள் கொண்ட செயற்குழுவை உருவாக்க ஜிஎஸ்டி சபை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம், மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றில் இருந்து, வல்லுனர்கள் இந்த செயற்குழுவிற்கு உதவி புரிவார்கள்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு சார்ந்த முக்கியப் பணிகளை அவற்றுக்குத் தகுந்த செயற்குழுக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகம் புரிபவர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட தொகுப்புத் திட்டத்தை சிறிய அளவில் சேவை புரிபவர்களுக்கும், வழங்குவது, லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் குடியிருப்பு வீடுகள் மீது உள்ள வரிகளை ஆராய்வது, ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிப்பதற்கான வரம்பை நிர்ணயம் செய்வது ஆகியவை இதில் அடங்கும்.

இரண்டு அல்லது மூன்று மாநில மேல்முறையீட்டு ஆணயங்களிடையே மாறுபட்ட முடிவுகள் வெளியாவதால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மத்திய மேல்முறையீட்டு  ஆணையத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. பல மாநிலங்களில் பலதரப்பட்ட முரணான தீர்வுகளினால் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்பதால் தொழில்துறை இதை வரவேற்றுள்ளது. வரி செலுத்துதல் மற்றும் இதர பணம் செலுத்தலுக்கென பொதுவான பேரேடு உருவாக்குதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயல்முறைகளை எளிதாக்குதல், வருடாந்திர வரவு செலவு கணக்கை அளிப்பதற்கான காலக்கெடுவை அதிகரித்தல், இடுபொருள் நிலையிலான வரிவரவைக் கோருவதற்கான கால அவகாசத்தை நீட்டித்தல் போன்றவற்றில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இவை வர்த்தகம் புரிதலை மேலும் எளிதாக்கும் நடவடிக்கைகளாகும்.

மொத்தத்தில், இந்த ஜிஎஸ்டி வரி சீரமைப்பு, நிதி சமநிலையைப் பராமரிப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் உள்ள அனைத்துப் பங்குதாரர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த முடிவுகள் அமைந்துள்ளன என்றால் அது மிகையல்ல.