சமூக அடிப்படையில் பரிணமிக்கும் இந்திய, சீன உறவுகள்.

(ஜேஎன்யூ பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி)

கடந்த ஏப்ரல் மாதத்தில் வூஹான் நகரில் பிரதமர் மோதி அவர்களும், சீன அதிபர் ஸீ ஜின்பிங் அவர்களும் சந்தித்து, ஒருமித்த கருத்துடன் அமைத்துக் கொடுத்த வூஹான் சித்தாந்தத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அவர்களின் அண்மை இந்தியப் பயணம் அமைந்தது எனலாம். இருநாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகள், கலாச்சாரப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் புதிய அத்தியாயத்தை வாங் யீ அவர்கள் துவக்கியுள்ளார்.

இருநாடுகளுக்குமிடையிலான பண்பாட்டுப் பரிவர்த்தனைகள், திரைப்பட விழாக்கள், விளையாட்டு, சுற்றுலா, அருங்காட்சியகங்கள், நகரத் தொடர்புகள், பாரம்பரிய மருத்துவம், யோகா, ஆங்கிலக் கல்வி என, பல்வேறு அம்சங்கள் குறித்த விவரமான பட்டியலை வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டார். எல்லை பிரச்சனை, வர்த்தகப் பற்றாக்குறை போன்ற சிக்கலான விஷயங்கள் கவனத்துக்கு வந்தாலும், அவை குறித்த விவாதங்களைப் பின்னர் மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

கடந்த முப்பதாண்டு காலமாக, இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் குழுக்களின் பரிமாற்றங்கள், கல்வி உதவித் திட்டங்கள், புத்தக விழாக்கள், காந்தி மையம், திரைப்பட விழாக்கள் ஆகியவை நிகழ்ந்து, இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்ட போதிலும், 14 லட்சத்துக்கும் அதிகாமாக இந்தியர்கள் சீனாவுக்குப் பயணித்ததற்கு மாற்றாக, 2.4 லட்சம் சீனர்களே இந்தியாவுக்குப் பயணித்துள்ளனர். தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், இருதரப்பு உறவை ஊக்கப்படுத்தும் விதமாக, முன்னேற்றம் கண்ட 40 க்கும் மேற்பட்ட அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்சனைகளைப் பொறுத்தவரை, டோக்லாம் பிரச்சனை மற்றும் ஊடக, சட்ட, உளவியல் ரீதியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு இந்தியா பணியவில்லை. இந்நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சீனாவிற்கு, இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு, கிழக்காசிய உச்சி மாநாடு, புராதன நாகரீக மேடை போன்ற மேடைகள் மூலம், இருதரப்பு உறவுகளின் இணைமிகுதிறனை அதிகரிப்பதே வாங் யீ அவர்களின் இந்தியப் பயணத்தின் குறிக்கோளாக உள்ளது.

டோக்லாம் பிரச்சனையைத் தொடர்ந்து எழுந்த கசப்பான உணர்வுகள், குறிப்பாக சீனாவில் எழுப்பப்பட்ட எதிர்மறை விவாதங்கள் ஆகியவற்றைப் போக்கும் வண்ணம், கவனத்துடன், சமூக அடிப்படையில் இந்திய, சீன உறவுகளைப் பரிமளிக்கச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும் நேரடி வர்த்தகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சீனா, இந்தியாவைத் தன்பக்கம் ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனலாம்.

எல்லைப் பிரச்சனை, சீன ராணுவத் திறன் அதிகரிப்பு, பாகிஸ்தானுக்கு வழக்கமான, செயலுத்தி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வது, சீன அரசின் நெடுஞ்சாலைத் திட்ட்த்தில் இந்தியா பங்கு கொள்ளாதது போன்ற சிக்கலான விஷயங்கள் மலிந்துள்ள நிலையில், இந்தியாவுடனான நல்லுறவைப் பேண, சமூக அடிப்படையில் உறவுகளை மேம்படுத்துவது சீனாவுக்கு அவசியமாகிறது.

1988 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவுக்குப் பயணித்த போதும் இதே போன்ற சூழல் நிலவியது. அதாவது, எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட சிக்கலான விஷயங்கள் குறித்து, பின்னர் விவாதிக்கலாம் எனவும், அதுவரை இருதரப்பு உறவுகளை மற்ற வழிகளில் முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. எனினும், கடந்த முப்பதாண்டு சீன வர்த்தகத்தில், இந்தியாவின் பற்றாக்குறை, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 62,600 கோடி டாலர் அளவை எட்டியுள்ளது. நடைமுறை சார்ந்தும் பயனளிக்கக் கூடிய வகையிலும் சமூக அடிப்படையில் இந்திய, சீன உறவுகளைப் பரிமளிக்கச் செய்யும் அதே நேரத்தில், சிக்கலான பிரச்சனைகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும்.