ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பும் அமெரிக்கப் படைகள் – தெற்காசியாவில் இதன் தாக்கமும் விளைவுகளும்

அஷோக் சஜ்ஜன்ஹர், முன்னாள் இந்தியத் தூதர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார்

அமெரிக்க அதிபர் திரு. டோனல்ட் டிரம்ப், ஆஃப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்கப் படைகளில் பாதிப்படை அமெரிக்காவிற்குத் திரும்பும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, காபுல் அரசாங்கத்திற்கு ஒரு அதிர்வை அளித்துள்ளது. முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை அதிகரிப்பது குறித்து தன் ஆலோசகர்கள் அளித்த ஆலோசனையை தான் ஏற்றதாக அவர் கூறியிருந்தார். அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்கப் படைகள் அமெரிக்காவிற்குத் திரும்ப வேண்டும் என்பதில் திரு. டிரம்ப் உறுதியாக இருந்தார். எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அவர், படைகளைத் திரும்பப் பெற, அமெரிக்கா எந்தவித செயற்கைக் காலக்கெடுவையும் கடைபிடிக்காது, மாறாக, ஆஃப்கானிஸ்தானில் அமைதியும் வெற்றியும் கிடைக்கும் வரை அங்கு தங்கி தன் பணிகளைத் தொடரும் எனக் கூறினார்.

கூடுதலாக, ஆஃப்கானிஸ்தானில் இன்னும் துடிப்புடன் தன் செயல்பாடுகளில் ஈடுபட இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த டோனல்ட் டிரம்ப், தாலிபான் மற்றும் பிற பயங்கரவாதிகளுக்கு உதவி, ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் அப்படிச் செய்யவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்நாட்டை எச்சரித்தார். அந்த அறிவிப்பை அடுத்து, அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையில் மேலும் 4000 அதிகரிக்கப்பட்டது. பாகிஸ்தான் தாலிபானிற்கு உதவாமல் இருக்க, அமெரிக்கா, 300 கோடி டாலர் அளவிலான உதவித்தொகைகளை நிறுத்தியது உட்பட பல நெறுக்கடிகளை அளித்தது.

அமெரிக்க அதிபர் தற்போது செய்திருக்கும் அறிவிப்பு, அவரது தென்கிழக்காசியக் கொள்கை தோல்வியடைந்ததையும், பெரிதாக எந்த பயனும் இல்லாமல் உடன்பட வேண்டிய சூழலுக்கு அவர் தள்ளப்பட்டதையுமே குறிப்பிட்டுக் காட்டுகிறது. திரு. டிரம்ப் தன்னை ஒரு  மிகச்சிறந்த மத்யஸ்தராக வெளிக்காட்டிக் கொள்ளும்போதும், படைகளை ஒருதலைபட்சமாக திரும்பப் பெறுவதற்குப் பதிலாக அவருக்கு என்ன கிடைத்தது என்பது தெளிவாகவில்லை.

கடந்த சில மாதங்களாக, ஆஃப்கானிஸ்தானில் வெற்றியின் பிரகடனத்தைச் செய்துவிட்டு, அங்கிருந்து படைகளைத் திரும்பப்பெற டிரம்ப் நிர்வாகம் முனைப்புடனும் அவசரத்திலும் இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.  இந்தப் பணியின் பொறுப்புகளை அமெரிக்க அதிபர், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் முன்னாள் அமெரிக்கத் தூதர் ஸால்மே கலீல்சாதிடம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஒப்படைத்தார். தாலிபானை பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைக்க அவருக்கு டிரம்ப் ஆறு மாதக் காலம் அவகாசமும் அளித்தார். ஆனால், அந்த கால அளவு வரை கூட திரு. டிரம்ப் காத்திருக்கத் தயாராக இல்லை என்பது தற்போது வந்துள்ள அறிவிப்பின் மூலம் தெளிவாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தெற்காசியாவை ஒரு கடினமான சூழலில் நிறுத்தியுள்ளது. தாலிபானுடன் ஈடுபடும் விஷயத்தில் இந்தியா எப்போதுமே இசைவைக் காட்டியதில்லை. எனினும், ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தில் தாலிபானிற்கு ஒரு முக்கிய பங்கு வேண்டும் என்பது பாகிஸ்தானின் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது. தாலிபானிற்கு அரசாங்கத்தில் பங்கு கிடைத்தால், இதன் மூலம் ஆஃப்கானிஸ்தானில் பாகிஸ்தானிற்கு ஒரு அதிகாரப்பூர்வ நிலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவும் தனது பெல்ட் மற்றும் சாலைத் திட்டத்தை ஊக்குவிக்க, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது. ரஷ்யாவும், பாகிஸ்தானின் செல்வாக்கு மூலம் தாலிபானை சென்றடைந்து, அதன் மூலம் தன் பகுதிகளில் அதிகரித்துவரும் தேஷ் எனப்படும் ஐ.எஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழைகிறது.

அமெரிக்கப் படைகள் திரும்பச் சென்றுவிட்டால், ஆஃப்கானிஸ்தானில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்களுக்கான பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதை சமாளிக்க, முன்னாள் வடக்குக் கூட்டணி மற்றும் அதைப் போன்ற மற்ற அமைப்புகள் உட்பட செல்வாக்கு மிகுந்த உள்ளூர் அமைப்புகளுடன் மேலும் துடிப்பான ஈடுபாட்டுடன் செயல்பட்டு, இந்தியா அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும் நம் நாட்டவரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

அமெரிக்காவின் இந்த முடிவு ஒத்திசைவுள்ள நோக்கங்களைக் கொண்டுள்ள பாகிஸ்தானிற்கும் தாலிபானிற்கும் ஒரு பெரிய உந்துதலாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களில், ஆஃப்கானின் பல பிரதேசங்களில் தாலிபான் தன்னுடைய ஆதிக்கத்தை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு, காபுல் அரசாங்கத்திற்கு சவால் விட்டு, ஆஃப்கான் மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது பயங்கரமாக தாக்குதல்களை நடத்த தாலிபானிற்கு அதிக நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும்.

அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பிப் போவது உணர்வுப்பூர்வமான ஒரு தோல்வியாகவே காணப்படும். மேலும், இந்தியாவிற்கு எதிரான தாலிபான் மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்களின் பயங்கரவாதச் செயல்களுக்கு உடந்தையாக இருக்க பாகிஸ்தானிற்கு மேலும் துணிவு கிடைத்துவிடும். ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் இந்த முடிவை வரவேற்கும். ஏனெனில், அமெரிக்கப் படைகள் திரும்பப் போவதால் ஆஃப்கானிஸ்தானில் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை பயன்படுத்தி, இந்நாடுகள், குறிப்பாக, சீனா, தங்களுடைய செல்வாக்கை அங்கு அதிகரித்துக்கொள்ள இதன் மூலம் நல்ல வாய்ப்புக் கிடைக்கும். அமெரிக்காவின் இந்த அறிவிப்பை, துணிவுடன் எதிர்கொண்டுள்ள அதிபர் அஷ்ரஃப் கானி தலைமையிலான காபுல் அரசாங்கம், ‘ஆஃப்கான் படைகளுக்கு பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கும் சில ஆயிரம் வெளிநாட்டு வீரர்களும் ஆலோசகர்களும்’ திரும்பச் செல்வதால் ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறியுள்ளது.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பும் செய்தியும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிசின் ராஜினாமா பற்றிய செய்தியும் ஒரே நேரத்தில் வந்திருப்பது, அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கிடையில் ஆழ்ந்த திகைப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், தார்மீக முறைப்படியும் இது ஒரு படுவீழ்ச்சியாகவே பார்க்கப்படும். இதன் மூலம், அமெரிக்கத் தலைமை மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த விஷயங்களில் பாதகமான நீண்ட காலத் தாக்கங்களும்  ஏற்படலாம்.