ரோஹிங்யா அகதிகளுக்காக பங்களாதேஷிற்கு இந்தியா வழங்கும் நிவாரணங்கள்

பத்திரிக்கையாளர் திபாங்கர் சக்ரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.

பங்களாதேஷ் தற்பொழுது தேர்தல் பரபரப்பில் தீவிரமாக உள்ள நிலையில்,  ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. “ஜதியோ சங்சத்” என்று அழைக்கப்படும் 350 உறுப்பினர்கள் கொண்ட அந்நாட்டின் தேசிய சட்டசபைக்கு, வருகிற 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ரோஹிங்யா அகதிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் பங்களாதேஷ் உடன் இருக்கும் உறவுகளை இந்தியா வலுப்படுத்த விரும்புகின்றது.
ரோஹிங்யா அகதிகளுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்குவதன் மூலம் பங்களாதேஷிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது.  பங்களாதேஷ் மற்றும் மியான்மருக்கு இடையே கையெழுத்தான  ஒப்பந்தத்தின் படி அகதிகளை அவர்களது தாய் நாடான மியான்மருக்கே திருப்பி அனுப்புவதற்கான இராஜ்ஜிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் பணியை நடைமுறைப்படுத்துவது கடினமாக உள்ளது.
2017 ஆம் வருடம் இந்த மனிதாபிமான பிரச்சனை உச்சத்தில் இருக்கும் பொழுது, இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதற்கு இந்தியா, முதல் நாடாக பங்களாதேஷிற்கு நிவாரண உதவியுடன் உதவிக்கரம் நீட்டியது. அப்பொழுது முதல் இதுவரை இந்தியா நான்கு பகுதிகளாக நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
இரண்டாவது பகுதியாக 373 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை 2018 ஆம் வருடம் மே மாதம் டாக்காவிடம் இந்தியா ஒப்படைத்தது, அதில் 104 மெட்ரிக் டன் பால் பவுடர் ,102 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள், 61 மெட்ரிக் டன் குழந்தைகளுக்கான உணவுகள், ஐம்பதாயிரம் காலணிகள், மற்றும் அதே அளவிலான ரெயின் கோட் போன்றவை வழங்கப்பட்டது.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் மூன்றாவது பகுதியாக, இந்தியா, 11 லட்சம் லிட்டர் சிறந்த கெரசின் எண்ணெய் மற்றும் பல எரித்திரி கொண்ட 20000 கெரசின் அடுப்புகளை வழங்கியது. டிசம்பர் 24ஆம் தேதி இந்தியத் தூதரகம், பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு நான்காவது பகுதியாக நிவாரணப் பொருட்களை வழங்கியது, அதில் ,குளிர் காலத்தைக் கருத்தில்கொண்டு , காக்ஸ்  சந்தையில் வசிக்கும் ரோஹிங்யா அகதிகளுக்காக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் போர்வைகள் ,மற்றும் பெண்கள் அணிவதற்கான இரண்டு லட்சம் கம்பளி ஸ்வெட்டர்கள் வழங்கப்பட்டன.  இதைத் தவிர 500 சூரிய ஒளி விளக்குகளும் அகதிகள் முகாம்களுக்காக வழங்கப்பட்டது.
ரோஹிங்யா அகதிகள் அந்த நாட்டில் தங்கி இருப்பதால் உள்ளூர் பங்களாதேஷ் மக்களுக்கிடையே, சீற்றம் அதிகரித்து வருகின்றன என்ற தகவல் வந்துள்ளது. தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மொபைல் சாதனங்கள் போன்ற சில பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன என்று சீற்றம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, புதுதில்லி ,முதல்முறையாகத் தனது நான்காவது பகுதி நிவாரணப் பொருட்களில் உள்ளூர் மக்களுக்காகவும் சில பொருட்களை வழங்கியது.
ரோஹிங்யா அகதிகளுக்காக நிவாரண உதவி வழங்கும் இந்தியாவின் முயற்சிக்கு பங்களாதேஷ் தனது பாராட்டைத் தெரிவித்தது. அகதிகளில் சிலர் ஏ ஆர் எஸ் ஏ , என்ற போராளிக் குழுவுடன் தொடர்புடையதாகவும், மற்றும் போராளிக் குழுவில் சேர்ப்பதற்காக அவர்கள் இலக்காக்கப்படுவார்கள் என்ற காரணத்தினாலும், அவர்களைத் தங்கள் நாட்டிற்குத் திருப்பி அழைத்துக் கொள்ள, மியான்மருக்கு இந்தியா அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, ஷேக் ஹசீனா அவர்களின் அரசாங்கம் விரும்புகிறது.
பங்களாதேஷ் அரசாங்கத்தின் இந்தக் கவலையைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே அவர்கள், ரோஹிங்யா அகதிகளைத் தங்கள் நாட்டிற்குத் திரும்பி அழைத்துக் கொள்ள பங்களாதேஷ் மற்றும் மியான்மருக்கும் இடையே ஏற்பட்ட இரு பக்கப் புரிதலை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கோடிட்டுக் காட்டினார்.
இந்த இரு பக்கப் புரிதல் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் மற்றும் இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு விரைவில் செல்ல வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்று இந்தியா நம்புகிறது.
ரோஹிங்கியா அகதிகள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வது என்பதை மேலும் எளிதாக்க, ரக்கைன் மாகாண முன்னேற்றத் திட்டத்தில்  2017 ஆம் வருடம் மியான்மர் அரசாங்கத்துடன் இந்தியா கையெழுத்திட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ரக்கைன் மாகாணத்தில் இடம் பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தர மியான்மருக்கு இந்தியா உதவுகிறது. இந்த இடத்தில் தான் போன வருடம் ரோஹிங்கியா போராளிகள் மற்றும் மியான்மர் பாதுகாப்புப் படையினருக்கு இடையே வன்முறைத் தாக்குதல் நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் 12 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் சில ரோஹிங்கியா மக்கள் தங்களது உயிர்களை இழந்தனர். இதன் காரணமாகச் சட்டவிரோதமாக ரோஹிங்யா மக்கள் அண்டை நாடான பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தனர். அப்பொழுது முதல் இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று புதுதில்லி அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் ,தனது புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் உள்ளதால், ரோஹிங்யா அகதிகளைத் திருப்பி அனுப்ப விரும்புகிறது. அமைதியான நீதி மற்றும் கண்ணியம் அனைவருக்கும் கிடைக்கும் படி, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு இது சரியான தருணம் ஆகும்.