மேல் நோக்கிச்  செல்லும் இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்

நிவேதிதா முகர்ஜி, பத்திரிக்கையாளர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார்

இந்தியா-ஐரோப்பா இடையிலான உறவுமுறை, பன்மைவாத, ஜனநாயக ரீதியான நன் மதிப்புகளின் ஒருங்கிணைப்பால் நிலைத்திருக்கின்றது. இரு தரப்பிலும் உள்ள துடிப்புமிக்க மக்கள் தொகையின் வளர்ந்து வரும் பொருளாதாரக் கூட்டு முயற்சிகள், உலகின் அதிக அளவு ஒத்திசைவுள்ள, நீடித்த கூட்டாளித்துவத்தில் ஒன்றாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கின்றது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடந்த முதல் நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கலந்துகொண்டது இதற்கு ஒரு சான்றாக அமைந்தது. நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாண்ட் ஆகிய நாடுகளின் தலைவர்களை திரு. மோதி சந்தித்தார். இவ்வாண்டு மார்ச் மாதம் பிரஞ்சு அதிபர் எமானுவல் மாக்ரோன் இந்தியாவிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மெற்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட ஒரு ஆவணம், இரு தரப்பிற்கு இடையில் உறவுகளை மேம்படுத்துவது குறித்த வழிப்பாதையை கோடிட்டுக் காட்டுகின்றது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடலில் ராணுவங்களுக்கு இடையிலான கூட்டுறவு ஆகியத் துறைகளில் கூட்டுறவு மேம்படுத்தப்படும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைப் பிரகடனம் இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகின்றது.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் கணித்தது போல இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் நிலையாகவும் உள்ளது. மேலும் ’வர்த்தகம் செய்ய ஏதுவான நாடுகளின் பட்டியலில்’ இந்தியாவின் நிலை முன்னேறியுள்ளது. இவை அனைத்தும் ஏற்கனவே ஐரோப்பிய வர்த்தகங்களை இந்தியாவை நோக்கிப் பார்க்க வைத்துள்ளது. அதே நேரத்தில், இந்திய வர்த்தகம், ஐரோப்பாவில் ஒரு முக்கிய முதலீட்டாளராக உருவெடுத்து வருகிறது. 2017-18 ஆம் ஆண்டில், 5362 கோடி டாலர் அதாவது 17.64 சதவிகித பங்குடைய ஏற்றுமதிகள் மற்றும் 4787 கோடி டாலர், அதாவது 10.28 சதவிகிதம் என்ற அளவுகளுடன், இங்கிலாந்துடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாக உள்ளது. நீண்ட கால கூட்டாளிகள் என்ற முறையில், 2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையிலான செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேம்படுத்த இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உழைத்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ப்ருசெல்சில் நடந்த 13-ஆவது ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சிமாநாடு, ஒரு கண்டத்தையும் ஒரு துணைக்கண்டனத்தையும் பகிரப்பட்ட செழுமை என்ற பொதுத் தேடலை நோக்கி இணைப்பதில் ஒரு முக்கியத் தளமாக திகழ்ந்துள்ளது.

2025 ஆம் ஆண்டிற்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக வளரும் நோக்கைக் கொண்டுள்ள ஒரு அறிவுசார் சமுதாயத்தை நோக்கி இந்தியா முன்னேறிக்கொண்டிருகின்றது. வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரியாற்றல், சுற்றுச்சூழல் மற்றும் ஐ.சி.டி எனப்படும் தகவல் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொலைத்தொடர்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியத் துறைகளில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வலுவான பொருளாதாரக் கூட்டுறவிற்கு இது பெரும் உதவியாக இருக்கும். புதிய ஐ.சி.டி சேவைகள் மற்றும் உள் இணைப்புகள், ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் புதுமுறைக்காணலை ஊக்குவிப்பது, உள் இணைப்புப் பாதுகாப்பு, அலைக்கற்றை மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட திறன் வளர்ச்சி ஆகியத் துறைகளில் வளர்ச்சிக்கான கூட்டுறவிற்கு இரு தரப்பிற்கும் இடையில் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், இந்தியாவின் தொலைத்தொடர்பு தரநிலை வளர்ச்சிக்கான நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இடையில் உலகளாவிய தரநிலை மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவும் ஊக்கப்படுத்தபடலாம். இவற்றின் மூலம் பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சியில் சக்திவாய்ந்த உந்துதல் கிடைப்பதோடு உலக சவால்களுக்கும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவுடனான ஐரோப்பாவின் வளர்ச்சிக் கூட்டுறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கல்வி, சுகாதாரம், நீர் மற்றும் சுத்திகரிப்பு ஆகியத் துறகளில் வெற்றிகரமாக பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் என்ற முக்கியத் துறையில் இணைந்து உழைக்க இரு தரப்பினரும் முயற்சி எடுத்து வருகின்றன. தூய்மையான எரியாற்றல், நீட்டித்த் வளர்ச்சி, பருவநிலை சார்ந்த பணிகள் ஆகியத் துறைகளில் வலுவான கூட்டுறவிற்கான தேவையை இரு தரப்பும் அடையாளம் கண்டுள்ளன.

இந்த மாதத் துவக்கத்தில் முதல் ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா போட்டி வாரம் புது தில்லியில் நடந்தது. போட்டிக் கொள்கை மற்றும் சட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையில் செயலுத்திக் கூட்டாளித்துவத்தை ஆழப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இது கோடிட்டிக்காட்டியது. வேளான்-ரசாயனத் துறை மற்றும் அது சார்ந்து ஆன்லைன் தளங்களில் இருக்கும் சந்தைகளில் சேர்க்கை உட்பட, பல விதமான தலைப்புகளில் வழக்கு கையாளும் முறைகள் மற்றும் அமலாக்கம் தொடர்பான நல்ல நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது அறியப்பட்டது.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான அதிகத் துடிப்புடன் கூடிய உறவுக்கான வழிப்பாதையில் பல வலுவான சவால்களும் உள்ளன. பல முறை தள்ளிப்போடப்பட்ட பி.டி.ஐ.ஏ, அதாவது, பரந்த அடிப்படையிலான வர்த்தக் மற்றும் முதலீட்டு ஒப்பந்தமான தடையயற்ற வர்த்தக ஒப்பந்தம் இதில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டு இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இதை துவக்கின. பொருட்கள் மற்றும் சேவைகளில் அதிகப்படியான வர்த்தகம் செய்யவும் முதலீடு செய்யவும் வழி வகை செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. எனினும் இதில் சிறிய அளவு முன்னேற்றமே காணப்பட்டுள்ளது. உறுதியான உடன்படிக்கையை எட்ட, ‘ப்ரெக்சிட்’-ல் உள்ள நிலையற்றத் தன்மை தடையாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ப்ரெக்சிட்டிற்குப் பிறகான சூழலில், இந்த உடன்படிக்கையில் சில மாற்றங்களை செய்ய நினைக்கும். வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இரு தரப்பின் முக்கிய நோக்கங்கங்களை நிறைவேற்றும் அளவு போதுமான லட்சியத்துடன் இருக்கும் ஒரு ‘சமமான, லட்சியமுள்ள, இருதரப்பிற்கும் லாபகரமான’ உடன்படிக்கையை எட்ட ஐரோப்பிய ஒன்றியம் விரும்பும். தரவுகள் சார்ந்த விஷயத்தில் தெளிவு பெற, இந்தியா, ஐரோப்பிய தனியுரிமைக் கொள்கை சட்டங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது.

இந்தத் தடைகள் எல்லாம் நீக்கப்பட்டால், ஐரோப்பாவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய, பல விஷயங்களுக்குத் தீர்வு காணவல்ல, உறுதியான ஒன்றாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.