விண்வெளியில் இந்த ஆண்டு இந்தியாவின் சாதனை

பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி

இந்திய அரசின் விண்வெளி ஆய்வில், 2018 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கருதப்படுகிறது. 1960 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த நிதி ஆதாரத்துடன் உருவாக்கப்பட்ட இஸ்ரோ நிறுவனம், 2018 ஆம் ஆண்டில் 108 செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்திச் சாதனை படைத்துள்ளது. தொலையுணர்வு புவிக் கண்காணிப்புச் செயற்கைக் கோள் கார்டோசார் – 2, தொலை தொடர்பு செயற்கைக் கோள் ஜி சாட் 6A, எட்டு வழிநடத்தும் செயற்கைக் கோள்கள், ஜி சாட் 29, புவிக் கண்காணிப்புக்கான ஹைசிஸ், ஜி சாட் 11 எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்து இஸ்ரோ 2018 ஆம் ஆண்டை விண்வெளி ஆய்வில் மறக்க முடியாத ஆண்டாக மாற்றியுள்ளது எனக் கூறலாம்.

ஆந்திர மாநிலத்திலுள்ள சதீஷ் தவான் விண்வெள் மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியன்று ஜி சாட் 7A  செயற்கைக் கோளை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தனியார் நிறுவனங்களையும்   செயற்கைக் கோள் கட்டுமானத்தில் ஈடுபடுத்தியது இஸ்ரோ அமைப்பு. யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையமும் தனியார் நிறுவனங்களும் இணைந்து 2023 ஆம் ஆண்டிற்குள் 27 செயற்கைக் கோள்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தொலைதொடர்புக்காக ஏழு செயற்கைக் கோள்களும் புவியின் கண்காணிப்பிற்காக 12 செயற்கைக் கோள்களும் வழி நடத்தும் செயற்கைக் கோள்கள் ஐந்தும் அறிவியல் தொழில்நுட்பத்திற்காக மூன்று செயற்கைக் கோள்களும் வடிவமைக்கப்படவுள்ளன.

இது வரையில் இஸ்ரோ அமைப்பு 269 வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சாதனையையும் படைத்துள்ளது. ககன்யான் திட்டத்தை நிறைவேற்றவும் லித்தியம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் இந்திய தகவல் செயற்கைக் கோள் அமைப்பைப் பலப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது.

ராணுவத் தொலைதொடர்பை வலுப்படுத்தும் வகையில், ஜிசாட் 7 A செயற்கைக் கோளை டிசம்பர் மாதத்தில் செலுத்தி இந்திய விமானப்படையை வலுமிக்கதாக மாற்றியுள்ளது இஸ்ரோ அமைப்பு.

ரேடார் நிலையங்கள், கட்டுப்பாட்டு நிலையங்கள், முன்னெச்சரிக்கை அறைகள், போர் விமானங்கள் இவற்றின் தொடர்புகளை உடனடியாக நிர்வகிப்பதில் ஜி சாட் 7A  சூத்திரதாரியாக அமையும் என்றால் அது மிகையாகாது. ஆளில்லா விமானங்களின்  செயல்பாட்டை ஒருங்கிணைப்பதில் ஜி சாட் 7A செயற்கைக் கோள் வெகுவாகத் துணை புரியும்.

புவிக் கண்காணிப்புச் செயற்கைக் கோள் கார்டோ சாட் வகைகள் இந்தியக் கடற்படையின் செயல்பாட்டிற்கும் விமானப் படைக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இஸ்ரோவின் மற்றுமொரு சாதனையாகும்.

2018 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு விஞ்ஞானிகளை அனுப்பும் திட்டத்திற்கும் உரிய முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தகவல் செயற்கைக் கோள் அமைப்பை புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தி செயற்கைக் கோளுக்கு மற்றுமொரு செயற்கைக்கோளுடனான தொடர்பை பலப்படுத்தி மற்றுமொரு சாதனையையும் விரைவில் நிறைவேற்றும் என இஸ்ரோ தலைவர் முனைவர் சிவன் அவர்கள் அறிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நாட்டின் 75 ஆவது சுதந்தர தினம் கொண்டாடப்படும் வேளையில் இந்தியக் கொடியுடன் இந்திய விஞ்ஞானி ஒருவர் விண்வெளிக்குப் பயணம் செய்வார் எனப் பிரதமர் மோதி அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் சந்திரயான் 2 என்ற கலமும் இந்தியத் தகவல் செயற்கைக் கோள் அமைப்பின் ஒரு செயற்கைக் கோளும் வரும் புத்தாண்டில் அனுப்பப்படவுள்ளன.

ஜி எஸ் எல் வி –III  செலுத்து வாகனத்தின் மூலமாக மூன்று இந்திய விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் வருகிற 2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படவுள்ளது குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட்டுக் கொள்ளலாம்.