இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா – பூட்டான்

 

இந்தியப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முனைவர் நிஹார் ஆர் நாயக் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் சத்யா அசோகன்.

பிரதமர் திரு நரேந்திர மோதியின் அழைப்பிற்கிணங்க, பூட்டானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் லோட்டே ஷெரிங்க் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பூட்டானின் வெளியுறவுத் துறை அமைச்சர், பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் அவருடன் வந்துள்ளனர். கடந்த மாதம் பதவியேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாகும் இது. இந்த ஆண்டில் பூட்டான் பிரதமர் இந்தியாவிற்கு வருகை புரிவது இது மூன்றாவது முறையாகும். இரு ஆண்டுகளும் ராஜதந்திர உறவுகள் துவங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வருகை நிகழ்ந்துள்ளது. அக்டோபர் 2018 –ல் நடைபெற்ற பூட்டானின் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலில் டாக்டர் ஷெரிங்கின் ட்ரக்  ந்யரூப் ஷோக்பா கட்சி வெற்றி பெற்றதற்காக முதன்முதலில் பாராட்டு தெரிவித்த உலகத் தலைவர் பிரதமர் மோதி அவர்களே ஆவார். முன்னதாக, திரு மோதி பதவியேற்ற பின் ‘அண்டை நாடுகள் முதன்மை’ கொள்கையின் பகுதியாக திரு மோதி அவர்கள் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்குத் தேர்வு செய்த நாடு பூட்டான் ஆகும்.

இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையில், 1968 ஆம் ஆண்டு, ராஜதந்திர உறவுகள் தொடங்கிய நாளிலிருந்து தெற்காசியாவின் மிகச் சிறந்த வெற்றிகரமான அண்டை நாடுகளாக இருந்து வரும் இந்தியா – பூட்டான் உறவுகளின் வெற்றிக்குக் காரணம் பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் முதிர்ச்சி ஆகியவையாகும். 1949-ல் கையெழுத்தாகி, பின்னர் பிப்ரவரி 2007-ல் மறு ஆய்வு செய்து மேம்படுத்தப்பட்ட இந்தியா பூட்டான் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தமானது இந்த உறவைத் தாங்கி வரும் வலுவான தூணாக விளங்கி வருகிறது. இந்த ஒப்பந்தமானது திறந்த எல்லை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கிடையே ஆழமான தொடர்புகள் போன்ற சிறப்பு ஏற்பாடுகளை எளிதாக்கியது. எத்தனையோ விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் வேற்றுமைகளும் ஒத்திசைவின்மையும் இருந்தாலும் கூட, இரு நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதாக உணர்வதோடு அல்லாமல், பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், வட்டாரத்தில்  அமைதி போன்றவற்றை நோக்கிய தங்கள் பயணத்தில் சமமான கூட்டாளிகளாக ஒன்றையொன்று ஏற்றுக் கொண்டுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையேயான வலுவான சிறப்பான உறவை அடிக்கடி நிகழும் உயர் மட்ட வருகைகள் மேலும் வலுப்படுத்துகின்றன. திம்புவில் புதிய அரசு அமைந்த உடனே, இந்தியாவின் வெளியுறவுச் செயலர் திரு விஜய் கோகலே பூட்டானுக்குப் பயணம் மேற்கொண்டு, புதிய அரசியல் தலைமையுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். பூட்டானுடனான உறவுகளின் சிறப்புத் தன்மையை மனதில் கொண்டு இந்த வருகைக்க் இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களையும் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடுவையும் சந்தித்த டாக்டர் ஷெரிங்க் அவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துணை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு மின் துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் திரு ராஜ்குமார் சிங் ஆகியோர் பூட்டான் பிரதமரை மரியாதை நிமித்தம் சந்தித்து உரையாடினர். இந்தியா, பூட்டானின் மிகப்பெரிய வர்த்தகக்  கூட்டாளியும் முதலீட்டாளரும் ஆகும். பூட்டானின் மொத்த இறக்குமதியில் 82% இந்தியாவுடையதாகும். 1416 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மூன்று நீர்மின் உற்பத்தித் திட்டங்களை இந்தியா உருவாக்கிக் கொடுத்துள்ளது. அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் நான்கில் மூன்று பகுதி இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2020 ஆம் ஆண்டிற்குள் 10,000 மெகாவாட் மின்சாரத்தை பூட்டான் உற்பத்தி செய்வதற்கு  உதவுவதாக இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. 1961 ஆம் ஆண்டு முதலே, பூட்டானின் வளர்ச்சித் திட்டத்திற்கு இந்தியா உதவி வருகிறது. 2013- 18 ஆம் ஆண்டிற்கான பூட்டானின் 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின்  மொத்த மதிப்பீடான 21,300 கோடி ரூபாயில் இந்தியாவின் உதவிப் பங்கு 5000 கோடி ரூபாய்களாகும். நீர்வளம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து, பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, எல்லைப்புற மேலாண்மை போன்ற பல துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே ஏற்கெனவே பல இரு தரப்பு நிறுவன ஏற்பாடுகள் இருந்து வருகின்றன.

பொன் விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் ஆண்டு முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இரு நாடுகளுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் துவங்கியதைக் கொண்டாடும் துவக்க விழாவில் திம்புவில், பாரம்பரிய நடனங்கள், மற்றும் பாடல்களும்  நடைபெற்றன. இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இந்த தருணத்தைக் கொண்டாடும் வகையில் காணொளி மூலமாகச் சிறப்புச் சின்னம் ஒன்றைத் திறந்து வைத்தனர்.

இருந்து வரும் இரு தரப்பு உறவுகளை டாக்டர் ஷெரிங்கின் வருகை மேலும் வலுப்படுத்த உதவும். பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்த இரு நாட்டுப் பிரதமர்களும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிறப்பான உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பு, நீர்மின்சாரம், ஆற்றல், பருவநிலை மாற்றம், உள்துறைக் கட்டுமானம், பாதுகாப்பு மற்றும் செயல்தந்திர விவகாரங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும் இரு நாட்டுப் பிரதமர்களும் விரிவாகப் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் பூட்டானின் 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியா, பொருளாதார, தொழில்நுட்ப உதவி அளிப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினர்.