2018 –ல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சாதனைகள்

 

ஐ நா- வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அஷோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி

2018 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் 58 வெளிநாட்டுப் பயணங்களை  மேற்கொண்டதும்  44 உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தகுந்தவை. இவற்றில் பெரும்பான்மையானவை ஆசியக் கண்டம் குறித்து அதிக கவனம் செலுத்துபவையாகவே இருந்தன. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆசியாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக்காட்டுகிறது.

தெற்காசியாவில் தொடர்புகளை வலுப்படுத்தும் திட்டங்களை  நோக்கினால், பரஸ்பரப் பயன்பாடு, மக்களிடையேயான தொடர்புகள், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை உருவாக்கும் இந்தியாவின் நோக்கம் வெளிப்படும். மே மாதம், அருண் III நீர் மின் திட்டம்,  நேபாள ராமாயண வளையம் ஆகியவை தொடங்கப்பட்டன. செப்டம்பரில், பங்களாதேஷுடனான மூன்று ரயில் மற்றும் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கான கடல்வழிப் பாதையை அமைக்கும் ஈரானின் சபாஹார் துறைமுகத்தின் பொறுப்புக்களை இந்தியா போர்ட்ஸ் க்ளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் டிசம்பரில் ஏற்றுக்கொண்டது.

மாலத்தீவுகள் மற்றும் பூட்டான் நாடுகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தமது முதல் வெளி நாட்டுப் பயணமாக இந்தியா வந்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு எதிர்வினையாக இதைக் கொள்ளலாம்.

ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த ஷாங்க்ரி லா பேச்சுவார்த்தையில் இந்தோ – பசிபிக் பிராந்தியம் குறித்த இந்தியாவின் கொள்கை குறித்துப் பிரதமர்  நரேந்திர மோதி அவர்கள் ஆற்றிய உரை மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றது. ஆப்பிரிக்கக் கடல் பகுதியிலிருந்து அமெரிக்கக் கடல் பகுதி வரை விரிந்திருக்கும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் ஆசியான் நாடுகளின் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. அக்டோபரில் நடந்த இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில், ஆப்பிரிக்காவில் தரக்கட்டமைப்புக்கான விரிவாக்கப்பட்ட ஜப்பானின் கூட்டாளித்துவத்தின் மூலம் இந்தக் கொள்கையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஜூலை மாதம் உகாண்டா நாட்டுப் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி அவர்கள் உரையாற்றினார். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையில், பத்து கொள்கைகளின் அடிப்படையில் ஆப்பிரிக்காவுடனான உறவை மேற்கொள்வதற்கான புதிய வலியுறுத்தல் வெளிப்படுத்தப்பட்டது. மோதலில்லாத ஒத்துழைப்பின் மூலம் இரு தரப்பு ஒத்துழைப்பு சாத்தியமாகும் என்ற கருத்துடன் இந்தியா, ஆப்பிரிக்காவுக்கு வளர்ச்சிக்கான நிதியுதவியை வழங்க முன்வந்தது. ஆப்பிரிக்காவின் மனித வள மேம்பாட்டுப் பயிற்சியை வேகமாக மேம்படுத்தவும் விரிவாக்கவும் கடன் உதவி,  தொழில் நுட்ப உதவி  ஆகியவை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய சிந்தனைக் கொள்கை மற்றும் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை மூலமாக மிகவும் குறிப்பிடத்தக்க பயன்களை அளித்துள்ளன. மாறிவரும் சூழலை உடைய வளைகுடா பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவிற்கான எண்ணெய் ஏற்றுமதி விலையில் மிகச் சிறப்பான பயன்களை ஈட்டித்தந்துள்ளன. வளைகுடா ஒத்துழைப்புக் கூட்டமைப்பு நாடுகளும் ஈரானும் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் பெரும்பங்காற்றி வருகின்றன. இப்பிராந்தியத்தில் வாழும் 80 லட்சம் இந்தியர்கள் அந்த நாடுகளின் பொருளாதார நிலைத் தன்மைக்கும் வளமைக்கும் தொடர்ந்து பங்காற்றி வருகின்றனர்.                                            

ஏப்ரல் மாதம் வுஹானில் சீனாவுடனும் மே மாதம் சோச்சியில் ரஷ்யாவுடனும் இந்தியா மேற்கொண்ட முறை சாரா உச்சி மாநாடுகள் என்னும் புதிய முன்முயற்சிகள் சிறந்த பயன்களை ஈட்டியுள்ளன. உள்நாட்டு, பிராந்திய மற்றும் உலக விவகாரங்கள் குறித்த செயல் உத்திப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்த நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றங்களை இந்த மாநாடுகள் எளிமைப்படுத்தியுள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 2+2 பேச்சு வார்த்தை இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களிடையே செப்டம்பரில் நடந்தது. இதில் இரு நாடுகளுக்கிடையிலான சர்வதேச செயலுத்தி கூட்டாளித்துவம் வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச சூரியக் கூட்டமைப்பின் பொதுச் சபை மார்ச் மாதம் பிரான்சுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஐ நா சார்ந்த அரசுகளுக்கிடையிலான கூட்டமைப்பின் தலைமைச் செயலகம் ஒன்று இந்தியாவில் முதன்முறையாகச் செயல்படுகிறது என்றால் அது இந்த சர்வதேச சூரியக் கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. உலக அரங்கில்  இந்தியா சுற்றுச்சூழலில் துணிச்சலான தலைமையை வெளிப்படுத்தியதற்காக  செப்டம்பரில் புவிக் காப்பாளர் விருது ஐ நா-வால் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

முத்தரப்பு மற்றும் பலதரப்புக் கூட்டமைப்புகள் உட்பட, பல கட்டமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் திறம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவின் சர்வதேச ராஜதந்திரம் கவனம் செலுத்துகிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரின் அயல்நாட்டுப் பயணங்கள், ஜனவரியில் உலகப் பொருளாதார மன்றம், ஏப்ரலில் லண்டன் காமன்வெல்த் உச்சி மாநாடு மற்றும் இந்தியா – நார்டிக் உச்சி மாநாடு, ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜூலை மாதம் பிரிக்ஸ் உச்சி மாநாடு, ஆகஸ்ட் மாதம் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு, நவம்பரில் ஆசியான் –இந்தியா மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடுகள், டிசம்பரில் ஜி-20 உச்சி மாநாடு ஆகியவற்றில் பிரதமரின் பங்கெடுப்பு இவற்றால், பல நாடுகளுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன.

சர்வதேச ஒத்துழைப்பின் அடிநாதமாக விளங்கும் ’வசுதைவ குடும்பகம்’ என்னும்  இந்தியாவின் கலாச்சார மதிப்பீடு இதற்கு ஆற்றிவரும் பங்களிப்பு குறித்தும் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்தும் 124 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களால் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டது. மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், காந்தியடிகளின் விருப்பமான வைஷ்ணவ ஜன தோ என்ற பாடலை அந்தக் கலைஞர்கள் சர்வதேச அகிம்சை தினத்தன்று மிக அருமையாக உலக அளவிலான பார்வையாளர்கள் முன் படைத்தனர்.