பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வி  –  எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றிய ஒரு பார்வை

(ஐரோப்பிய விவகாரங்கள் செலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா ஷர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.)

தெரசா மே அவர்களின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டதால், பிரெக்ஸிட் விஷயத்தில் நிச்சயமற்ற நிலை மேலும் கூடியுள்ளது. இதனோடு, தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரீமி கோர்பென் அவர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்வைத்ததால், கன்சர்வேட்டிவ் அரசாங்கத்திற்கு நெருக்கடி அதிகரித்தது. இந்தத் தீர்மானத்திற்கு, ஸ்காட்ஸ் தேசிய கட்சி, தாராளவாத ஜனநாயக கட்சி, பிளைடு சைம்ரு , மற்றும் கிரீன் கட்சி போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன. போன மாதம் நடக்கவிருந்த இந்த வாக்கெடுப்பை இந்த மாதத்திற்கு ஒத்தி வைப்பது என்ற பிரதமர் மே அவர்களின் திட்டம், சந்தேகத்துக்கு இடமின்றி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இருப்பினும், தொழிலாளர் கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானம், மேலவை பொது வாக்கெடுப்பில் 325 க்கு 306 என்ற 19 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டோரிக்கு எதிரானவர்கள் மற்றும் ஜனநாயக ஒன்றிய கட்சியின் பத்து எம்பிக்கள்  பிரிட்டிஷ் பிரதமரை ஆதரித்ததால், அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எப்பொழுது, எவ்வாறு வெளியேறும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. பிரெக்ஸிட் மீது, பாராளுமன்றத்தில் விரிவான கருத்துக்களை, மே அவர்கள் அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் கேட்டறிந்து வருகிறார். இந்த ஒப்பந்தம் தோல்வியடைந்த பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை மே அவர்கள் மேலும் இறுக்கியுள்ளார் என்று தோன்றுகிறது . தெரெஸா மே அவர்கள்  ராஜினாமா செய்வதை மறுத்துவிட்டதால், பிரிட்டனில் தற்போது பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தான் ராஜினாமா செய்வது நாட்டின் நலனுக்குத் தீங்காய் முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், இந்தத் தீர்மானம் குறித்த முடிவால் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டால், மீண்டும் ஒரு பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவு அளிப்பது பற்றி ஆராயப்படும் என்று தொழிலாளர் கட்சி கூறியுள்ளது.

இதனிடையே, பிரெக்ஸிட் ஒப்பந்தம், பிரிட்டன் விலகுவதற்கான மிகச்சிறந்த ஒரே திட்டமாக விளங்குவதாக ஐரோப்பிய யூனியன் ஆணித்தரமாக நம்புகிறது. வாக்கெடுப்பு முடிவுகளால், பிரிட்டன் வெளியேற்றம், தாறுமாறாக நிகழ்வதற்கான அச்சுறுத்தல்  அதிகரித்துள்ளது என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஜீன் க்ளாடு ஜங்கர்  அவர்கள் கூறியுள்ளார். வெளியேற்ற விவகாரம் நிராகரிக்கப்படுவதற்கான  முயற்சிகள் வலுவடையும் என்றும் அவர் கூறினார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் மே அவர்களின் அரசாங்கம் வரலாறு காணாத வகையில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், வருங்காலத்தில்  ஒழுங்கான முறையில் பிரிட்டன் வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிலாளர் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதுபோல், மீண்டும் ஒருமுறை இவ்விஷயத்தில் பொது வாக்கெடுப்பு நடைபெறுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிரிட்டனின் வெளியேற்றம் முழுமையாக நிராகரிக்கப்பட்டால், அது அந்நாட்டின் சமூக, அரசியல் பொருளாதாரத்திற்குப் பெருத்த பின்னடைவை விளைவிக்கும் பிரெக்ஸிட் விவகாரத்தில், நிபந்தனை 50 இல் குறிப்பிடப்பட்ட வெளியேற்றத் தேதியான மார்ச் 29  நீட்டிக்கப்படுவதற்கோ, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து மேலும் சாதகமான ஒப்பந்தம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்வதற்கோ வாய்ப்புக்கள் அதிகம். முதலாவது சாத்தியக்கூறு நிகழ்வதற்கு, பிரெக்ஸிட்டில் தான் முதலில் ஏற்படுத்திய நிலைப்பாட்டில் பிரதமர் மே அவர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டி வரும் எனினும் அதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வாய்ப்பில்லை. ஏனெனில்,  பிரெக்ஸிட் குறித்து  இனி எந்த பேரமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று, ஐரோப்பிய ஒன்றிய அதிபர் ஜங்க்கெர் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதற்கான, சுமுகமான, தீர்க்கமான முடிவு ஏற்படுவது பிரிட்டன் நாடாளுமன்றத் தலைவர்களின் கையில் உள்ளது. இந்த நிச்சயமற்ற சூழலின் மத்தியில், பிரெக்ஸிட் பிரச்சனையில், உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடான பிரிட்டன் எடுக்கும் எந்த ஒரு முடிவும், அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விதமாக இருக்கும்.

இந்தியாவைப் பொருத்தவரை, பிரிட்டிஷ் பொருளாதாரத்துடன் ஸ்திரமான  நிலைப்பாடு உள்ளது. காரணம், பிரிட்டன், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடாகும். நீண்டகாலமாக நடைபெற்று வரும் பிரெக்ஸிட் பிரச்சனைகளினால், பிரிட்டனில் செயல்பட்டு வரும் 800 இந்திய  நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் 1,04,932 பணியாளர்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழல் தொடர்கிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவதற்கு ஒரு துறைமுக நுழைவாயிலாக பிரிட்டன் விளங்குகிறது. பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள், அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவையாகும். லண்டன் முக்கியமான நிதித்துறை மையமாக தொடர்ந்து விளங்குவதை நாடாளுமன்ற விவாதங்கள் தீர்மானிக்கும் என்பதால், அதுபற்றி  இந்தியா கவலை கொண்டுள்ளது.