பெண் குழந்தையை ஊக்குவித்து உயர்த்தும் இந்தியா

(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்பு நிருபர் மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்- ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

நான்கரை ஆண்டு காலம் என்ற மிகக் குறுகிய காலகட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூக ரீதியான பாரபட்சத்திற்கு எதிராக, இந்தியா வெற்றிகரமாகப் போராடி அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றுள்ளது. பெண் குழந்தை நலன்களைக் காக்கும் குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்ட ‘பேட்டி பசாவோ, பேட்டி படாவோ’ திட்டம், குறைந்து கொண்டிருக்கும் குழந்தை பாலின விகிதத்தை சீர் செய்ய ஒரு சரியான திட்டமாக இருந்தது. ஜனவரி 22 ஆம் தேதி, இந்தத் திட்டத்தின் நான்காவது ஆண்டு விழாவை நாடு கொண்டாடியது. வெளிப்படையான சமூக மாற்றங்களும் புள்ளி விவரங்களும் பெண் குழந்தைகளுக்கான உகந்த சூழல் உருவாகிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் மற்றும் பள்ளிகளின் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஆகியவை பற்றிய அறிக்கைகளும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியவையாகும். இந்தத் திட்டம் குறுகிய காலத்திலேயே நாடு முழுவதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டம் ஒரு அரசாங்க முயற்சியாக மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் உள்ள மக்களால் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகவும் இருக்கிறது. பதிவு செய்துகொள்ளும் கருவுற்றிருப்போர் என்ணிக்கையில் முன்னேற்றம், சுகாதார முறையிலான குழந்தைப் பிறப்பு, மேன்மையான சுகாதாரப் பேணல் ஆகியவை இத்திட்டத்தின் ஆக்கப்பூர்வமான விளைவுகளாக வியக்க வைக்கின்றன. அதிக அளவில், பள்ளிகளின் கழிவறைகள் கட்டப்படுவதும் இந்தத் திட்டத்திற்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், கவலைக்கிடமான போக்குகளே வெளிவந்தன. தேசிய குழந்தை பாலின விகிதம் 918 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1961 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் குழந்தை பாலின விகிதம் 976-ஆக இருந்தது. ஆகையால் 2011 ஆம் ஆண்டு 918 என்ற அளவு பெரும் வீழ்ச்சியை சுட்டிக்காட்டியது. ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்கள் அதிர்ச்சிப் போக்குகளை வெளிக்காட்டின. ஹரியானாவில், ஆறு வயது வரையிலான குழந்தைகளில், 1000 ஆண் குழந்தைகளுக்கு 830 பெண் குழந்தைகளே உள்ளனர் என்று கணக்கெடுப்பில் கூறப்பட்டது. பெண் குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் சமூக சீர்கேட்டை எதிர்த்து ஒரு பெரும் மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என சட்டங்களும் பொதுக் கொள்கைகளும் வற்புறுத்தின.

தற்போது ஹரியானாவில் இந்தப் போக்கு மாறிவிட்டதாகத் தெரிகிறது. சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, தற்போது அந்த மாநிலத்தில், 1000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் உள்ளன. ஹரியானாவைப் போலவே ராஜஸ்தானும் 2011 மக்கள்தொகை கனக்கெடுப்பின் போது 888 என்ற குழந்தை பாலின விகிதத்துடன் இருந்தது. தற்போது, இம்மாநிலத்தில், இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் அதிகரித்துள்ள பாலின விகிதங்களைக் காண்பித்துள்ளன.

2015 ஆம் ஆண்டு, ஜனவரி 22 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஹரியானாவின் பானிபத்திலிருந்து பெண் குழந்தைகள் நலத் திட்டமான ‘பேடி பசாவோ, பேடி படாவோ’ திட்டத்தைத் துவக்கி வைத்தார். விரைவிலேயே இந்தத் திட்டத்திற்கு சமூக அங்கீகாரம் கிடைத்தது. பல துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களும் இத்திட்டதிற்கு ஆதரவாகப் பேசினர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, அரசாங்கமும் பல பொது மக்கள் விழிப்புணர்ச்சிப் பிரச்சாரங்களை நடத்தியது. சிவில் சமூகமும் ஆர்வத்துடன் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டது. புதிதாகப் பிறந்துள்ள பெண் குழந்தைகளுடன் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு, அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்வது நூதன வழக்கமானது.

பேட்டி பசாவோ, பேட்டி படாவோ திட்டம் மூன்று அமைச்சகங்களின் ஒருங்கிணைப்போடு செயல்படுகிறது. அவை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையாகும். இது முக்கியக் கொள்கை தலையீடாகவும் இருந்தது. முதலில் இந்தத் திட்டம் 100 மாவட்டங்களில் துவங்கப்பட்டது. பிறகு மேலும் 61 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன. இந்த 161 மாவட்டங்களில் 104 மாவட்டங்களில், குழந்தை பாலின விகிதம் மேன்மையடைந்துள்ளதோடு, பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இத்திட்டம் நாட்டின் 640 மாவட்டங்களுக்கு விரிவடைந்துள்ளது. பல்துறை தலையீடும் பொதுமக்களின் ஆர்வமும், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்துள்ளன.

கூடுதல் ஊக்கங்களின் மூலம், அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு பலம் சேர்த்தது. ‘சுகன்யா சம்ரித்தி யோஜனா’ என்ற மற்றொரு மைல்கல் திட்டத்தின் மூலமாக, பெண் குழந்தைக்குத் தேவையான நிதி பாதுகாப்புக் கட்டமைப்பை அரசு வழங்கியது. இத் திட்டம் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கான உதவியை அளிக்கிறது. இத் திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, வருமான வரி நீக்கப்பட்ட, அதிக வட்டி விகிதத்துடன் கூடிய சேமிப்பு கணக்குகள் வழங்கப்படுகின்றன. பொதுத் துறை வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ, 250 ரூபாய் வைப்பு நிதி மூலம் இந்த சேமிப்பு கணக்கைத் துவக்கலாம். வரிச் சலுகைப் பெற, இந்தக் கணக்கில், ஆண்டொன்றிற்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். 25,980 கோடி ரூபாய் என்ற வைப்புடனும் 1.4 கோடி கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையுடனும் இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய வெற்றிகரமானத் திட்டமாக உருவெடுத்துள்ளது.

இந்த இரு திட்டங்களுக்கும் அரசங்கம் மேலும் நிதி உதவியை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக, கிராமப்புரங்களில், பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாகப் பணியமர்த்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் முயற்சிகள் பெற்றி பெற நாட்டு மக்களாகிய நாமும், நம் கண்களான பெண் குழந்தைகளைப் போற்றி வளர்ப்போம். பெண் குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்!!