பதினைந்தாவது பிரவாசி பாரதீய திவஸ்

மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்.
பதினைந்தாவது பிரவாசி பாரதீய திவஸ் மாநாடு வாரணாசியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வருட மாநாட்டில் மொரீசியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜெகன்நாத் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுடன் உரையாடுவதற்கு இந்த நிகழ்வு வாய்ப்பளித்துள்ளது என்று பிரதமர் மோதி அவர்கள் தனது தொடக்க உரையில் கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்பவர்கள் இந்தியாவின் தூதர்கள், நமது நாட்டின் திறமையைப் பல்வேறு நாடுகளில் பிரதிபலித்து வருகின்றனர் என்று கூறினார். தனது மூதாதையர்கள் வாழ்ந்த தாய்நாட்டுடன், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்குப் பிணைப்பு ஏற்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் முன்னேற்றத்திற்காக வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினர் அளித்துள்ள பங்களிப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி பிரவாசி பாரதீய திவஸ் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வருடம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ,பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேதி மாற்றி அமைக்கப்பட்டது. புதுதில்லியில் இந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் என்று கருதப்படுகின்ற மகாத்மா காந்தி அவர்கள் 1915-ம் வருடம் ஜனவரி மாதம் 9ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பி வந்தார் மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைமை ஏற்று இந்திய மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார், ஆகையால் அந்த நாள் வெளிநாடு வாழ் இந்தியர்கள்  தின மாநாட்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் பதினைந்தாவது பிரவாசி பாரதீய திவஸ் விழாவானது , உத்திரப்பிரதேச மாநில அரசாங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் இந்த பிரவாசி பாரதீய திவஸ் மாநாடு நடைபெற்று வருகின்றது இருப்பினும் , இனி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் என்று தற்பொழுது முடிவெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது மூதாதையர்கள் வாழ்ந்த நாட்டுடன் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த மாநாடு ஒரு பாலமாக அமைகிறது. உலகின் பல மூலைகளில் வசிக்கும் இந்திய சமுதாயத்தினர், தாங்கள் பல துறைகளில் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்பாக இந்த மாநாடு விளங்குகிறது. இந்த வருட பிரவாசி பாரதீய திவஸ் மாநாட்டில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர்களைப் பாராட்டும் வகையில், அவர்களுக்கு மதிப்புமிக்க பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை பற்றிப் பேசுவதற்கும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த நாட்டில், தேசியத் தலைவராக உயர்ந்துள்ள ஒருவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருட பதினைந்தாவது பிரவாசி பாரதீய திவஸ் மாநாட்டில் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவீன் ஜெகன்நாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். இந்திய வம்சாவளி சார்ந்த பல அரசியல் தலைவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த நாட்டில் தலைமை வகித்து வருகின்றனர். அவர்கள் உணர்ச்சிப்பூர்வ மற்றும் மூதாதையர்கள் தொடர்புகளைத் தங்களது தாய்நாட்டுடன் பராமரித்து வருகின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இளைஞர்களுக்காக, முதல்நாள் நிகழ்ச்சி அர்ப்பணிக்கப்பட்டது. நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஷி குலாட்டி அவர்களும் மற்றும் நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஜீத் பக்ஷி அவர்களும், இளைஞர்கள் பிரவாசி பாரதீய திவஸ்-ன் இரண்டு முக்கியப் பிரபலங்கள் ஆவார்கள். ஜனவரி 21-ஆம் தேதி துவங்கப்பட்ட பிரவாசி பாரதீய திவஸ் மாநாட்டின், முதல் நாள் நிகழ்ச்சியில், இளைஞர்கள் அமர்வில், இவர்கள் இருவரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் பிரவாசி பாரதீய திவாஸ்-ஐ வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் துவக்கி வைத்தார். இந்தியா , மிகவும் அதிக அளவான 3 கோடியே 10 லட்சம் புலம்பெயர்ந்தவர்களை உலகம் முழுவதும் கொண்டுள்ளது என்றும் இவர்கள் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என்ற பொதுவான அடையாளத்தைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார். இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த செழிப்பான சமுதாயத்தினர், தங்களது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிக்க ஆவலாக உள்ளனர். ஃபிஜி , சுரிநாம், இலங்கை, கயானா, மலேசியா, மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு, 100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியர்கள் புலம் பெயர தொடங்கினார்கள். நவீன காலத்தில் 20 ஆம் நூற்றாண்டில் மற்றுமொரு புலம்பெயர்தல் நடைபெற்றது. நன்கு படித்தவர்கள், மிகவும் திறமை உள்ளவர்கள் மற்றும் துடிப்புமிக்க இந்திய இளைஞர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு கௌரவம் சேர்த்து வருகின்றனர். இன்று ,வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இவ்வாறு வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் ஈடுபடுவதன் மூலம், அவர்கள் தாய்நாட்டிற்கு அளிக்கும் பங்களிப்பை இந்தியா அங்கீகாரம் செய்கிறது.