தொடரும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம்

 

டாக்ரட் லேகா சக்ரவர்த்தி, இணைப் பேராசிரியர், என்.ஐ.பி.இ.பி

தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார்

ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம், ‘உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி, 2018-19 ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவிகிதமாக இருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி அதை விட அதிகமாக 7.5 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதாக ஐ.எம்.எஃப்-பின் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, குறிப்பிடப்பட்ட இரண்டு ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.2 சதவிகிதமாகவே இருந்தது.

எண்ணெயின் குறைவான விலை, இந்தியாவின் துரித வளர்ச்சிக்கு உதவியுள்ளது. ஐ.எம்.எஃப்-பில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு காரணம் குறைந்த வேகத்திலான பண இறுக்கமாகும். மத்திய வங்கிகள் அதிகாரப்பூர்வ வட்டி விகிதங்களை அதிகரிப்பது ‘மானிடரி டைடனிங்’ அதாவது பண இறுக்கம் எனப்படும். இந்தியாவில் யு.பி.ஐ எனப்படும் உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான விவாதமும் நடந்துகொண்டிருக்கின்றது. இதனால் பொதுமக்களுக்குத் துவக்க நிலை பணப் பரிமாற்றம் உறுதி செய்யப்படும். இந்தியாவின் சில மாநிலங்கள் யு.பி.ஐ-ஐ நடைமுறைப்படுத்த முழு முனைப்பைக் காட்டி வருகின்றன. உலகளாவிய அடிப்படை வருமானத் திட்டத்திற்கு மாறுவது, இந்திய அரசாங்கத்தால் வடிவமைக்கப்படும் நலத் திட்டங்களுக்கு மாற்றாக அமையக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த கொள்கையாகப் பார்க்கப்படுகின்றது. எனினும், நிதி நிலையில் அனைவரது உள்ளடக்கம் மற்றும் பொது நிதிமுறைக்கான டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவற்றில் போதுமான முன்னேற்றம் இல்லாதிருப்பது இவ்வகைப் பணப் பரிமாற்றத்திற்குச் சவால்களை ஏற்படுத்தலாம்.

இம்மாதம் வெளியிடப்பட்ட ஐ.எம்.எஃப் அறிக்கை, உலகின் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில், மிக அதிக அளவில் பொருளாதார முன்னேற்றத்தைக் காணும் நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது. உலகப் பொருளாதாரச் சிக்கல்கள் இந்தியப் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். அமெரிக்கா மற்றும் சீனா இடையில் அதிகரித்து வரும் வர்த்தக இறுக்கங்கள் மற்றும் என்ணெய் விலையில் உள்ள ஏற்ற இறக்கம் ஆகியவை உலக பொருளாதாரத்திற்கான பெரும் தடைகளாக உருவெடுக்கும் என எண்ணப்படுகின்றது. இந்தச் சிக்கல்களை மனதில் கொண்டு, உலகளாவிய வளர்ச்சிக் கணிப்புகளை ஐ.எம்.எஃப் கீழ்நோக்கி மாற்றியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கு 0.2 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கு 0.1 என்றே சதவிகிதப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாதகமான சிக்கல்கள், பொருட்சந்தைகளிலிருந்தும் நிதி சந்தைகளிலிருந்தும் எழும்பலாம் எனப் பரவலாக எண்ணப்படுகின்றது.

மூலதனத்தைப் பொறுத்த வரை, இந்தியா மீது அமெரிக்க பொருளாதாரத்தினால் வரும் இறுக்கம் மற்றொரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. வட்டி விகித வேறுபாடுகளையும் வர்த்தகத்தையும் இது சார்ந்துள்ளது. அமெரிக்காவால் விதிக்கப்படும் அதிக அளவிலான சுங்க வரிகளும் மற்ற கட்டணங்களும் வளர்ந்து வரும் நாடுகளில், வர்த்தகத்திற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனினும், உலகப் பொருளாதார வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், அமெரிக்கா வர்த்தகச் சுழற்சியில் உச்சத்தை எட்டிவிட்டது என்பதை ஐ.எம்.எஃப் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் பணி உருவாக்கம் அதிகமாக உள்ளது என்றும் நுகர்வோரின் நம்பிக்கை அளவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது என்பதையும் ஐ.எம்.எஃப் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வர்த்தகம் மற்றும் நிதித் துறைகளில்தான் அமெரிக்காவிற்கு கீழ்நோக்கிய அபாயங்கள் இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை நிலைத்திருக்கச் செய்வதில், நிதி ஒருங்கிணைப்பின் தரமும் கவலையளிக்கும் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. நிதி ஒருங்கிணைப்பின் தரம், கவலைப்பட வேண்டிய விஷயமாக இருந்து வருகிறது என்றும் நீண்ட கால மேக்ரோ அதாவது பெரிய அளவிலான பொருளாதார நிலைத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சமீபத்திய சி.ஏ.ஜி அறிக்கைகள் கோடிட்டுக்காட்டியுள்ளன. ஜி.எஸ்.டி விகிதங்கள் சார்ந்த புதிய வரிச் சீர்திருத்தங்கள் தொடர்பான மற்றொரு விவாதமும் உள்ளது. ஜி.எஸ்.டி செயலாக்கத்தில், வரிகளின் பெருக்கம் ஒரு முக்கிய சவாலாகப் பார்க்கப்படுகின்றது. எனினும், சரக்கு மற்றும் சேவைகள் வரி மற்றும் ஐ.பி.சி எனப்படும் திவால் குறியீடு போன்ற அடிப்படைச் சீர்திருத்தங்கள் நீண்ட காலத்திற்கு வளர்ச்சி வேகத்தை நிலைத்திருக்கச் செய்ய உதவும் என்றே நம்பப்படுகின்றது.

விவசாய நெருக்கடி, இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குச் சவாலாக இருக்கும் மற்றொரு முக்கிய விஷயமாகும். பொருளாதார வளர்ச்சியின் தரத்தைப் பேண, பெரிதாக விரிந்து இருக்கும் வேற்றுமையை அகற்ற வேண்டும். எனினும், விவசாயக் கடன் தள்ளுபடிக் கொள்கையால் மட்டும் இந்தியாவில் விவசாய நெருக்கடியைச் சமாளிக்க முடியாது. ஏனெனில், சில விவசாயிகளுக்கு மட்டுமே இங்கு முறையான வங்கிக் கடன் சந்தைகளுக்கான அணுகுமுறையில் பரிச்சயம் உள்ளது. இந்தியாவில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை நிலைத்திருக்கச் செய்ய, மொத்த மூலதன உருவாக்கத்தில், குறிப்பாக, விவசாயத் துறையில், குறைந்துகொண்டிருக்கும் விகிதங்கள் கவலையளிகக்கூடிய விஷயமாக உள்ளன. இந்தியா வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செல்ல, நிதி-பணவியல் கொள்கை ஒருங்கிணைப்பும் ஒரு முக்கிய அம்சமாககும். 2019-20 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மத்திய நிதி நிலை அறிக்கை, விவசாயிகளின் கடன்கள் மற்றும் பிற பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.எம்.எஃப் தனது அறிக்கையை வெளியிட்ட அதே நாளில், பன்னாட்டுத் தொழில்முறை நிறுவனமான ப்ரைஸ்வாட்டர்ஹௌஸ் கூப்பர்ஸ் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், 2019 ஆம் ஆண்டு, பொருளாதார ரீதியாக உலகின் மிகப் பெரிய நாடுகளுக்கான தரவரிசையில் இந்தியாவும் பிரான்சும் இங்கிலாந்தை மிஞ்சி, அந்நாட்டை, உலகளாவிய பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்குத் தள்ளி விடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார அடித்தளங்கள் வலிமையாக உள்ளன. மீண்டெழும் தன்மை மற்றும் தெளிவான தொலைநோக்குடன், உலக சவால்களை எதிர்கொள்ள நம் பொருளாதாரம் தயாராக உள்ளது என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.