அனைவருக்கும் அடிப்படை ஊதியம –  இந்தியாவில்  சோதனை முறையில்

டெலிகிராஃப் பத்திரிகையின் வணிகப்பிரிவு ஆசிரியர் ஜெயந்த ராய் சௌத்ரி ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம்

 

வரவிருக்கும் ஆண்டுகளில் அனைத்துக் குடிமக்களுக்கும் அல்லது சிலருக்கு அடிப்படை ஊதியம் வழங்கும் பொருளதாரச் சோதனைகளை நடத்தக்கூடிய சோதனைக் கூடமாக இந்தியா மாறவிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படை ஊதியம் எனப்படுவது ஒரு நலத்திட்டம். ஒரு நாட்டின் அனைத்துக்  குடிமக்களும் ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் தரம் பெறுவதற்காக அந்த நாடு அதன் குடிமக்களுக்கு வழங்கும் மானியத் திட்டமே இந்த நலத்திட்டம். இந்தத் திட்டத்தை முதன் முதலில் முன்மொழிந்தவர் பிரிட்டிஷ் சிந்தனையாளர் சர் தாமஸ் மூர். பின்னர் இந்தத் திட்டத்தை அமெரிக்க புரட்சியாளரும் சிந்தனையாருமான தாமஸ்  பெய்னே பிரபலப்படுத்தினார்.

 

இந்தியாவில் தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் ரித்து பந்து ( அதாவது உழவர்களின் நண்பன்) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களுக்குச் சொந்தமாக உள்ள ஏக்கர் நிலங்களின் அடிப்படையில் ஒரு நிலையான வரமானத்தை இந்தத் திட்டம் உறுதியளித்தது. இமயமலை மாநிலமான சிக்கிம்மில் அதன் மக்கள் பிற மாநிலங்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் புலம்பெயராமல் இருப்பதற்காக 6 இலட்சம் குடிமக்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்குவதாக அந்த மாநிலம் அறிவித்துள்ளது. வறிய விவசாயிகளுக்கு அத்தகைய ஒரு வருமானம் தருவதாகக் கடற்கரையோர மாநிலமான ஒடிசா உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த நலத்திட்டத்தை மாநிலக் கொள்கையாக தழுவிய மூன்றாவது மாநிலமாக ஒடிசா  விளங்கக்கூடும்.

 

இத்தகைய திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் அளிப்பதற்குப் பெருந்தொகை தேவைப்படும். தற்போதைய நிலையில் இந்தியாவின் 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தால் அத்தகைய நிலையை எட்ட முடியாது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அனைவருக்கும் அடிப்படை ஊதியம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பல கட்சிகளும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

 

அனைவருக்கும் அடிப்படை ஊதியம் என்ற கருத்தியலை இந்தியாவில் முதன் முதலாக முன்மொழிந்தவர் பொருளாதார வல்லுநர் அரவிந்த் சுப்ரமணியம். இவர்தான்  2016-17க்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இது குறித்துக் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த ஆய்வறிக்கையை ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசு  பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிடும். இதில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சவால்கள், சாதனைகள் மற்றும் எதிர்காலத்திற்கான  கருத்துக்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆலோசனை  தான் ஒவ்வொரு வயது வந்தவருக்கும் அல்லது குழந்தைக்கும், ஏழை அல்லது பணக்காரர்களுக்கும்  அடிப்படை கல்வித் தொகை அல்லது அடிப்படை  ஊதியம் என்ற ஆலோசனை.

 

சிக்கிம், தெலுங்கானா, ஒடிசா, என நமது புதிய கிராமப்புற வருமான முன்மொழிதல்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அனைவருக்கும் அடிப்படை ஊதியம் என்ற முக்கிய சோதனையை  ஆராய்ச்சி செய்து பார்க்கும் தளமாக இந்தியா மாறிவருகிறது. கருத்தியல்கள் செயல்படும் என்று முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தனது சமீபத்திய டுவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.

 

பகுதி நேர, அனைவருக்கும் அடிப்படை கிராமப்புற ஊதியம் – நமக்கு முன்னே உள்ள வழிகள் என்று ஓர் ஆராய்ச்சி கட்டுரையை மற்ற பொருளாதார நிபுணர்களுடன் இணைந்து  அரவிந்த் சுப்ரமணியம் வெளியிட்டுள்ளார். இந்தக் கணக்கீடுகளின்படி, ஓர் ஏழைக்கு அடிப்படை வருமானமாக ஒரு மாதத்திற்கு ரூ.1,500 அளிக்கவேண்டுமென்றால், அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம் செலவழிக்க வேண்டியிருக்கும்.  உலகிலேயே இப்படிச் சிந்தித்த முதல் நாடு இந்தியா மட்டுமல்ல. சமீப காலத்தில் கூட சில நாடுகள் இதற்கு முயற்சித்துள்ளன. அனைவருக்கும் அடிப்படை ஊதியம் என்ற திட்டத்தினைச் சற்றே மாற்றி குடிமக்கள் வருமானம் என்ற கருத்தியலுடன் இத்தாலியில் நகைச்சுவையாளர் பெப்பி கிரில்லோ ஓர் இயக்கத்தை வழிநடத்தினார். இதன்படி ஒவ்வோர் ஆண்டும் 9,360 யூரோக்களுக்கும் குறைவான  வருமானத்தை இத்தாலிய குடும்பங்களுக்கு அவர் அளித்தார்.

 

மூன்றாண்டுகளுக்கு முன்பு இது குறித்து ஆராய்ச்சி செய்த பின்லாந்து, இத்திட்டம் தோல்வி என்று கடந்த ஆண்டு கைவிட்டது. இந்த வருமான உதவித் திட்டம் பின்லாந்தில் ஏன் தோல்வியடைந்தது என்றால், அந்த நாட்டில் ஏற்கெனவே உயர்தர இலவசக் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, வேலையில்லாதவர்களுக்கான படிகள் என்று பல்வேறு  வசதிகள் உள்ளன. எனவே இந்தத் திட்டம் தேவையற்ற சலுகையாகக் கருதப்பட்டது.

 

1960களில் அமெரிக்காவும் கனடாவும் நலத் திட்டங்கள் குறித்துப் பல்வேறு சூடான விவாதங்களைச் சந்தித்தன. இதில் அடிப்படை வருமானம் குறித்தும் விவாதிக்கப்பட்டு மிகவும் பிரபலமடைந்தது. 1969ஆம் ஆணடு அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்டு நிக்சன்  அமெரிக்க காங்கிரசில் எதிர்மறை வருமான வரி மசோதாவை முன்மொழிந்தார். இதனால் ஏழை குடிமக்களுக்கு மாதாந்திர மானியம் கிடைக்கும். நான்கு உறுப்பினர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 1,600 டாலர்கள் வருமானத்தை அளிக்கவே இந்த மசோதா வழிவகுக்கிறது.

 

ஒரு நபர் வேலை புரிய வேண்டும் என்ற விருப்பத்தை இந்த அடிப்படை வருமான உத்தரவாதம் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை, மற்றும் அமெரிக்க அரசிற்கு மிகவும் செலவு மிகுந்த விஷயமும் கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அனைவருக்கும் அடிப்படை ஊதியம் குறித்து நிறைய பலன்கள் இருந்தாலும், யதார்த்த ரீதியாக நிறைய சவால்களும் உள்ளன. அனைவருக்கும்  கிடைக்கக்கூடிய ஒரு பாதுகாப்பான வெளிப்படையான நிதிக் கட்டமைப்பு  இந்தத் திட்டம் வெற்றிபெற அவசியம் தேவை. மற்ற வார்த்தைகளில் சொல்வதென்றால், அனைவருக்கும் அடிப்படை ஊதியம் என்ற திட்டம் வெற்றிபெற வேண்டுமென்றால் இதனை விநியோகிக்கும் முறையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.