ஐ என் எஃப் ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா – ரஷ்யா  மோதல் போக்கு

 

அமெரிக்க விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி

ஐ என் எஃப் ட்ரீடி எனப்படும் இடைநிலை வரம்பு அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக,  சென்ற அக்டோபர் மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்தார். 1987 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் அப்போதைய சோவியத் யூனியனின் பொதுச் செயலாளர் மிக்கேல் கோர்பஷேவ் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இடைநிலை வரம்பு ஏவுகணைகள் தரையிலிருந்து ஏவப்படுவதைத் தடுக்கும் ஒப்பந்தம் ஆகும் இது. இதன் படி தடை செய்யப்பட்டுள்ள ஏவுகணைகளைத் தயாரித்ததன் மூலம், இதை  ரஷ்யா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இந்த விதி மீறலை ரஷ்யா முழுவதுமாக நிறுத்திக்கொள்ளாவிட்டால், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிப் படிப்படியாக ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுவதும் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும் என்று அறிவித்துள்ளது.

ஒபாமா மற்றும் டிரம்ப் நிர்வாகங்கள், நேட்டோ தலைவர்கள், பெரும்பான்மையான மேற்கத்திய ராணுவ ஆய்வாளர்கள் அனைவருமே ரஷ்யா மீதான இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நோவேட்டர் 9M729 என்ற கப்பல் ஏவுகணை இந்த விதியை மீறியுள்ளதாகக் கூறப்படுவதை ரஷ்யா திடமாக மறுத்து வருகிறது.

அமெரிக்காவிடமுள்ள  பலதரப்பட்ட ஆயுதங்களுடன்  போட்டியிட முடியாத ரஷ்யா, தனது ராணுவ பலத்தை மேம்படுத்த தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தயாரிக்க முடிவு செய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாத சீன ராணுவத்தில் பெருகிவரும் இடைநிலை வரம்பு ஏவுகணைகளுடன் போட்டியிட இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ஒரு தடையாக இருப்பதால், இதனை விட்டு வெளியேற ஒரு காரணமாக இந்தக் குற்றச்சாட்டை வைப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. சீனா, ரஷ்யா அகிய இரு நாடுகளையும் தனக்குப் போட்டியாகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளிவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், அமெரிக்கா இதிலிருந்து வெளியேறி, ஐரோப்பாவில் ஏவுகணைத் தளங்கள் அமைக்குமானால், ரஷ்யா அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியிருக்கும் என்று ரஷ்யாவும் எச்சரித்துள்ளது.

உலக அளவில் ஆயுதக் குறைப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக ரஷ்யா இருப்பதான ஒரு நிலையை இந்த அமெரிக்க வெளிநடப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா உடன்படுவதுடன் சீனா போன்ற மற்ற நாடுகளையும் இதில் இணைக்கும் பணியையும் மேற்கொள்ளவும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.  இதனை அமெரிக்காவுக்கு வலியுறுத்துமாறு அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.  ரஷ்யாவுக்கு எதிராகக் குற்றம் சாட்டும் ஐரோப்பிய நாடுகள் கூட, இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை. பூகோள ரீதியாக, இந்த ஒப்பந்தம் தடை செய்யும் ஏவுகணைகளின் வரம்புக்குள் இந்த ஐரோப்பிய நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபடுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்ற அவற்றின் அச்சம்  நியாயமானதே.

ஐ என் எஃப் ஒப்பந்த முடிவு, ஆயுதக் குறைப்பு குறித்த பேச்சு வார்த்தைக்குத் தயக்கம் இவற்றுடன் விண்வெளிச் செயல்பாடுகளுக்கென ஒருங்கிணைந்த படையை உருவாக்க பெண்டகனுக்கு அமெரிக்கா விடுத்திருக்கும் ஆணை இவை அனைத்தும் சேர்ந்து, அணு ஆயுதம் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் அணு ஆயுதப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, ரஷ்யாவும் எதிர்வினை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

 

இந்த ஒப்பந்தம் குறித்த விவாதங்களால், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இடைநிலை வரம்பு ஏவுகணைகளின் பயன்பாட்டைத் தடுக்கும் வழிகள் குறித்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையில் நடந்து வரும் ஆயுதக் கட்டுப்பாட்டு விதி மீறல்களைத் தடுக்கும் வழிகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முடிவு, ஒரு புதிய ஆயுதக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் நல்ல முறையில் ஒரு தீர்வை எட்டும் என்று இந்தியா நம்புகிறது. அணு ஆயுதங்களுக்கு எதிரான முழுமையான தடைக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கவும் கருத்தொற்றுமையை எட்டவும் வளர்ந்த நாடுகள் முயலவேண்டும்.