தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இந்தியா.

(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

கடந்த புதனன்று, இந்தியா, விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய 40 ஆவது தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட் -31 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்சாட் – 4சிஆர் என்ற, 11 ஆண்டுகால தொலைத் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவின் அத்தியாவசியமான தொலைத் தொடர்பு சேவைகளில் தொய்வு ஏற்படாமல், தொடர்ந்து செயல்திறனுடன் விளங்க, ஜிசாட் -31 மாற்று செயற்கைக் கோளாக விளங்கும். ஃபிரெஞ்சு கயானாவிலுள்ள கௌரு விண்வெளி வளாகத்தில் அமைந்துள்ள கயானா விண்வெளி மையத்திலிருந்து, ஏரியேன் – 5 ராக்கெட் மூலம், ஜிசாட்-31 விண்ணில் ஏவப்பட்டது. ஐரோப்பாவின் ஏரியேன் ஸ்பேஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தும் 23 ஆவது இந்திய செயற்கைக் கோளாகும் இது. முன்னதாக, 1981 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஆப்பிள் என்ற செயற்கைக்கோளை முதன்முதலாக ஏரியேன் ஸ்பேஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. ஏரியேன் – 5 ராக்கெட், இந்தியாவின் ஜிசாட்-31 தவிர, சவூதி அரேபியாவின் புவி ஸ்திரநிலை செயற்கைக் கோள் 1/ஹெல்லாஸ் சாட் 4 என்ற செயற்கைக் கோளையும் சுமந்து சென்றது.

ஏரியேன் – 5 விண்கலத்திலிருந்து பிரிந்து விண்வெளிக்கு வந்தவுடன், ஜிசாட்-31 இன் இரு சூரியசக்திக் கரங்களும் தன்னிச்சையாக விரிந்தன. பின்னர், கர்னாடகாவில், ஹாசனில் உள்ள கட்டுப்பாட்டு மையம், ஜிசாட் 31 இன் செயல்பாட்டைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. மற்ற தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களைப் போலவே, ஜிசாட் 31 ம், துவக்கத்தில், ஜியோஸ்டேஷனரி ஆர்பிட் என்ற புவிஸ்திர நிலை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில்,விஞ்ஞானிகள் படிப்படியாக, சுற்றுப்பாதையை உயர்த்தி, இறுதியில், பூமத்திய ரேகைக்கு மேல் 36,000 கி.மீ உயரத்தில், புவிஸ்திர நிலை சுற்றுப்பாதையில் ஜிசாட் 31 செயற்கைக்கோளை நிறுத்தவுள்ளனர். இதற்கு செயற்கைக்கோளிலுள்ள உந்துசக்தி பயன்படுத்தப்படும்.

சுற்றுப்பாதையை உயர்த்தும் இறுதிக் கட்டத்தில், ஜிசாட்-31 இன் ஏண்டென்னா பிரதிபலிப்புக் கருவி முடுக்கி விடப்படும். அனைத்து சுற்றுப்பாதை சோதனைகளும் முடிந்த பின், செயற்கைக் கோள் முழு செயல்பாட்டிற்கு வரும்.

15 ஆண்டுகள் ஆயுட்காலத்தையுடைய ஜிசாட்-31, நெகிழ்வான அலைவரிசைப் பிரிவுகளையும், நெகிழ்வான பரப்பையும் தக்க வைத்துள்ள மிக சக்தி வாய்ந்த தொலைத் தொடர்பு செயற்கைக்கோளாகும். மிகச் சிறிய துளை டெர்மினல் வலைக்குத் துணை புரியும் ஜிசாட்-31, ஏடிஎம், பங்குச் சந்தை, தொலைக்காட்சி மேலிணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மின்னணு நிர்வாகம் போன்றவற்றிற்குப் பெரிதும் பயன்படுத்தப்படும். இது தவிர, வரவிருக்கும் பெருமளவு தொலைத் தொடர்புத் தரவுகளுக்கு ஜிசாட் 31 பயன்படுத்தப்படும். அரபிக் கடல், வங்காள விரிகுடா பகுதிகளிலுள்ள இந்தியத் தீவுகளுக்குப் பயன்படும் வகையில், விரிந்த தொலைத் தொடர்பு பரப்பை இது வழங்கும்.

2,535 கிலோ மட்டுமே எடையுடைய இந்த செயற்கைக் கோளை இந்திய மண்ணிலிருந்தே, இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தியிருக்க முடியும். இருப்பினும், சந்திரயான் – 2 உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்காக, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அவற்றை ஜிசாட் -31 ஐ விண்ணில் ஏவுவதற்குப் பயன்படுத்தவில்லை என, இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் அவர்கள் கூறினார். அதேசமயம், தொலைத் தொடர்பு சேவைகளைத் தடங்கலின்றி தொடர்ந்து வழங்குவதற்காக, ஜிசாட் – 31 ஐ விண்ணில் ஏவ அவசரத் தேவையும் இருந்ததால் ஏரியேன் -5 மூலம் அதனை விண்ணில் செலுத்த முடிவெடுக்கப்பட்டது. இதே போல், இன்சாட்-4ஏ என்ற மற்றொரு மடியும் செயற்கைக் கோளுக்கு மாற்றாக, 3100 கிலோ எடையுள்ள ஜிசாட் -30 செயற்கைக் கோளும் அடுத்த சில மாதங்களில் ஏரியேன் ஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம், விண்ணில் ஏவப்படும். சி மற்றும் கே யூ உள்ளிட்ட பலதரப்பட்ட அலைவரிசைகளில், முக்கிய தேசிய சேவைகளை அளிக்க, இன்சாட் 4சிஆர் மற்றும் இன்சாட் 4ஏ செயற்கைக் கோள்கள் பயன்படுகின்றன.

ஜிசாட் -30, ஜிசாட்-31 ஆகிய செயற்கைக் கோள்களை அந்நிய ராக்கெட்டுகளின் மூலம் செலுத்த இஸ்ரோ எடுத்த முடிவு, நடைமுறைத் தேவைகளுக்கேற்ப செயல்படும் இஸ்ரோவின் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. செயற்கைக் கோள்கள் வாயிலாக, தொலைத் தொடர்பு சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதை இது உறுதி செய்கிறது.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், எல் & டி போன்ற நிறுவனங்களுக்கு, ராக்கெட்டுக்களை உற்பத்தி செய்யப் பணிக்கும் திட்டம் வருங்காலத்தில் உள்ளதாக, இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் தெரிவித்தார். அவ்விரு நிறுவனங்களும், துருவ செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் குழுவிற்குத் தலைமை தாங்கும். மேலும் அதிக எடையுள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளையும் அக்குழு உற்பத்தி செய்யும். பல விண்வெளித் திட்டங்களுக்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ள 30,000 கோடி ரூபாயில், 80 சதம் தனியார் துறைக்குச் செல்லும்.

எஸ்எஸ்எல்வி என்ற சிறிய, புது ராக்கெட்டை இவ்வாண்டு மே- ஜூன் மாதங்களில் சோதனை ஓட்டமாக ஏவும் தனிச்சிறப்பு வாய்ந்த முன்னெடுப்பை இஸ்ரோ எடுக்கவுள்ளது. 500 முதல் 700 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்குப் பயன்படும் எஸ்எஸ்எல்வி, பிஎஸ்எல்வி ரக்கெட்டை விட 10 மடங்கு குறைந்த செலவில் தயாராகும் இதன் நீளம் 34 மீ. இவ்வாண்டு மத்தியில் இதன் வடிவமைப்பு முடிவுற்றவுடன், இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஏண்ட்ரிக்ஸ் மூலம் தனியார் துறைக்கு இதனைத் தயாரிக்கும் பணி வழங்கப்படும்.