(ஆய்வாளர் டாக்டர் ஸ்மிரிதி பட்னாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி).
இந்தியா – பங்களாதேஷ் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இருநாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான ஒருங்கிணைப்புக் குழுவின் ஐந்தாவது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ கே அப்துல் மோமென் உயர்மட்டக் குழுவுடன் கலந்து கொண்டு, இருநாட்டு உறவுகளின் பலதரப்பட்ட அம்சங்களைப் பற்றி விவாதித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் கையெழுத்தாயின. பங்களாதேஷில் புதிய அரசு பதவியேற்ற பின்னர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.
1991 ஆம் ஆண்டு, மீண்டும் பங்களாதேஷில் ஜனநாயகம் துளிர் விட்டதிலிருந்தே, இந்தியா – பங்களாதேஷ் உறவுகள் வலுப்பெற்று வந்துள்ளன. இந்நிலையில், அந்நாட்டுப் பிரதமர் திருமதி ஷேக் ஹஸீனா, மூன்றாவது முறையாகத் தொடர்ந்து பதவியேற்றது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுவாக்கியுள்ளன. ஷேக் ஹஸீனா அவர்களின் தொலைநோக்குப் பார்வை, பங்களாதேஷின் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கி, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்ற முனைப்பு, இந்தியாவுடன் ஆக்கபூர்வமான நல்லுறவைப் பேணுவதில் காட்டும் அக்கறை மட்டும் உறுதிப்பாடு ஆகியவை, இருநாட்டு உறவுகளை உச்ச்த்துக்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
2009 ஆம் ஆண்டு, ஷேக் ஹஸீனா அவர்கள் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றவுடன், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் பிரிவினைவாதிகளை இந்தியாவிடம் ஓப்படைக்க எடுத்த முடிவு, இருதரப்பு நல்லுறவுகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 2004 ஆம் ஆண்டு, ஷேக் ஹஸீனா அவர்கள் பங்கு கொண்ட பேரணியில், அவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட அதிபயங்கரத் தாக்குதலில் அவர் தப்பித்தார். மேலும், 2005 ஆம் ஆண்டு, பங்களாதேஷிலுள்ள மொத்த 64 மாவட்டங்களில், 63 மாட்டங்களில் ஒரேசமயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நாடே அதிர்ந்தது. இதனைத் தொடர்ந்து, நீதித்துறையைக் குறிவைத்து, ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற தீவிரவாதக் குழு தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது. ஷேக் ஹஸீனா அவர்களுக்கு முந்தைய அரசு, ஜேஎம்பி மற்றும் பங்களா பாய் போன்ற தீவிரவாதக் குழுக்களை ஆதரித்து வளர்த்தது. எனவே, பங்களாதேஷ் பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாது என்ற கொள்கை நிலைப்பட்டை ஹஸீனா அவர்கள் அறிவித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எனவே, பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், இந்தியாவுடன் ஒத்துழைக்க அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். தற்போது, உளவுத் தகவல் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட மிகச்சிறந்த ஒத்துழைப்புக் கட்டமைப்பு, இருநாடுகளுக்குமிடையே பயங்கரவாத எதிர்ப்பு நடவைக்கைகளில் விளங்குகிறது.
இருநாடுகளுக்குமிடையே எல்லைக்கோடு, வெற்றிகரமான முறையில், சுமுகமாக வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சர்வதேச தீர்ப்பாயத்தின் உதவியுடன் கடல் எல்லைப் பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கப்பட்டது. வலுவிழந்த பகுதிகளில் இருநாடுகளும் கூட்டு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் ஊடுருவலைத் தடுக்கும்போது உயிர்ச் சேதத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, உயிரைக் குடிக்காத ஆயுதங்களை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் திறன்வளர்ப்பு நடவடிக்கைகளில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.
இருநாடுகளுக்குமிடையே, பரஸ்பர நலனளிக்கும் இணைப்புக்களை மேம்படுத்தும் முடிவு, இருநாட்டு வர்த்தக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பங்களாதேஷ் விடுதலைக்கு முன்னதாக, வழக்கில் இருந்து, பின்னர் 1965 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட ரயில் மற்றும் சாலை இணைப்புக்களைச் சீரமைக்க, இந்தியா, 800 கோடி டாலர் அளவில் கடனுதவி அளித்துள்ளது. பங்களாதேஷுக்கு 660 மெகாவாட் மின்சக்தி வழங்க இந்தியா முன்வந்தது, அந்நாட்டின் மின்சக்திக் குறைபாட்டைக் கணிசமாகக் குறைக்க உதவியுள்ளது. இருநாடுகளுக்கிடையே மின்சக்தித் தொகுப்பு உருவாக்கப்பட்டு, எல்லை கடந்த மின்வர்த்தகத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது. இருநாடுகளும் புதிய ரயில்சேவைகளையும், சுங்கம் மற்றும் குடியிறக்க வசதிகளை ரயில்களிலேயே அளிக்கும் வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன.
இவையாவும் இருநாட்டு நல்லுறவுகள் மிகச்சிறந்த முறையில் பேணப்பட்டு வருவதை சுட்டிக்காட்டுகின்றன. ரோஹிங்கியா பிரச்சனை, டீஸ்டா நதிநீர்ப் பங்கீடு உள்ளிட்ட சில பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமலிருந்த போதிலும், அவற்றைத் தாண்டி நல்லுறவைப் பேணுவதில் இருநாடுகளும் உறுதி பூண்டுள்ளன. ’ஆபரேஷன் இன்சானியத்’ என்ற திட்டத்தின்கீழ், பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு இந்தியா உதவியளித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ், மியன்மாரின் ரகைன் மாநிலத்தில், இடம் பெயர்ந்தோர்க்கு, 250 வீடுகளை இந்தியா கட்டி வருகிறது.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் அரசியல் உறுதிப்பாடு ஆகியவற்றுடன், இருநாடுகளும் தங்கள் உறவுகளில் வரலாற்றுச் சாதனை படைக்கத் தயாராக உள்ளன. இதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.