வளர்ந்து வரும் இந்திய, மொனாக்கோ உறவுகள்.

(ஜேஎன்யூ பேராசிரியர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

மொனாக்கோ நாட்டுத் தலைவர், இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் தனது முதல் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே, நீண்டநாள் உறவு இருந்து வந்தபோதிலும், 2007 ஆம் ஆண்டு தான் இருநாடுகளுக்குமிடையிலான ராஜீய உறவுகள் துவக்கப்பட்டன. வாடிகனுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது மிகச்சிறிய நாடான  மொனாக்கோ, முப்புறமும் ஃபிரான்ஸ் நாட்டுடனும், ஒருபுறம் மத்திய தரைக் கடலுடனும் எல்லை கொண்டுள்ளது. அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்ற முடியாட்சி நடைபெறும் இந்நாட்டில், கிரிமால்டி என்ற அரச பரம்பரை, கடந்த 600 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. 1993 ஆம் ஆண்டு, ஐ.நா.வின் முழு உறுப்பினராகச் சேர்ந்த மொனாக்கோ, ஐ.நா.வில் ஓட்டுரிமை பெற்றுள்ளது. தனக்கென சுதந்திரமான, வெளியுறவுக் கொள்கையையுடைய மொனாக்கோ, தனது பாதுகாப்பிற்கு ஃபிரான்ஸை நம்பியுள்ளது. ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக இல்லாத போதிலும், சுங்கம், எல்லைக் கட்டுப்பாடு உள்ளிட்ட  ஐரோப்பிய யூனியனின் கொள்கை வரைவுகளில், பங்கு கொள்கிறது. ஃபிரான்ஸுடனான உறவுகளின் அடிப்படையில், மொனாக்கோ, யூரோ நாணயத்தைப் பயன்படுத்துகிறது.

மத்திய தரைக் கடல் மற்றும் ஃப்ரெஞ்சு ரிவியராவில் செயலுத்தி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள மொனாக்கோவின் பொருளாதாரம், சுற்றுலா, தொழில்துறை, வர்த்தகம், ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் நிதி மேலண்மை ஆகிய ஐந்து தூண்களால் தாங்கப்படுகிறது. கடந்த சில பதிற்றுக்களில், மொனாக்கோ முக்கிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. இங்குள்ள மாண்டி கார்லோ என்ற கேளிக்கைக் கூடம் மிகவும் பிரபலமானது. ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ யின் முதல் அங்கமாக விளங்கும் மொனாக்கோ, வருமான வரியற்ற நாடாக விளங்குவதால், பணக்காரார்களின் முதலீட்டுத் தலமாகத் திகழ்கிறது. இந்நாட்டில் உலகிலேயே அதிகளவில் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் அவர்களின் இந்தியப் பயணம், இருநாட்டு உறவுகளை மேம்படுத்தவும், தற்போது குறைந்த அளவில் உள்ள இருதரப்பு வர்த்தக, முதலீட்டு நிலையை உயர்த்தவும் கேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், சொகுசுப் படகு, தனியார் ஜெட் உற்பத்தி, வங்கி மற்றும் காப்பீடு உள்ளிட்ட நிதிச் சேவைகள், சரக்குப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல், ரியல் எஸ்டேட், ஜவுளி, ஃபேஷன் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளைச் சார்ந்த 20 நபர் கொண்ட குழுவும் இளவரசருடன் பயணித்துள்ளது. இபயணத்தின்போது, இளவரசர், இந்தியா-மொனாக்கோ தொழில் மேடையிலும், எரியாற்றல் ஆய்வு மையமான தெரி ஏற்பாடு செய்த எரியாற்றல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்டை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், இருநாடுகளுக்குமிடையே நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நல்லுறவு நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். இளவரசரின் தற்போதையப் பயணம் இருதரப்பு உறவுகளை ஊக்குவித்து உச்சகட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் மொனாக்கோ நாட்டு தொழில்நுட்ப, முதலீட்டு நிறுவனங்கள் பங்கு கொண்டு பயன்பெற அதிக வாய்ப்புள்ளதாக, குடியரசுத் தலைவர் கூறினார்.

இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்டை சந்தித்த பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல்ம் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பலதரப்பு விஷயங்களில் இருநாடுகளுக்குமிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குரித்துப் பேசினார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், இளவரசரை சந்தித்து, சுற்றுச் சூழல், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல், இந்தியாவில் முதலீடு, ஸ்மார் நகரங்கள், கடல் வளம், சுற்றுலா, மக்களிடையேயான தொடர்புகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க இருக்கும் வாய்ப்புக்கள் குறித்துப் பேசினார்.

இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட், தனது பெயரில் 2006 ஆம் ஆண்டில், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். எரியாற்றல், சுற்றுச் சூழல், பருவநிலை, வளங்களைத் திறம்படக் கையாளுதல், நீடித்த விவசாயம் ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம், அவரது நிறுவனத்திற்கும் தெரிக்குமிடையே கையெழுத்தானது. இத்துறைகளில் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரி தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப, அறிவியல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள, ஒரு குழுவை அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரி கூறியுள்ளது. தனது அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட இளவரசர், பின்னர் ராஜஸ்தான் மாநிலத்துக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டார். மொனாக்கோ நாட்டுடனான நல்லுறவுகள், ஐரோப்பாவுடன் இந்தியா உறவுகளை மேலெடுத்துச் செல்வதிலும் உதவிகரமாக விளங்கும்.