பேச்சுவார்த்தை பொறுப்பு பாகிஸ்தான் மீது

தி ஹிந்து பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் கல்லோல் பட்டாச்சார்ஜீ ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

பாகிஸ்தான் அரசானது மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தன் விஷமத்தனமான கைவரிசையை காட்ட துவங்கியுள்ளது.  பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி, ஹூரியத் மானாட்டு அமைப்பின் தலைவரான மிர்வாய்ஸ் உமர் ஃபரூக்கை தொலைபேசியின் தொடர்பு கொண்டு பேசிய விவகாரத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாகிஸ்தான் தூதர் சொஹைல் முகமதுவை நேரில் அழைத்து கண்டித்தது.

குரேசியின் இந்த செயல் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பகிரங்கமாக தூண்டிவிடுவதாக கண்டனம் தெரிவித்த இந்தியா, இத்தகைய செயல்பாடுகளுக்காக கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.  அமைதியாக, பேசாமல் இருந்துவிடவேண்டிய விஷயங்களும் கூட பாகிஸ்தானின் சில்மிஷங்களினால் உரசலை உருவாக்கும் திறம் படைத்தது என்பதை இந்தியாவின் பதிலில் உள்ள தீவிரம் உணர்த்துகிறது.

பாகிஸ்தானும் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியாவை அழைத்து, காஷ்மீரை     இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய ப்ரதேசமாக கருதும் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு இருப்பதால்  , காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ராஜதந்திர மற்றும் அரசியல் ஆதரவை பாகிஸ்தான் தொடர்ந்து அளித்துவரும் என்று வலியுறுத்தியுள்ளது.  இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி,  பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் சையத் ஷா கிலானியுடன்  மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளார்.

அம்ரித்சரிலுள்ள இந்திய எல்லைக்கு அருகே அமைந்துள்ள சீக்கிய புண்ணியஸ்தலமான கர்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கு மத வழிபாட்டுக்கு செல்பவர்களுக்காக பாதை அமைப்பதற்கு தில்லியுடன் ஒப்பந்தத்தை எட்டியபின்னர்,  பாகிஸ்தான் திடீரென காஷ்மீரின் அனைத்து கட்சி ஹூரியத் மானாட்டு அமைப்புடன் தொடர்பு கொள்வது இந்தியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மத நடைபாதை திட்டத்தில் குறுக்கிடும் பணியை முன்னர் பஞ்சாபின் உள்னாட்டு அரசியலும் செய்து வந்துள்ளது

பிரிட்டிஷ்  நாடாளுமன்ற குழு ஒன்று காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்து,  கூட்டறிக்கை ஒன்றை ஏற்றுக்கொண்டதை திரு குரேஷி திருப்புமுனை என்று கூறியதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பின்னர் ப்ரிட்டிஷ் அரசானது பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் ப்ரிட்டன் வருகை தனிப்பட்ட முறையிலானது என்று விளக்கம் அளித்துவிட்டது. ப்ரிட்டிஷ் வெளியுறவு செயலர் ஜெரீமி ஹண்ட் உடனோ, இன்னும் கூறப்போனால் லண்டன் மேயர் சாதிக் கானை கூட சந்திப்பதற்கு கூட அவரால் அனுமதி பெற முடியவில்லை.  திரு குரேஷியின் வருகையை லண்டன் பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பது என்பது பாகிஸ்தான் அரசின் உள் நாட்டு அரசியலின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது என்பது கண்கூடு; உடனடியாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்பதும் தெரிந்ததே.  ஆப்கானிஸ்தானில் செயல்தந்திர ஆதாயங்களை அடைவதற்காகா அமெரிக்காவின் ஆதரவுடன், பாகிஸ்தான் தாலிபன் குழுவுடன் பேச்சுவார்த்தைகளை துவக்கியிருப்பது குறித்து இந்தியா விசனம் அடைந்துள்ளது.  ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை பிடிக்கும் பேச்சுவார்த்தைகளில் தாலிபங்கள் முக்கியத்துவம் பெற்று விட்டால்,  ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய முதலீடுகளின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.

ஒருவரையொருவர் குற்றம் சாட்டி இரு நாடுகளும் கூச்சல் இடுவது பிரச்னையை அதிகப்படுத்தும்.  இந்தியாவில் தேர்தல் மிக அருகில் இருக்கும் சூழலில்,  இரு நாடுகளுக்கும் இடையே அரசு முறை பேச்சுவார்த்தைகள் நடப்பது கடினம்.  இந்தியாவின் ஏனைய அண்டை நாடுகள்  புத்தாண்டு துவக்கத்திலிருந்தே புது தில்லியுடன் தொடர்ந்து சுமுகமான தொடர்பில் இருந்து வருவது பாகிஸ்தான் நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறானதாகும்.  பாகிஸ்தான் தலைவர்களை இந்திய தலைவர்களுடன் தொடர்பு கொள்ள வைக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருந்தாலும் கூட அவை யாவும் இறுதிகட்டத்தை எட்டவில்லை.

இந்தியாவை ஆளும் மூத்த அலுவலர்களை பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி அரசு முறையல்லமால் சந்தித்து உரையாட துபாயில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.  பாகிஸ்தான் மற்றும் இந்திய தரப்புகளுக்கிடையே இது போன்ற சில நிகழ்வுகள் பிப்ரவரி இறுதியிலும் நிகழ்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.  இந்த கூட்டத்திற்கு இரு தரப்பு வெளியுறவு துறை முன்னாள் தூதர்கள், அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இரு தரப்பு பதட்டங்களை கட்டுக்குள் வைப்பதற்கு இணை பேச்சுவார்த்தை அமைப்பு குறித்து இஸ்லாமாபாதின் சிந்தனைஅமைப்பு ஒன்று சிந்தித்துகொண்டிருக்கிறது.

இந்த பதட்டமான பதிலடிகளுக்கு பின்னால் இருக்கும் முக்கிய பிரச்னை என்னவென்றால் இஸ்லாமாபாதுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கான சாத்தியகூறுகள் எப்போதையும் விட 2019-ல் அதிகமாக இருப்பதேயாகும்;  அப்படி தோல்வியடையும் பட்சத்தில் அதற்கான கொடுக்கப்படவேண்டிய அரசியல் விலை மிக அதிகமாக இருக்ககூடும்.  இத்தகைய சூழ்நிலையில், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கொண்டிருப்பது என்பது மிகவும் சவாலுக்குரிய விஷயமாகும்.  2015 ஆம் ஆண்டிலிருந்து, இந்திய அரசானது, `விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தையை’  துவக்க முயன்று வருகிறது.  ஆனால் அடிக்கடி எல்லைக்கோட்டருகே நிகழ்ந்துவரும் ப்ரச்னைகளும், பாகிஸ்தான் பகுதியிலிருந்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களின் காரணமாக  இந்த முயற்சிகள் வெற்றி பெறமுடிவதில்லை.    மிகப் பெரும் பொறுப்பை உள்ளடக்கிய சர்வதேச ராஜதந்திர விவகாரங்களில் பொறுப்பற்று பாகிஸ்தான் அடித்துவரும் எண்ணிலடங்கா பல்டிகள் முன்பு போல் கணக்கிலெடுப்பவர்கள் தற்போது எவரும் இல்லை என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்.  தற்போதிருக்கும் நிலவரமானது  இஸ்லாமாபாத் தனது வார்த்தைகளிலும் செயல்களிலும் மிகவும் கவனமாகவும், அளவாகவும் இருக்கவேண்டிய காலகட்டமாகும்.