சீனாவின் அபத்தமான எதிர்ப்பு.

(ஜேஎன்யூ கிழக்காசிய மையத் தலைவர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள சே லா வில் சுரங்கப் பாதைத் திட்டத்தைத் துவக்க அங்கு பயணித்ததற்கு, எதிர்பார்த்ததைப் போல, தனது வழக்கமான எதிர்ப்பை சீனா வெளியிட்டுள்ளது. இத்திட்டம், தவாங் பகுதியை மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கும். சீனாவின் இந்த எதிர்ப்பு, வழக்கமான, குறிப்பிட்ட வடிவில் வரும் எதிர்ப்பாக உள்ளது.

பல பதிற்றுக்களுக்கு முன்னதாக, அருணாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்தைப் பெற்ற சமயத்திலிருந்தே, ஒவ்வொரு ஆண்டும் சீனா வழக்கமான எதிர்ப்புக் குறிப்புக்களை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஒரு ரயில்நிலையத்தைத் துவக்கவும், மின்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவும் அருணாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். இதற்கு, சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் தனது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டார். அப்போது, சீனாவுக்கான இந்தியத் தூதர் வரவழைக்கப்பட்டு, கண்டனம் பதிவு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு தலாய் லாமா, அருணாச்சலப் பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டபோதும், சீன எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் 2018 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்துக்குப் பயணித்த போதும் சீனவின் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள தவாங் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பிரதிநிதிகள், துடிப்பான ஜனநாயக அமைப்புடன்  கூடிய இந்திய நாடாளுமன்றத்திற்குப் பிரதிநிதியாக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். அருணாச்சலப் பிரதேசத்தையோ அல்லது அதன் பகுதிகளையோ பிரித்துக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூரினார். அவரது பயணத்துக்கு சீனா வருத்தம் தெரிவித்தது.

அருணாச்சலப் பிரதேச முத்லமைச்சரின் அழைப்பை ஏற்று, அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா அவர்கள், 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக, 1962 ஆம் ஆண்டில், இந்திய, சீன எல்லைக்கோடாக இருப்பது மெக்மோஹன் எல்லைக்கோடு என்று அமெரிக்கா தெளிவுபடக் கூறியது. இருந்தும், சீனா அதனை மறுக்கும் தொணியிலேயே உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் இறையாண்மை குறித்து, இந்தியாவுக்கு சாதகமாகப் பேசிய ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ அஸோவுக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அருணாச்சலப் பிரதேசத்தைப் பொருத்தவரை, ஒன்றும் செய்ய இயலாத நிலையில், அம்மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சீனா இடையூறு விளைவிக்கிறது. அம்மாநிலத்தின் எத்தகைய உயர் பதவி வகிப்போராக இருந்தாலும், சீனா விசா வழங்க மறுக்கத் துவங்கியது. மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை.

அருணாச்சலப் பிரதேசத்தின் சாதாரணக் குடிமக்களுக்கு, இணைப்புக்களுடன் கூடிய விசாவை சீனா வழங்கத் துவங்கியது. உடனடியாக, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இத்தகைய விசாக்கள் வெளிநாடு செல்லத் தகுதி படைத்தவை அல்ல என்ற அறிவுறுத்தலை இந்தியா வெளியிட்டது.

சீனா இணைப்புக்களுடன் கூடிய விசா வழங்கியது, பயணிகளுக்கு மிகுந்த இன்னல்களையும் ஏமாற்றத்தையும் அளித்தது. இணைப்புக்களுடன் கூடிய சீனா விசாவால், 2011 ஆம் ஆண்டு, சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த கராத்தே அணி, புதுதில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோன்று, 2012 ஆம் ஆண்டு, பளுதூக்குப் போட்டியில் ஈடுபடும் வீரர்களும் அனுமதி மறுக்கப்பட்டனர்.

2014 ஆம் ஆண்டில், தேர்தல் பிரச்சாரத்துக்காக அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பஸ்ஸிகாட் என்னுமிடத்துக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோதி, அண்டைநாடுகளுக்குள் தங்கள் எல்லையை விரிக்கும் சீனாவின் மனப்பாங்கைக் கண்டித்துப் பேசினார். 2014 ஆம் ஆண்டில் ஆட்சிப் பதவியேற்றவுடன், சீனாவுக்கான துடிப்பான கொள்கையை வழிநடத்தினார். ஒரு சீனா கொள்கைக்கு இந்தியா எடுத்துள்ள உறுதிப்பாட்டுக்குப் பிரதியாக சீனாவிடமிருந்து கொள்கையை எதிர்பார்த்தார் அவர். எதிர்பார்த்தபடி சீனா செயல்படாததையடுத்து, மாநிலத்திலும், எல்லையோரப் பகுதிகளிலும் உள்கட்டமைப்புத் திட்டங்களை இந்தியா துரிதப்படுத்தத் துவங்கியது. சாலை நிர்மாணம், எல்லைப் பகுதிகளில் மக்கள் தொகை மீண்டும் அதிகரிப்பு, நவீன விமான இறங்கு தளத்தை முறையான விமான நிலையமாக உயர்த்துவது, மாநிலத்தில் மூன்று விமானப் படைத் தளங்களை அமைப்பது ஆகியவை இவற்றில் அடங்கும். அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிர்முனையில், திபேத் பகுதியில் நியாங்கியில் ராணுவப் போக்குவரத்தை சீனா விரிவுபடுத்துவதற்கு எதிராக, இந்தியா இந்த உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாஜக தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி, சீனாவுடனான எல்லைப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோதிக்கும், சீன அதிபர் திரு ஸீ ஜிங்பிங்குக்குமிடையில், வூஹானில் நடந்த முறைசாரா சந்திப்புக்குப் பின்னரும், அருணாச்சலப் பிரதேசம் குறித்து, காரணம் இன்றி, சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய எல்லையைப் பாதுகாக்க, இந்தியா அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறது. சர்ச்சைக்குரிய மற்றொரு எல்லைப் பகுதியான அக்சாய் சின் பகுதியில், சீனாவின் ராணுவ நடமாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய, சீன எல்லையில் அமைதி நிலவ தான் எடுத்துக் கொண்ட உறுதிப்பாட்டை சீனா மதிக்க வேண்டும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்.