மீண்டும் ஒரு முறை பாகிஸ்தானின் தேவையற்ற தலையீடு.

(ஆல் இந்தியா ரேடியோ செயலுத்தி ஆய்வாளர்  கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தேவையில்லாமல் மீண்டும் மூக்கை நுழைத்துள்ளார். இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் நிலைகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவரது அபத்தமான குற்றச்சாட்டு, இந்தியாவில் அனைவரும் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து இணக்கமாக வாழும் இயல்பு நிலைக்கு முற்றிலும் மாறாகவும், இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது. மேலும், மதசார்புடைய ஒரு நாட்டின் தலைவர் இப்படிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசும் மக்களும் திரு. கானின் விமரிசனத்தை வெகுவாகக் கண்டித்துள்ளனர். ‘இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை மற்றும் பண்புகளைப் பற்றிய புரிதல் தனக்கு இல்லை என்பதை பாகிஸ்தான் பிரதமர் மற்றொரு முறை எடுத்துக்காட்டியுள்ளார். இந்தியாவின் ஜனநாயக அரசியல் முறை மற்றும் முற்போக்கான அரசியலமைப்பின் கீழ், அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் நிறைவாக வாழ்கிறார்கள் என்ற ஒரு நிதர்சனமான உண்மையை அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘பாகிஸ்தான், கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதை விட, தனது உள்நாட்டுப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி, தனது மக்களின் நிலையை மேம்படுத்துவத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்’ என இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் அறியாமையை எண்ணி, அவரது விமரிசனத்தை உதாசீனப்படுத்த முடியாது, அவரது கூற்றின் மூலம், திரு. இம்ரான் கானுக்கு போதுமான புரிதல் இல்லை என்பது தெளிவாகிறது. ஒரு கவனத்தை ஈர்க்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரராக இந்தியர்களுக்கு திரு. இம்ரான் கானைத் தெரியும். கிரிக்கெட் விளையாட்டில் இந்திய வீரர்களுக்கு வலுவான போட்டியைக் கொடுத்துள்ளதோடு, அவர், இந்தியாவிற்கு பல முறை வந்து, பல இடங்களில் விளையாடியுள்ளார். மற்ற நாட்டு வீரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், விளையாட்டு வீரர்களுக்கு இந்திய மக்கள் என்றுமே மதிப்பும் மரியாதையும் அளிப்பவர்கள். ஆகையால், திரு.கான் தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் பல இந்தியர்களை பாதித்துள்ளன.

மதசார்புத் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனது நாட்டில், சிறுபான்மையினருக்கு இடமில்லை என்ற உண்மையை பாகிஸ்தான் பிரதமர் நினைத்துப் பார்க்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், பெரும்பான்மை மக்கள் வாழும் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலை அங்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். அப்படி ஏற்றுக்கொள்ளாவிடில், அவர்கள் நாட்டின் அங்கமாக இருக்க முடியாது. பாகிஸ்தானில் ‘சிறுபான்மையினர்’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. அது மதம், மொழி, இனம் சார்ந்தவையாகவும் அல்லது மக்கள் ஆடையுடுத்தும் முறை சார்ந்ததாகவும் கூட இருக்கலாம்!

பாக் பிரதமரின் பிரதான ரசிகராக விளங்கிய ஜெனரல் ஸியா-உல்-ஹக், பாகிஸ்தான் பெண்கள் சேலைகள் அணியத் தடை விதித்தார் என்பதை அவர் மறந்திருக்க மாட்டார். அப்போதிருந்த பாகிஸ்தான் அதிபர், சேலை என்பது ஒரு வெளிநாட்டு ஆடை வகை எனக் கருதியதால், இந்தத் தடை விதிக்கப்பட்டது. இந்த ஃபாத்வாவைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பலத்த போராட்டங்கள் நிகழ்ந்தன.

பாகிஸ்தானில், மொழியால் சிறுபான்மையினராக இருக்கும் சிந்திக்களும் பலுச் மக்களும் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள். பல காலமாக பஞ்சாப்-சிந்த் போட்டி இருந்து வருகிறது. உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான சிந்தி மொழியைப் பேசுபவர்களிடம் பாகுபாடு காண்பிக்கப்படுகின்றது.

பலுச் மக்களின் நிலையும் அதுதான். பலுச் மக்கள் தங்களை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுவதில்லை. ஆகையால், பாகிஸ்தான் அரசு அவர்களை இழிவுபடுத்துகிறது.

பாகிஸ்தானில், இறை நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஆசியா பீபி என்ற கிறித்துவப் பெண்மணி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு, அவர் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடிப்படைவாத அமைப்பான ‘தெஹ்ரீக்-ஏ-லப்பைக்-பாகிஸ்தான்’, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய இரட்டை நகரங்கள் மீது முற்றுகை இட்டது. அந்த அமைப்பின் இந்தச் செயல்களுக்கு திரு. கானின் அரசாங்கம் ஏன் அடிபணிந்தது என உலகிற்கு அவர் விளக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், அந்தப் பெண்மணியின் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அவருக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தால் பாதுகாப்பு அளிக்கமுடியாத நிலையில், அவரும் அவரது குடும்பமும் வேறொரு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டிலிருந்தே, ஆசியா பீபியின் வழக்கறிஞர் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசியா பீபியின் சார்பில் ஆஜரானதால் அடிப்படைவாதக் குழுக்களால் அவர் தாக்கப்பட்டார்.

ஆகையால், பாகிஸ்தான் பிரதமரின் வெற்றுக் கருத்துக்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்பது தெளிவாகிறது. இந்தியா, ஜனநாயகம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் உருவான நாடாகும். ஒவ்வொரு இந்தியனுக்கும், தனது மத நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடு செய்யும் உரிமையை இந்திய அரசியலமைப்பு அளித்துள்ளது. மொழி, உணவு வகைகள் அல்லது உடைகளின் அடிப்படையில் இங்கு மக்களிடையே பாகுபாடு பார்க்கப்படுவது இல்லை. இது திரு. கானுக்கும் நன்றாகத் தெரியும். எனினும் பாகிஸ்தானின் கரடுமுரடான அரசியல் கொள்கைகளின் நிலவரம் அவரை இந்தியாவிற்கு எதிராக இப்படிப்பட்ட பழிச்சொற்களைப் பேச வைக்கிறது.

திரு. இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமர் பொறுப்பேற்று சுமார் ஒரு வருட காலத்தில், புதிய பாகிஸ்தானை உருவாக்கப்போவதாக அவர் அளித்த உறுதி எங்கோ தொலைந்து விட்டது. அமெரிக்கா போன்ற முன்னாள் நட்பு நாடுகளும் பாகிஸ்தானைத் தவிர்க்கின்றன. பாகிஸ்தானுக்கு, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா போன்ற நாடுகள் அவ்வப்போது சிறிய அளவில் உதவி வருகின்றன. இந்த நிலையிலும், இந்தியா மீது அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதை மட்டும் அந்நாடு எந்தத் தடையும் இன்றி செய்துவருகிறது.

மொத்தத்தில், கண்ணாடி வீடுகளில் வசிப்பவர்கள் மற்றவர் மீது கல் வீசக் கூடாது என்பதை திரு. இம்ரான் கான் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

________________