ஊக்கம் பெறும் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி.

(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் மூத்த சிறப்பு நிருபர் மணீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில், சீனாவிற்கு இந்தியாவின் விவசாய ஏற்றுமதி, திருப்திகரமான 70 சதவீதம் அளவு உயர்ந்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக இடைவெளி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், சீனா, இந்தியாவின் விவசாயப் பொருட்களுக்குத் தனது கதவை மேலும் திறந்துள்ளது. சீனா, மொத்தம் 870 கோடி டாலர் அளவிலான விவசாயம் சார்ந்த பொருட்களின் வருடாந்திர இறக்குமதிக்கு, இடம் அளித்துள்ளது, இந்தியாவைப் பொறுத்தவரை, மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவின் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு உலக அளவில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்திய விவாசாயப் பொருட்களுக்குப் பல நாடுகள் தங்களது கதவுகளைத் திறந்துள்ளன. சீனாவிற்கு இந்திய விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி, 2018-19 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூபாய் 453 கோடியை அடைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ரூபாய் 267 கோடியாக இது இருந்தது என்று, விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையம், அபீடா (APEDA) , தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது 69 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியாவின் விவசாயம் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில், அடுத்த மூன்று மாதங்களில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக இடைவெளியை இந்த உலகம் உற்று நோக்கி வருகிறது. அமெரிக்காவின் சோயாபீன்ஸிற்கு சீனா 25 சதவீதம் இறக்குமதி வரியைத் திணித்துள்ளது. அதேசமயம் சீனா, சோயாபீன்ஸை ஆசிய நாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கான நுழைவுத் தடைகளை அகற்றியுள்ளது. ஆகையால் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தின் விவசாயிகள் சோயா பீன்ஸைப் பயிரிடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நிகர அளவில், சீனா, அரிசி இறக்குமதி செய்யும் நாடாக விளங்குகிறது. இந்தியா அபிரிமிதமாக அரிசி உற்பத்தி செய்கிறது. இந்திய ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் வகையில், சீனா, சமீபத்தில் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது. இந்தியா தற்பொழுது பருப்பு வகைகளையும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. விவசாயிகளுக்கு உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பு அளித்ததன் மூலம், சமீப காலத்தில் இந்தியா, பருப்பு வகைகளை விவசாயம் செய்வதில் சாதனை படைத்துள்ளது, இதனால் உபரியாக உள்ள பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய முடிகிறது.

இருப்பினும், அதிகப்படியான வர்த்தகப் பற்றாக்குறையை சீனாவுடன், இந்தியா கொண்டுள்ளது. இந்த வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில் 6,300 கோடி டாலர் அளவு எட்டியுள்ளது. இது அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது. இந்த அதிகளவிலான பற்றாக்குறை ஏற்புடையதல்ல என்று இந்தியா, சீனாவிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. அரிசி உட்பட விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு இடம் அளிக்கும்படி சீனாவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது.

இந்தியாவின் ராஜீய முயற்சிகள் பலனளித்துள்ளன. தற்பொழுது வர்த்தகப் பற்றாக்குறை குறைந்து வருகிறது. 2018 19 ஆம் வருடத்தின் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, வர்த்தகப் பற்றாக்குறை 3300 கோடி டாலராகக் குறைந்துள்ளது ,இதே காலகட்டத்தில் கடந்த நிதியாண்டில் இது 3,600 கோடி டாலராக இருந்தது.

சாகர்மாலா திட்டத்தின் மூலம் இந்தியாவின் துறைமுகங்களை மேம்படுத்துவது, சாலை மற்றும் ரயில் தொடர்புகளை ,கடைசி மைல்கள் வரை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் மீது இந்தியா கடந்த சில வருடங்களில் கவனம் செலுத்தியதன் மூலம், உலக சந்தையை எட்ட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது. மேற்காசியா, ஆசியான் நாடுகள், ஐரோப்பா, மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தை இந்தியா விரிவு படுத்தி, இந்திய விவசாயப் பொருட்களுக்கு புதிய சந்தைகளை உருவாக்கியுள்ளது. தவிர, இந்திய தொழில் முனைவோர் விவசாயப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தேவையான முதலீடுகள் மற்றும் கட்டமைப்புக்கள் ஆகியவற்றை ஏற்படுத்தியது, இந்திய விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக ஊக்கமளித்துள்ளது. தற்பொழுது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து அன்னாசிப்பழம் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் திராட்சைப்பழங்களை இறக்குமதி செய்வதற்கு சீனாவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புதல் அளித்துள்ளன.

உலக அளவில், உறைந்த காய்கறிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியத் தொழில் முனைவோர் தயாராகி உள்ளனர். பால் மற்றும் மீன் பொருட்களும், இந்தியாவின், விவசாயம் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.

இவ்வாறு, இந்தியாவின் விவசாயம் சார்ந்த ஏற்றுமதி ஏறுமுகத்தை எட்டியுள்ளது. தனியார் நிறுவனங்களும் விவசாயப் பொருட்களின் மதிப்புக் கூட்டலுக்குத் தேவையான முதலீடு செய்து வருகின்றனர். உணவுப் பூங்காக்கள் மற்றும் இதர ஊக்குவிப்புகள் மூலம், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோருக்கு உதவி கிட்டியுள்ளது. இந்திய விவசாயிகள் உலக சந்தையை இன்னும் சிறப்பாகக் கையாள்வதற்கு, அறுவடைக்குப் பின்பான மேலாண்மையை மேம்படுத்த இந்தியா இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகள் மேலும் பெருக வேண்டும். சரியான நேரத்தில் சந்தை நுண்ணறிவை இந்திய விவசாயிகளுக்கு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், அதன் மூலம் அவர்கள் எந்தப் பயிர் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் என்று முன்பாகவே அறிந்து அதன்படி செயல்பட முடியும்.

சீனாவிற்கு இந்தியாவின் விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி ஆரோக்கியமான அளவை எட்டியுள்ளது, இத்தகைய வாய்ப்புக்களை உறுதியுடன் கைப்பற்ற வேண்டும் என்பதை நிரூபிக்கின்றது.