நாடாளுமன்றத்தில் இந்த வாரம்.

(பத்திரிக்கையாளர் வி,மோகன் ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

16 ஆவது நாடாளுமன்ற இறுதிக் கூட்டத் தொடர், இருஅவைகளிலும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, முன்னதாகவே, மறு தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருவாரங்கள் நடைபெற்ற மக்களவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோதி, தமது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்து, 85 சதவீத செயல்திறனை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எட்டுவதற்குத் துணைபுரிந்த உறுப்பினர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். பெரும்பான்மையுடன் தமது அரசு 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பைப் பலமடங்கு கூட்டியதாக அவர் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பெருமளவு கூடியதற்கு, தானோ, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களோ உரிமை கொண்டாடவில்லை என்றும், அதற்கான முழுப் பாராட்டும் தேசத்தின் மக்களுக்கே சொந்தம் என்றும் அவர் கூறினார்.

தமது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட பிரதமர், உலகிலேயே ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும், விரைவிலேயே 5 லட்சம் கோடி டாலர் அளவை எட்டவுள்ளது என்றும் கூறினார். இந்தியாவின் தன்னம்பிக்கை தற்போது வானளாவ உயர்ந்துள்ளது என்றும், அது முன்னேற்றப்பாதையில் இந்தியாவை இட்டுச் செல்ல பெரிதும் உதவும் என்றும் கூறினார். கறுப்புப் பணத்தை முடக்க உதவும் மசோதா உள்பட, அறிமுகம் செய்யப்பட்ட 219 மசோதாக்களில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களவையில், 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கை மீதான விவாதத்தின்போது, கேள்விகளுக்குப் பதலளித்துப் பேசிய நிதியமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், நாடு மிகவும் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். அரசின் மிக முக்கிய சாதனையாக, நிதிப் பற்றாக்குறையை 3.4 சதத்துக்குள் முடக்கியதைக் குறிப்பிடலாம் என்று அவர் தெரிவித்தார்.சென்றமாதம், விலைவாசி ஏற்றம், 2.19 சதமாகக் குறைந்தது என்று அமைச்சர் கூறினார். நிதிநிலையறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவுப்புக்கள், நடுத்தர, நேர்மையாக வரி செலுத்தும் மக்களுக்குப் பெரிதும் பலனளிக்கும் விதமாக உள்ளன என்று அமைச்சர் உறுதிபடக் கூறினார். ஜிஎஸ்டி பதிவு செய்த சிறுதொழிலகங்களின் நலனைக்காக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நபர்களைத் தங்கள் வீடுகளின் சொந்தக்காரர்களாக ஆக்குவதற்கு அரசு ஊக்கமளிக்கிறது என்று அமைச்சர் கூறினார். நாடு 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், அனைத்துக் குடிமக்களும் சொந்த வீடு பெறவேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்படுவதாக அவர் கூறினார். வருமன வரி செலுத்துவோர், சேமிப்புத் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்தாலோ, கல்விக் கடல் பெற்றிருந்தாலோ, அவர்களது ஆண்டு வருமானத்தில் 9.5 லட்சம் வரை வரி செலுத்த அவசியமிருக்காது என்று அமைச்சர் கூறினார். முந்தைய அரசு, பத்தாண்டு அட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். தங்களது ஆட்சியில் விவசாயிகளுக்கென பலதிட்டங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினர். 22 பயிர்வகைக்களுக்கான ஆதார கொள்முதல் விலையை தமது அரசு கணிசமாக உயர்த்தியதாக அமைச்சர் கூறினார்.

நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சலுகைகள் அளித்ததன் மூலம், நிதிநிலையறிக்கை அவர்களது நலனில் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தெரிவித்தார். பிரதமரின் “கிசான் சம்மான் நிதித் திட்டம்’, விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.6000/- வங்கிக் கணக்குகளில் நேரிடையாக செலுத்தும் திட்டம் குறித்து, குறை கூறுபவர்கள், அத்தொகை, ஏழை விவசாயிகளுக்கு எந்த அளவில் உதவும் என்பதை அறியமாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியப் பெண்களை மணமுடித்தபின், அவர்களை நட்டாற்றில் விடாமல் பாதுகாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியப் பெண்களை மணமுடித்தபின், 7 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பழங்குடி வகுப்பினருக்கான சட்ட திருத்த மசோதா 2019, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது, அருணாச்சலப் பிரதேசத்தில் வசிக்கும் பழங்குடியினத்தவருக்கான பட்டியலைத் திருத்துவதற்கு  வழி செய்யும்.