புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்

(ஆல் இந்தியா ரேடியோ செயலுத்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், நேற்று, பாகிஸ்தான் ஆதரவுபெற்ற பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-ஏ-மொஹம்மத் நடத்திய கொடூரமான தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த சுமார் நாற்பது இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊரியிலுள்ள எல்லை பாதுகாப்புப் படை முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று புல்வாமாவில் நடந்த தாக்குதல் ஊரி தாக்குதலுக்குப் பின் நடந்துள்ள மிகப்பெரிய தற்கொலைத் தாக்குதலாகும். இந்தியாவிற்கு மேற்கில் உள்ள அண்டை நாட்டின் பங்கு இந்த கோழைத்தனமான தாக்குதலில் இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.

இந்தக் கொடூரமான, இழிவான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். பாதுகாப்புப் படையினரின் இந்தத் தியாகம் வீண் போகாது என இந்தியப் பிரதமர் உறுதியளித்தார். பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்துள்ளனர். அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில், ‘பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி வெற்றி காண்பதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து நிற்கிறது’ எனத் தெரிவித்துள்ளது. ரஷ்யா, பிரான்சு, இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்தக் கொடூர செயலைக் கண்டித்துள்ளன.

ஜெய்ஷ்-ஏ-மொஹம்மத் என்ற பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் நடந்துள்ள பல தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்துள்ளது. அதன் தலைவனான மௌலானா மசூத் அஸார், பாகிஸ்தானை இருப்பிடமாகக் கொண்ட, அந்நாட்டு அரசாங்க ஆதரவுடன் செயல்படும்  ஒரு சர்வதேச பயங்கரவாதியாவான். 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பைத் தாக்குதல்களிலும் அஸாருக்குப் பங்குண்டு. இருப்பினும், இந்த பயங்கரவாதத் தலைவனின் அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் கண்டும் காணாமலே இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரைப் பொறுத்த வரை, இந்தியா முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்ட கொள்கையையே பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாதிரி மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அங்கு பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்திய பாதுகாப்புப் படைகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு, எல்லைக்கு அப்பாலிலிருந்து எழும்பும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கையாள்வதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

சர்வதேச சமூகம், பாகிஸ்தானால் போடப்பட்டுள்ள திரையை அகற்றி, பாகிஸ்தானின் கொடூரமான செயல்களுக்காக அந்நாட்டிற்கு எதிராக கடினமான எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையும் சமயோஜிதமாக செயல்பட்டு, பாகிஸ்தானுக்கு எதிராக திடமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். 2018 ஆம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச் சபையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் போடும் இரட்டை வேடத்தைப் பற்றித் தெரிவித்தார்.

பல சூழ்ச்சிகளைச் செய்தும் பாகிஸ்தான் இதுவரை சர்வதேச அளவில் பெரிதாக எந்த பாதிப்பும் இன்றி நழுவி வருகிறது. எனினும், சர்வதேசத் தடைகளை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் நாள் வெகு தூரம் இல்லை. ஏற்கனவே, பாகிஸ்தான் பல உள்நாட்டுப் பிரச்சனைகளால் திணறிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இன்னும் அந்நாட்டிடம் ஒரு தெளிவான கொள்கை இல்லை. அனைத்து விதமான பயங்கரவாத இயக்கங்களும் பாகிஸ்தானை தங்கள் அடித்தளமாகவும் புகலிடங்களாகவும் கொண்டுள்ளன என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களுக்கு எந்தத் தடையையும் விதிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் சில பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, அதை நடக்கவிடாமல் பாகிஸ்தான் ராணுவம் தடுத்து நிறுத்தியது. ஐ.எஸ்.ஐ போன்ற பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களே பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கின்றன என்பதும் அனைவரும் அறிந்ததே. அநேகமாக, இந்தியாவில் நடந்துள்ள அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களுமே, தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

‘ஆயிரம் வெட்டுக்கள் மூலம் இந்திய ரத்தத்தைக் கசியவைப்பதை’ பாகிஸ்தான் ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகிறது என்பது உண்மை. ஊரி தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லையிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற துல்லியத் தாக்குதலை இந்தியப் படைகள் நடத்தின. இருப்பினும், இன்னும் பாகிஸ்தான் இப்படிப்பட்ட தாக்குதல்களின் மூலம் இந்தியாவை சீண்டிக் கொண்டிருக்கின்றது. வழக்கமான போர் முறைகளிலோ, மற்ற முறைகளிலோ இந்திய ராணுவத்தை சமாளிக்கும் திறன் தனக்கில்லை என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் பாகிஸ்தான், தன்னுடய ராணுவ வீரர்களை இழக்காத வண்ணம், இப்படிப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் மூலம் இந்தியாவைக் குறிவைக்கிறது.

புல்வாமா தாக்குதலைத்  தொடர்ந்து, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் மேலும் சரிவைக் காணலாம். இரு நாடுகளுக்கும் இடையில் மூத்த நிலை அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து நான்கு ஆண்குகளாகின்றன. நல்லெண்ண அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் புதுமையான முறையில் பாகிஸ்தானுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார். எனினும் இதற்கு ஒரு வார காலத்திற்குப் பின்னர், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், பதான்கோட்டிலுள்ள இந்திய விமானத் தளத்தில் தாக்குதல் நடத்தினர். 1999 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தில்லி-லாஹூர் பேருந்துச் சேவையை துவக்கி வைத்தார். அதே ஆண்டு, பாகிஸ்தான் கார்கில் போரைத் துவக்கியது. உறவுகளை மேம்படுத்த இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாகிஸ்தானால் மறுக்கப்பட்டுள்ளதோடு, நல்லெண்ணத்திற்குப் பதிலாக நாசவேலையையே அந்நாடு திருப்பிக் கொடுத்துள்ளது என்பதற்கு சரித்திரம் சாட்சி.

இந்தியா, பல காலமாக, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுக்குப் பொறுமை காத்து விட்டது. ஆனால், இந்தியாவின் இந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. தான் போதிப்பதையே பின்பற்ற வேண்டியது பாகிஸ்தானுக்கு மிக அவசியமாகும். இந்திய வீரர்களைக் கொன்று குவித்தவர்களுக்கு பாகிஸ்தான் தண்டனை வழங்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் ஒப்புக்கொள்ளப்படது போல, பாகிஸ்தான், பயங்கரவாதிகளையும் பயங்கரவாத இயக்கங்களையும் தனது மண்ணிலிருந்து அகற்ற வேண்டும். அப்போதுதான், இந்தியாவுடனான உறவுகளை பாகிஸ்தானால் சீர் செய்துகொள்ள முடியும்.