(அரசியல் விமரிசகர் சுனில் கடாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)
சமீபத்தில் நடந்து முடிந்த பெட்ரோடெக் 2019 மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, வெனிசுவேலா, இந்தியாவுக்குத் தனது பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க முடிவு செய்ததைக் குறிப்பிடலாம். தனது கச்சா எண்ணெய்த் துறை அமைச்சரை பெட்ரோடெக் 2019 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு அனுப்பியது வெனிசுவேலா, அவர், இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிடம் வெனிசுவேலிருந்து கச்சா எண்ணெய்க் கொள்முதலை இரட்டிப்பாக்குமாறு வலியுறுத்தினார். முதலில் வெனிசிவேலாவின் எண்ணெய்த் துறை அமைச்சர் இம்மாநாட்டில் பங்கேற்க திட்டமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிடமிருந்து தாராளமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் இந்தியாவுக்கு அமெரிக்கா மூலம் அழுத்தம் வரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் வெனிசுவேலா இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கி உதவ முன்வந்துள்ளது வரவேற்புக்குறியது.
அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, வெனிசுவேலா, தற்போது பெரும் அரசியல் சிக்கலில் ஆழ்ந்துள்ளது. வெனிசுவேலா, தனது எண்ணெய் வளங்கள் மூலம் நிதிநிலையை சீராக்கிக் கொள்ள, இத்தடைகள் முட்டுக்கட்டை போடுகின்றன.
சென்ற மாதம் அமலுக்கு வந்த அமெரிக்கத் தடைகள் காரணமாக, வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய வாடிக்கையாளரான இந்தியா போன்ற நாடுகளுக்கு, ரொக்க கொள்முதல்பேரில், எண்ணெய் வழங்க வெனிசுவேலா ஆர்வம் காட்டுகிறது.
கடந்த 25 ஆண்டுகளாக, பெட்ரோடெக் மாநாடு, எரிசக்தித்துறையில் இந்தியா சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண உதவி வந்துள்ளது. எரிசக்தித்துறையின் எதிர்காலம் குறித்தும், உலகில் நிகழும் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் குறித்தும், அவை எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மை, வருங்கால முதலீடுகள் ஆகியவற்றில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பன போன்ற விஷயங்களையும் அலச, பெட்ரோ டெக் மாநாடு பெரிதும் உதவுகிறது.
பெட்ரோடெக் 2019 மாநாட்டின்போது, அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி ஒரு இந்திய நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, கர்நாடகாவில் இரண்டாவது முறையாக, பாடூரில் பூமிக்கடியில் கட்டப்பட்டுள்ள 25 டன் கொள்ளளவுள்ள கிடங்கில் பாதியை அந்நிறுவனம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளும்.
கர்நாடகாவில் மங்களூருவிலும், பாடூரிலும், ஆந்திராவில் விசாகப் பட்டினத்திலும், 53.3 லட்சம் டன் கொள்ளளவுள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை பூமிக்கடியில் இந்தியா நிறுவியுள்ளது. அவசர காலத் தேவைக்கு, சேமிப்புக் கிடங்கில் உள்ள எண்ணெயை இந்தியா உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன், இந்தியா, அயல்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு, தனது கிடங்குகளில் சேமிக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஈரானிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்துள்ள விதிவிலக்குக்கான காலக் கெடுவை நீட்டிக்க இந்தியா முயன்று வரும் வேளையில், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பெட்ரோடெக் மாநாடு நடந்துள்ளது. இதில் 90 நாடுகளுக்கும் மேல் பங்கேற்றுள்ளன. இந்தியா, சீனா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென்கொரியா, தாய்வான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதில் உள்ள தடையிலிருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. ஆனால் இந்த விலக்கு வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த பெட்ரோடெக் மாநாட்டில், ஆசிய நுகர்வு நாடுகள், தாங்கள் ஒபெக் கூட்டமைப்பிலிருந்து அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டியுள்ள நிலையை எடுத்துரைத்தன.
உலக அளவில் எண்ணெய் விலையில் நிகழும் ஏற்றத் தாழ்வுகள், தனது பொருளாதாரத்தில் அதிக தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும், எனவே, தானாகவே முன்வந்து, எண்ணெய்க் கொள்முதலுக்கான வழிகளை அதிக நாடுகளுக்கு விரிவுபடுத்த அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதையும் இந்தியாவுக்கு உணர்த்தும் மேடையாக இந்த பெட்ரோடெக் மாநாடு விளங்குகிறது.
மாநாட்டில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு எரியாற்றலின் பங்களிப்பை நெத்தியடி போல் விளக்கினார். சரியான, ஸ்திரமான விலையில், நீடித்த எண்ணெய் சப்ளை, துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். பொருளாதார வளர்ச்சியின் பயன்களை ஏழை எளிய மக்களும் அனுபவிக்க இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது, எண்ணெய் நுகர்வுக்கான முக்கியத்துவம், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது என்று அவர் கூறினார். தனது கச்சா எண்ணெய்த் தேவைகளில் 80 சதவீதத்துக்கு மேல் இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, கடந்த ஆண்டில் இந்திய ரூபாய் கணக்கீட்டில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது பெரும் சவாலாகும்.
விலையேற்ற அதிர்ச்சிகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, இந்தியா அதிக நாடுகளிடமிருந்து கொள்முதலை விரிவுபடுத்துவது குறைந்த காலத் தீர்வாக அமையும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால், புவிஅரசியல் சார்ந்த ஈரான் போன்ற விஷயங்களில் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. நடப்பாண்டில், ஓபெக் கூட்டமைப்பைத் தாண்டி, பிற நாடுகளிடமிருந்து வரும் அதிக எண்ணெய் சப்ளையை நுகர்வதில் உலகநாடுகள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என, சர்வதேச எரியாற்றல் மையம் கணித்திருப்பது இந்தியாவுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.