தீவிரவாதத்தை ஒழிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு.

(ஐ.நா. வுக்கான, இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி அஷோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

கடந்த வாரம், ஜம்மு- காஷ்மீரில்,  புல்வாமாவில் மத்திய பாதுகாப்புப் படையினரின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல வீரர்கள் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்குத் தான் காரணம் என்று, பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்பட்டு வரும் ஜெயிஷ் ஏ முகம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்புக்கான அத்தியாவசியத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஜனநாயகம் தழைத்துள்ள இந்தியாவில், நாட்டிற்குள் பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிர்வாகக் கொள்கைகளை அரசு நம்பியுள்ளது. எனினும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வரும் இந்தியா, பலகாலம் முன்னதாகவே, பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையில், விரிவான, சர்வதேச தீவிரவாதம் குறித்த மாநாட்டிற்கு இந்தியா குரலெழுப்பி வருவது இதற்குத் தெளிவான  உதாரணமாகும். இம்மாநாட்டின் முக்கிய, சட்ட ரீதியிலான கொள்கையின்படி, உறுப்பு நாடுகள், தங்கள் நாட்டிலுள்ள தீவிரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பதோ, நாடு கடத்துவதோ கட்டாயமாக்கப்படுகிறது. இத்தீர்மானம் நிறைவேறுவதற்கு முட்டுக்கட்டை போடும் நாடுகளில் பாகிஸ்தான் முதன்மையாக விளங்குகிறது.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை, தீவிரவாதத்தை ஒடுக்கத் தேவையான சர்வதேச முயற்சிகளில் தீவிரம் காட்டியது. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் உடன்பட வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விதியாகும். பாதுகாப்புச் சபையிலுள்ள ஐந்து நிரந்தர உறுப்புநாடுகளின் வீட்டோ அதிகாரத்தின் மூலம், இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பாதுகாப்புச் சபையால் பட்டியலிடப்பட்ட உறுப்புநாடுகள் மீது, விரிவான பொருளாதார, வர்த்தகத் தடைகள், தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை, பயணம் மேற்கொள்ளத் தடை, நிதி மற்றும் சந்தைப் பொருட்களில் கட்டுப்பாடு ஆகியவற்றை சுமத்துவது, பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகளுக்குள் அடங்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் ஏ தொய்பாவினால் 2008 ஆம் ஆண்டு, டிசம்பர் 10 ஆம் தேதி நடத்தப்பட்ட மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபை எந்த அளவுக்குத் திறனுடன் செயல்படுகிறது என்பதைக் காண, ஒரு லிட்மஸ் சோதனைச் சூழல் உருவாகியது. எனினும், மும்பைத் தாக்குதல் நடந்து பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும், பட்டியலிடப்பட்ட நபர்கள்மீது தடைகளை சுமத்த வேண்டும் என்ற இந்தியாவின் தொடர் கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு, பாகிஸ்தானுக்காக சீனா வலுவாக ஆதரவு கொடுத்து வருவதே காரணம்.

ஜெயிஷ் ஏ முகம்மதுவின் தலைவன் மசூத் அஸரும், மற்ற இரு தீவிரவாதிகளும், 1999 ஆம் ஆண்டு, கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் ஐ.சி.814 விமானத்தின் 155 பொதுஜன பிணைக் கைதிகளுக்குப் பதிலாக, இந்தியாவால் விடுவிக்கப்பட்டனர். 2001 ஆம் ஆண்டு முதற்கொண்டே, ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தடைகளுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட, புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெயிஷ் ஏ முகம்மது, ஆஃப்கானிஸ்தான் மீதும், அங்குள்ள சர்வதேசப் படைகள் மீதும், அல் கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாதக் குழுக்களுடன் இணைந்து தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது. ஸ்ரீநகரில், சட்டசபையின் மீது, 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், பின்னர் அதே ஆண்டு, டிசம்பர் மாதம், புதுதில்லியிலுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீதும் ஜெயிஷ் ஏ முகம்மது தாக்குதல் நடத்தியது.

2016 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பதான்கோட்டிலுள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீதும், செப்டம்பர் மாதம் ஊரி யிலும் ஜெயிஷ் ஏ முகம்மது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தடை செய்யப்பட்ட பட்டியலில் அஸர் மசூதை இணைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள, பெரும்பான்மையான பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் முன்வந்தன. எனினும், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்ட போட்டு வருகிறது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை, தனது பட்டியலிடப்பட்ட நபர்கள் அல்லது அமைப்புக்கள் மீது தடைகளை முனைப்புடன் செயல்படுத்த முன்வர வேண்டும். பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களைப் புறக்கணிக்கும் நாடுளைத் தனிமைப்படுத்த இது உதவும். ஆனாலும், இதனை செயல்படுத்தும் திறன், தற்போதைய பாதுகாபுச் சபைக்கு இருப்பதுபோல் தோன்றவில்லை. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், தங்களின் தீர்மானத்தின் பேரில் அனுப்பப்பட்ட அமைதிப் படைகளை குறிவைத்துத் தாக்கிய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஐ.நா. பாதுகாப்புச் சபை தவறிவிட்டது.

புல்வாமா தாக்குதல்களுக்கு ஜெயிஷ் ஏ முகம்மது காரணம் என்ற உண்மையை ஒப்புக் கொள்வதில், ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளிடையே, கருத்தொற்றுமை இல்லை. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள், தங்கள் கண்டனங்களில், ஜெயிஷ் ஏ முகம்மதுவைக் குறிப்பிட்டாலும், பிரிட்டனும், சீனாவும் இதுவரை மௌனம் சாதித்துள்ளன. இந்நிலையில், 2005 ஆம் ஆண்டில், உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டபடி,  ஐ..நா. பாதுகாப்புச் சபை திருத்தியமைக்கப்படுவதே அது திறம்பட செயலாற்றுவதற்கு வழிவகை செய்யும் என்று இந்தியா நம்புகிறது.