இந்தியா – மொராக்கோ உறவுகளுக்கு ஊக்கம்.

( வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மீனா சிங் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

வட ஆப்பிரிக்காவுடனான இணைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஓர் அங்கமாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், மொராக்கோ நாட்டிற்கான தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். மொராக்கோவுடனான இந்தியாவின் உறவுகளுக்கு புத்துயிரூட்டி, இந்தப் பகுதிகளில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவின் செயலுத்திக் கூட்டாளித்துவத்தைத் திடமாக்குவது இந்தப் பயணத்தின் நோக்கமாகும். அட்லாண்டிக் பெருங்கடலும் மத்தியதரைக் கடலும் சங்கமிக்கும், செயலுத்தி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் மொராக்கோ அமைந்துள்ளது. ஆகையால் இந்தப் பகுதிகளில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் நாடாக மொராக்கோ உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் மத்தியில் மொராக்கோ, ‘ஆப்பிரிக்க சிங்கங்கள்’  என அழைக்கப்படுகின்றது. இந்தப் பகுதிகளில் தீவிரவாதப் பிரச்சாரங்களையும், பயங்கரவாதத்தையும் எதிர்க்க மொராக்கோ அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது. மஹ்ரேப் பகுதியில் மொராக்கோவின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் கருத்தாக உள்ளது.

தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடுவதில் மொராக்கோ அரசாங்கத்தின் பங்கை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பாராட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம் மேற்கொண்டபோது, இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்-மொராக்கோ ஆகியவற்றின் முத்தரப்பு உறவுகள், இந்தியாவின் ‘வடக்கை  நோக்கி செயல்படும்’ கொள்கைக்கு ஆதாரமாக இருக்கும் எனக் கூறினார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்புக் கூட்டுறவு பற்றிக் கூறுகையில், ‘மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பகுதி நாடுகளை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தின் கொடூரங்களை துவக்க நிலையிலேயே சரியாகப் புரிந்து கொண்ட ஒரு அரபு நாடு மொராக்கோவாகும். அதன் விளைவாக, இன்று, பயங்கரவாதத்தை முற்றிலுமாக எதிர்த்துப் போராட, பல்முனை செயலுத்தியை மொராக்கோ முன்னிறுத்தி வருகிறது.’ என அவர் கூறினார். ‘ஆப்பிரிக்காவின் சஹாரா மற்றும் சாஹேல் பகுதிகளில் பல நாடுகளுடன் மொராக்கோ பொருளாதாரக் கூட்டுறவை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியா-மொராக்கோ இடையிலான உறவுகளின் துவக்கத்தை நாம் 14 ஆம் நூற்றாண்டிலிருந்தே காண முடிகின்றது’ என்பதையும் இந்தியப் பிரதமர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான ஐ.நா.-வின் நடவடிக்கைகளை மேன்மையான முறையில் ஒருங்கிணைக்க, ஐக்கிய நாடுகள் சபையில், மொராக்கோவின் முயற்சியால், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான நண்பர் குழு’ உருவாக்கப்பட்டது. இதில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. நவீன இஸ்லாமியத்தையும் இந்நாடு பரப்பி வருகிறது. அடிப்படைவாதிகளால் பரப்பப்படும் தீவிர கருத்துக்களுடைய இஸ்லாமிய முறைக்கு இது ஒரு பதிலாகப் பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிற்கும் மொராக்கோ அரசாங்கத்திற்கும் இடையிலான செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் நிலையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்திற்கு ஆறாம் அரசர் முகம்மதும், பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் ஒப்புதல் அளித்தனர். புதிய குறிக்கோள்களை அடையத் தேவையான கூட்டுப் பணித்திட்டங்களையும் முயற்சிகளையும் பற்றி கலந்துரையாட, இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பணிக் குழுவை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்தியா-மொராக்கோ செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள், மொராக்கோ வெளியுறவுத் துறை மற்றும் சர்வதேச கூட்டுறவுக்கான அமைச்சர் திரு. நாசர் பௌரிடாவுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டார். மொராக்கோ அரசர் ஆறாம் முகமதுவையும், அரசாங்கத் தலைவர் திரு. சாத் தின் எல் ஓட்மானியையும் அவர் சந்தித்தார். தீவிரவாத மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் மேன்மையான கூட்டுறவே இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளின் முக்கிய அம்சமாக முன்வைக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு, வீட்டு வசதி மற்றும் மனித குடியேற்றங்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் வர்த்தக விசா வழங்கப்படுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல் ஆகியவற்றில் கூட்டுறவு தொடர்பான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், ரபாத்தில், இந்திய வம்சாவளியினரிடம் இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான கலாச்சார இணைப்புகளை உருவாக்குவது பற்றிப் பேசினார். பயங்கரவாத எதிர்ப்பில் மொராக்கோ காண்பிக்கும் முயற்சிகளை திருமதி ஸ்வராஜ் பாராட்டினார். பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளின் தலைமை நாடாகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பதில் முன்னோடியாகவும் மொராக்கோ விளங்குகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஒரு கூட்டுப் பணிக் குழுவை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. எல்லை தாண்டிய பயங்கரவாதம், சமூக ஊடகங்கள் உட்பட, இணையதளம் பயங்கரவாத அமைப்புகளால் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது, பயங்கரவாதத்திற்கான நிதி உதவிகள், அக் குழுக்களின் ஆளெடுப்பு ஆகியவை உட்பட பயங்கரவாதத்தின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எதிர்க்க ஒரு விரிவான அணுகுமுறையை உருவாக்குவது இந்தப் பணிக்குழுவின் நோக்கமாக இருக்கும்.

பொருளாதாரத் துறைகளில் ஈடுபட மொராக்கோவில் அதிக வாய்ப்புகள் உள்ளன. மொராக்கோ பாஸ்ஃபேட் மற்றும் அதிலிருந்து உருவாக்கப்படும் பொருட்களின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலோகத் தாதுக்கள் மற்றும் உலோகத் துண்டுகள், அரை நிலையில் முடிக்கப்பட்ட தயாரிப்புகள், கனிம ரசாயனங்கள் ஆகியவை இந்தியாவிற்கு மொராக்கோ ஏற்றுமதி செய்யும் மற்ற முக்கிய பொருட்களாகும். பருத்தி நூல், செயற்கையான சிந்தடிக் இழை, போக்குவரத்து உபகரணங்கள், மருந்துகள், விவசாயக் கருவிகள், ரசாயனங்கள், நறுமணப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட உலோகங்கள் ஆகியவை இந்தியா மொராக்கோவிற்கு ஏற்றுமதி செய்யும் முக்கியப் பொருட்களாகும்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் மொராக்கோ பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவில் ஒரு புதிய யுகத்தின் துவக்கமாகப் பார்க்கப்படுகின்றது. மேலும், இந்தப் பயணம், வட ஆப்பிரிக்கப் பகுதிகளைச் சென்றடைந்து அவர்களுடன் வலுவான உறவை உருவாக்குவதற்கான ஒரு ஊக்கம் நிறைந்த முயற்சியாகும்.