அர்ஜென்டினா அதிபரின் இந்தியப் பயணம்.

(சமூக அறிவியல் மைய இயக்குனர், டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

அர்ஜென்டினா கால்பந்து மற்றும் டாங்கோ நடனத்திற்குப் பெயர் பெற்ற நாடாகும். தென் அமெரிக்க நாடுகளில் மக்களுக்கு கால்பந்து தான் கடவுள். அவர்கள் அதிலேயே மூழ்கி விடுவார்கள். மரடோனா ,மெஸ்ஸி மற்றும் பதிஸ்டுவா போன்ற பிரபல கால்பந்தாட்ட வீரர்களின் உருவச் சிலைகள், பியூனஸ் ஏர்ஸ் மற்றும் இதர நகரங்களை அலங்கரிக்கின்றன. கால்பந்து ,நம்பிக்கை உடையவர்களுக்கு இடையே பக்தியைத் தூண்டுகிறது. அர்ஜென்டினா டாங்கோ  நடனத்திற்கும் புகழ்பெற்றது. டாங்கோ தேசிய தினத்தையும் அது கொண்டாடுகிறது. அங்கு டேங்கோ நினைவுச் சின்னமும் உள்ளது. அது யுனெஸ்கோவின் உலக கலாச்சார பாரம்பரியச் சின்னமாகவும் விளங்குகிறது. அர்ஜென்டினாவின் பிராந்திய விவகாரங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மிகவும் மதிக்கப்படுகிறது.

அர்ஜென்டினா, அதிபர் மௌரிசியோ மாக்ரி அவர்களின் தலைமையின் கீழ், வர்த்தக உறவுகளை பல்வேறு நாடுகளுடன் விரிவுபடுத்த முனைந்து வருகிறது. அர்ஜென்டினா, பல தரப்பு ராஜதந்திர தடத்தில் மீண்டும் வந்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டை சில மாதங்களுக்கு முன்பு மிகவும் வெற்றிகரமாக நடத்தியது. பொருளாதார மற்றும் அரசியல் சக்தி, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்துள்ள நிலையில், அர்ஜென்டினா, ஆசிய சக்திகளுடன் நெருங்கிப் பழகும் கொள்கையைக் கையிலெடுத்துள்ளது.

இதன் பின்னணியில் அதிபர் மாக்ரி அவர்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அர்ஜென்டினாவில் முதலீட்டு சூழலை மேம்படுத்துவதற்கு அதிபர் மாக்ரி அவர்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். உலக அளவில் இந்தியாவின் மதிப்பும், பொருளாதார செயல்திறனும் கூடி வருவதால், இந்தியாவை சாத்தியக்கூறுமிக்க சிறந்த கூட்டாளி நாடாக அர்ஜென்டினா கருதுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு, 70 ஆண்டுகள், இந்த 2019 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் அதிபர் மாக்ரி அவர்களின் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் பிரதிநிதிகள் வருகை புரிந்தனர். அவர்கள் மும்பையில் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினர்.

இதர லத்தீன் அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில், அர்ஜென்டைனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உயர்மட்டப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதம்தான் பிரதமர் மோதி அவர்கள் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பியூனஸ் ஏர்ஸுக்குப் பயணித்தார். இரு தலைவர்களும் பலமுறை சந்தித்துள்ளதால், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலைக் கொண்டுள்ளனர். அணு வினியோக குழு, என்எஸ்ஜி யில் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு ,அர்ஜென்டைனா மிகவும் ஆதரவாக உள்ளது.

பிரதமர் மோதி அவர்களுடன், அதிபர் மாக்ரி அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தை, மிக சிறப்பாக அமைந்தது என்பது, கூட்டறிக்கையில் வெளிப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையே, பேச்சுவார்த்தைகளில், பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழித்தடங்களை ஆராய்வது  முக்கிய இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் உடன்பாடு செய்வதன்மூலம் காய்கறிகள், பழ வகைகள், மீன் வகைகள் மற்றும் மது போன்ற துறைகளில் லாபகரமாக இருக்கும் என்று அர்ஜென்டைனா கருதுகிறது. அதிகாரப்பூர்வமான அறிக்கையின்படி, இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மிகவும் ஆர்வமாக உள்ளதால், லித்தியம், அர்ஜென்டைனாவின்  முக்கிய வர்த்தகப் பொருளாக  முன்னிலையில் உள்ளது. அர்ஜென்டினாவில் லித்திய வளம் அதிகமாக உள்ளது. லித்தியம் அதிகளவில் தேவைப்படும் மின்சார வாகனத் துறையில் இந்தியா அதிக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

எரிசக்தி, சுரங்கம், வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஒத்துழைப்பு ஆகிய துறைகளிலும் மற்றும் இதர முக்கியத் துறைகளிலும் இருதரப்புக் கூட்டாளித்துவத்தை வலிமைப்படுத்த இருதரப்பிலும் உறுதியேற்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலிருந்தும் முதலீடுகள் சமீப காலத்தில் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே இதனை துரிதப்படுத்துவதற்காக இருநாடுகளும், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் போன்றவற்றில் கையெழுத்திட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, க்ரிஸில்,,பஜாஜ், காக்நிசெண்ட் டெக்னாலஜி போன்ற நிறுவனங்கள் ,அர்ஜென்டினாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அர்ஜென்டைனாவின் மருந்து நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களை விட அதிகமாக தொழில் புரிவதால், மருந்துத் துறையில் அர்ஜென்டினா இந்தியாவின் மிக முக்கிய கூட்டாளி நாடாகத் திகழும்.

லத்தின் அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது ,அதேபோல் அந்த பிராந்தியமும் இந்தியாவுடன் உறவுகளை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளது. அந்தப் பிராந்தியத்துடன் வர்த்தகம் அதிக அளவில் உயர்ந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். லத்தின் அமெரிக்காவுடன் சீனாவின் வர்த்தகம், 30,000 கோடி டாலரை எட்டியுள்ளது. லத்தின் அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள வர்த்தக அளவைக் காட்டிலும், வர்த்தகப் பொருட்களின் தொகுப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. லத்தீன் அமெரிக்காவுடனான சீன வர்த்தகத்திலிருந்து விடுபட்டு, மொத்த ஏற்றுமதியில் அதிகப் பங்கில், சேவைத் துறையில் வர்த்தகம் புரியும் இந்தியா தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

இந்தியாவின் வளர்ந்து வரும் சர்வதேச கால் தடம், தற்பொழுது லத்தின் அமெரிக்காவின் கொள்கை பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றுள்ளது. அப்பிராந்தியத்துடன் இந்தியாவின் எதிர்கால ஈடுபாடுகளுக்கு இது வழிவகுக்கிறது. இருப்பினும் இந்தியா, வர்த்தகம் மற்றும் வணிக உறவுகளைப் பொறுத்தவரை, முழு சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ள அதிகம் உழைக்க வேண்டியுள்ளது.