பாகிஸ்தானின் வீண் முயற்சி.

காஷ்மீரில் 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களைக் காவு கொண்ட புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடந்து, ஒருவாரம் கழித்து, அரைமனதுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தங்கள் நாட்டின் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட முயன்றுள்ளார். உலகின் கவனம் முழுவதும் பாகிஸ்தானின் மீது திரும்பிய நிலையில், அவரது இம்முயற்சி வலுவற்ற நிலையில் வெளிப்படுகிறது.

பயங்கரவாதத்தைத் தங்கள் ஆட்சியின் கருவியாகவே உபயோகப்படுத்தும் கொள்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது என்பதை உலகறியும். புல்வாமாவில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த தலைவர்களுள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் முன்னிலை வகிக்கிறார். ஐந்து வல்லரசு நாடுகளும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தன. இத்தாக்குதலுக்குக் காரணமாக, ஜெயிஷ் ஏ முகமதுவை அடையாளம் காட்டுவதை, தங்கள் செயலுத்தி லாபங்களுக்காக, சீனா தவிர்த்துள்ளது.

தொலைக்காட்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஆற்றிய உரைக்கு, கடுமையான எதிர் விவாதங்களை இந்தியா முன்வைத்துள்ளது. புல்வாமா தாக்குதலை பயங்கரவாதச் செயலாக ஒத்துக்கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் முன்வராதது ஆச்சரியமளிக்கவில்லை என்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இம்ரான்கான் கூறிய ஒவ்வொரு கருத்துக்கும் நிகரான எதிர் வாதங்களை இந்தியா முன்வைத்துள்ளது. தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ, உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கவோ இம்ரான்கான் முன்வரவில்லை.

பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்திற்கும் பாகிஸ்தான் சம்பந்தப் படவில்லை என்று கூறிவருவது அந்நாட்டின் வழக்கமான பொய்யேயாகும். புல்வாமா தாக்குதலுக்கு ஜெயிஷ் ஏ முகமதுவும், தாக்குதல் நடத்திய தீவிரவாதியும் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும், பாகிஸ்தான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயிஷ் ஏ முகமதுவும், அவ்வமைப்பின் தலைவனான மசூத் அஸரும் பாகிஸ்தானில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதுவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் போதிய ஆதாரமாக உள்ளது.

இந்தியா தகுந்த ஆதாரமளித்தால் விசாரணைக்கு உத்தரவிடுவதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார் என இந்தியா தெரிவிக்கிறது.இது அப்பட்டமான கபட நாடகமாகும். 26/11 மும்பைத் தாக்குதலில், ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல், பதான்கோட் விமான தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்திலும், பாகிஸ்தான் எந்த ஒரு முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தானின் வரலாற்றில்,  கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது, வெற்றுப் பேச்சாகவே இருந்துள்ளது.

புதிய பாகிஸ்தான், புதிய சிந்தனைகளுடன் என்ற கருத்தை இம்ரான்கான் முன்வைத்திருக்கிறார். அவரது இந்தப் புதிய பாகிஸ்தானில், ஹஃபீஸ் சயீத் போன்ற, ஐ.நா.வால் அடையாளம் காணப்பட்ட தீவிரவாதிகளுடன், பகிரங்கமாக, அவரது அமைச்சக சகாக்கள் மேடைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான் பிரதமர், பயங்கரவாதம் குறித்துப் பேசவும் தயாராக உள்ளதாகக் கூறுகிறார். பயங்கரவாதமும், வன்முறையும் இல்லாத சூழலில், பாகிஸ்தானுடன் விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா தயார் என்பது பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கராவதத்துக்குத் தங்கள் நாடு அதிகளவில் பலியாவதாக பாகிஸ்தான் கூறுகிறது. இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. பயங்கரவாதம் பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ளது என்பதை உலக நாடுகள் நன்கறியும். புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எடுத்துவரும் பதில் நடவடிக்கைகள், வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டே மேற்கொள்ளப்படுகின்றன என்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் பாகிஸ்தான் பிரதமர் கூறுவது வருந்தத்தக்கது. இதனை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது. உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழும் இந்திய ஜனநாயகத்தை பாகிஸ்தான் எப்போதுமே புரிந்து கொள்ளாது.

பாகிஸ்தானின் வரலாற்றில், அரைப்பகுதிக்கு மேல், ராணுவ ஆட்சி நிலவி வந்துள்ளது. அங்கு ஜனநாயக அமைப்புக்கள் இன்னும் காலூன்றவில்லை. இந்நிலையில், தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும் ராணுவத்தின் ஆதரவுடனேயே பதவியிலுள்ளார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதில் அரசியல் தலைமைக்கு எந்த அதிகாரமும் இல்லை. ராணுவத் தலைமையிடத்தின் ஆணையின் பேரில், இந்தியாவுடனான உறவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. பிறநாடுகளுக்குப் போதனை அளிப்பதற்கு முன்னால், பாகிஸ்தான் பிரதமர், தனது நாட்டினுள் கவனம் செலுத்துவது நல்லது.

ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் தலைமையில், சர்வதேச சமுதாயம், ஐ.நா.வில் ஜெய்ஷ் ஏ முமதுவின் தலைவன் மசூத் அஸரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் நெருங்கிய நட்புநாடாகக் கருதப்படும் சவூதி அரேபியா கூட, பிறநாடுகளின் மீது பயங்கரவாதம் பிரயோகிக்கப்படுவதை நிராகரித்துள்ளது. தவிர, தங்கள் நாட்டிலுள்ள பயங்கரவாதக் கட்டமைப்பைக் கலைத்து, பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியதவி மற்றும் ஆதரவை முடக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச சமுதாயத்தை திசை திருப்பும் யுக்திகளைக் கைவிடுத்து, புல்வாமா தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீதும், பிற பயங்கரவாதக் குழுக்கள் மீதும் பாகிஸ்தான் உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது.