ஏறுமுகத்தில் இந்தியா – சௌதி அரேபியா உறவுகள்

(மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர்  டாக்டர். முகமது முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், இந்த வாரம், இந்தியாவிற்கான தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணம், இந்தியா-சௌதி அரேபியா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள உத்வேகத்துடன் கூடிய ஒரு புதிய முனைப்பை எடுத்துக்காட்டுகின்றது. முகமது பின் சல்மான் அவர்களுடன் ஒரு பெரிய பிரதிநிதிக் குழு வந்திருந்தது. இதற்கு முன்னர் இஸ்லாமாபாத் சென்ற இளவரசர் சல்மான், புல்வாமா தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் நிலவும் உணர்ச்சிப்பூர்வமான சூழலுக்கு மதிப்பளிக்கும் வகையில், இஸ்லாமாபாதிலிருந்து நேரடியாக புது தில்லி வருவதாக இருந்த தனது பயணத் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களை சந்தித்த இளவரசர் சல்மான், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுடன் பிரநிதிகள்  நிலையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியதோடு, வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களையும் சந்தித்தார்.

சந்திப்புகளுக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, பயங்கரவாத எதிர்ப்பில் கூட்டுறவை மேம்படுத்தவும், செயலுத்தி ரீதியான முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இரு தரப்பிற்கும் உள்ள உறுதிப்பாட்டை வெளிக்காட்டியது. இந்தியா சந்தித்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதப் பிரச்சனையை மோதி அவர்கள் கோடிட்டுக்காட்டினார். ‘பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் சர்வதேச சமூகம் சார்பில் முழுமையான எதிர்ப்பையும் இறுக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.’ என கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் உணர்ச்சிகளை எதிரொலிக்கும் வகையில், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது உட்பட, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடன் சேர்ந்து உழைக்க சௌதி அரேபியா தயாராக உள்ளது என்பதை சௌதி இளவரசர் தெரியப்படுத்தினார்.

இந்தியா-சௌதி அரேபியா இடையிலான வர்த்தக இணைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர். எரியாற்றல் மற்றும் விவசாயத் துறைகளில் இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்குகள் உள்ளன என்றும் இந்த ஒருங்கிணைப்பு மற்ற துறைகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் முகமது பின் சல்மான் கூறினார். வர்த்தக உறவுகள் பெட்ரோகெமிகல் துறையையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், 2016 ஆம் ஆண்டு முதல் சௌதி அரேபியா இந்திய சந்தைகளில் 4400 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இண்டோ-சௌதி வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கோடிட்டுக்காட்டிய பிரதமர் மோதி அவர்கள், இந்தியாவில் சௌதி அரேபியாவின் செயலுத்தி ரீதியான முதலீடுகளுக்காக ஒரு முறையான செயல்முறையைக் கொண்டுவர இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன எனத் தெரிவித்தார். ‘சௌதி விஷன் 2030’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ போன்ற திட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்து பொருளாதார சீர்திருத்தங்களும் ஒன்றை ஒன்று மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியாவும் சௌதி அரேபியாவும் கையெழுத்திட்டன. சுற்றுலாத் துறையில் கூட்டுறவிற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் வீட்டு வசதித் துறையில் கூட்டுறவிற்கான ஒரு  புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டன. ‘செயலுத்திக் கூட்டாளித்துவ கௌன்சில்’ ஒன்றை உருவாக்கி, அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. 2006 ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, சௌதியின் மன்னர் அப்துல்லா புது தில்லிக்கு வந்தார். அந்த வருகையைத் தொடர்ந்து இருநாடுகளும் நெருக்கமான இருதரப்பு உறவுகளை வளர்த்து வருகின்றன. வரலாற்று சிறப்புமிக்க அந்தப் பயணத்தின்போது ‘தில்லி உறுதி ஆவணம்’ கையெழுத்திடப்பட்டதும், 2010 ஆம் ஆண்டு ‘ரியாத் உறுதி ஆவணம்’ கையெழுத்திடப்பட்டதும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தின. 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மேற்கொண்ட சௌதி பயணம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயலுத்தி ரீதியான முதலீடுகள் ஆகியவற்றில் கூட்டுறவை நோக்கமாகக் கொண்டு, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்பெறச் செய்வதில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இதன் விளைவாக, 2016 ஆம் ஆண்டு முதல் சௌதி அரேபியாவிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதோடு பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க சீரான உளவுத் தகவல்களின் பரிமாற்றமும் ஏற்பட்டு வருகின்றன.

2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் சௌதி மன்னர் சல்மானையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் பல முறை சந்தித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு பியுனஸ் ஏர்ஸில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டின் போது மோதி அவர்களும் இளவரசர் முகமதும் சந்தித்தனர். அடிக்கடி நிகழும் இரு தரப்புப் பயணங்களும் பலதரப்புத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டு இரு நாடுகளும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதும், இருநாடுகளுக்கும் இடையில் மேன்மையான அரசியல் புரிதல் ஏற்பட பெரிதும் உதவியுள்ளன.

மேற்காசியாவில், இந்தியாவின் முன்னணிக் கூட்டாளியாக சௌதி அரேபியா உருவெடுத்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் அரசியல் ஈடுபாடுகள் மற்றும் செயலுத்திக் கூட்டுறவின் உச்ச நிலையாகப் பார்க்கப்படுகின்றது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் முதன்மை நாடாக இருப்பதுடன், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மிக அதிக அளவில் வாழும் நாடாகவும் சௌதி அரேபிய இருகிறது. சௌதி அரேபியா, இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருப்பதோடு, இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் காட்டும் நாடாகவும் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் சௌதி அரேபியா, தெற்காசியாவில் இந்தியாவின் வலுவான நிலையையும் அங்கீகரித்து மதிப்பளிக்கின்றது. இந்தக் காரணங்களினால் பிரதமர் மோதி அவர்கள், சௌதி அரேபியாவை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்கான இந்தியாவின் மதிப்புமிக்க செயலுத்திக் கூட்டாளி நாடுகளில் ஒரு முக்கிய நாடு என விவரித்துள்ளார்.