சீன மற்றும் யுரேஷிய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் சானா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி
சீனாவின் அண்மைக் கால வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகள், அவற்றின் குறைபாடுகளையும் வெளிப்படைத் தன்மையின்மையையும் வெளிப்படுத்தியுள்ளன. பெல்ட் மற்றும் சாலை முன்னெடுப்புகள் குறித்த அதன் கூட்டாளிகளான மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளின் கவலைகள் மற்றும் சந்தேகங்கள் சீனாவின் முதலீடுகள் மற்றும் தொடர்புகளின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், அமெரிக்காவுடனான வர்த்தகப்போரும் சீனாவின் பொருளாதாரத்தை வலுவிழக்கச்செய்துள்ளது.
மேலும், உய்குர் சிறுபான்மைச் சமூகத்தின் தலைவர்களைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட ஒரு போதும் தவறாத சீனா, மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதி என ஒப்புக்கொள்வதில்லை. இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்துக்கே கூட ஒரு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அண்மைச் சம்பவமான புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின் மூளையாக அவன் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா உட்பட இதர அண்டை நாடுகளின் நலனில் அக்கறையில்லாத தன்மையும் சர்வதேச வெளியுறவுக்கொள்கை வழிமுறைகளுக்கு முரணான கொள்கைப் பிடிப்பும் சீனா கொண்டுள்ளது என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்பது பெல்ட் மற்றும் சாலை முன்னெடுப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். இது சீன அதிபர் ஷீ ஜின்பிங் அவர்களின் கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் மூலம் ரயில், சாலை, மின் வழித்தடங்களைக் கட்டமைத்துத் தர சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் உள்ளடக்கிய திட்டம். ஏற்கெனவே கடன் சுமையால் அழுந்திக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மட்டுமல்லாமல், பிற ஆசிய நாடுகளுக்கும் சீனாவின் போக்கு கவலையளிப்பதாக உள்ளது. வெளிப்படைத் தன்மை மற்றும் பலதரப்புப் பேச்சு வார்த்தைகள் இல்லாத நிலையில் இந்த முன்னெடுப்பு, சீனாவுக்குச் சவாலாகவே உள்ளது.
தென்சீனக் கடல் விவகாரம் சீனாவுக்கு மேலுமொரு சவாலாக உள்ளது. அப்பகுதியை ராணுவமயமாக்குவதுடன் மட்டுமல்லாமல், கிழக்கு சீனக் கடல் பகுதியிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த சீனா முற்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவருகிறது. அப்பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் அவற்றின் இறையாண்மைக்கு எதிராகவும் சீனா எடுத்துவரும் சட்ட விரோதச் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அமெரிக்கா கோரி வருகிறது.
சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்னெடுப்பு பற்றிக் கூறுகையில், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் படையின் கமாண்டர் அட்மிரல் ஃபில் டேவிட்சன், “குறைந்த காலத்தில் சுலபமாக நிதி உதவி செய்வதாக சீனா அறிவித்தாலும் அதில் நிலையற்ற கடன், வெளிப்படைத் தன்மையின்மை, சந்தைப் பொருளாதார வரையறைகள், இயற்கை வளங்களின் கட்டுப்பாட்டின்மை ஆகிய சுமைகள் கூட உள்ளன” என்று தெரிவிக்கிறார்.
அமெரிக்கா, தென் சீனக் கடலில் சுதந்தரப் போக்குவரத்துச் செயல்பாடுகளை மீண்டும் துவக்க, அப்பிராந்தியத்திலுள்ள தனது நட்பு நாடுகளின் ஆதரவையும் கோரியுள்ளது.
இதன் விளைவுகளை உணர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுடனான தனது உறவுகளைச் சீராக்கிக் கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தியப் பிரதமர் , சீன அதிபர் இடையே நடைபெற்ற உஹான் உச்சி மாநாடு இதற்கு ஒரு சான்று. டோக்கலாம் விவகாரத்துக்குப் பிறகு இந்திய – சீன ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது. இத்திசையில் மேலும் ஒரு அடியாக, கடந்த டிசம்பர் மாதம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அவர்களின் இந்தியப் பயணம் அமைந்தது.
பாகிஸ்தான் சார்புள்ள தீவிரவாத அமைப்புக்குத் தடை விதிக்கக் கோரும் இந்தியாவின் எந்த ஒரு தீர்மானத்திற்கும் ஐ நா –வில் சீனா தெரிவித்து வரும் தொடர் மறுப்பு, இந்தியா – சீனா உறவில் ஒரு முள்ளாக உறுத்திவருகிறது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு ஆதரவளிப்பதில் சீனா காட்டிவரும் தயக்கம் இதில் வெளிப்படுகிறது.
எனினும், புல்வாமா தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கும் ஐ நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தில் மற்ற நாடுகளுடன் இணைந்து சீனாவும் கையெழுத்திட்டுள்ளது. மேலும், இந்தக் கொடுர, கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமாக, ஜெய்ஷ்-ஏ –முகமது இயக்கத்தின் பெயரையும் பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் தொடர்ந்து நிலவி வரும் வர்த்தகப் போர் மற்றும் பெல்ட் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டங்களில் தொடர்ந்து இழந்து வரும் நம்பகத்தன்மை இவற்றுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் சீனா, இந்தியாவுடனான மேம்பட்டு வரும் உறவுகளைச் சீர்குலைத்துக் கொள்ளும் நிலையில் இல்லை என்றால் அது மிகையாகாது.