இந்திய, தென்கொரிய உறவுகளுக்கு வலு சேர்ப்பு.

(கிழக்கு,தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

2014 ஆம் ஆண்டில், மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் துவக்கப்பட்ட இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை, வலுவாக முன்னேறி, இந்தோ – பஸிஃபிக் பிராந்தியம் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் முன்னின்று வழிநடத்தியுள்ளார் என்பதற்குச் சான்றாக, தென்கொரியாவுக்கு அவர் அண்மையில் மேற்கொண்ட பயணம் அமைந்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோதி, இவ்வாண்டின் முதல் பயணமாக, சியோலுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். இருநாடுகளுக்குமிடையே, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது அவரது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

உலகின் அமைதியை மையப்படுத்தி பிரதமரின் தென்கொரியப் பயணம் அமைந்தது. இவ்வாண்டு, மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த ஆண்டாக விளங்குவதும், அமைதியை போற்றும் ஜனநாயக நாடாக, தென்கொரியாவும் விளங்குவதும் இதற்கு மேலும் சிறப்பளிக்கிறது. இதனை நினைவு கூரும் வகையில், காந்தியடிகளின் மார்பளவு உருவச் சிலையை, பிரதர் மோதி அவர்கள் சியோலிலுள்ள யோன்சேய் பலகலைக் கழகத்தில் திறந்து வைத்தார்.

இப்பயணத்தின் போது, சியோல் அமைதி விருது நிறுவனம் அவருக்கு அளித்த சியோல் அமைதி விருதை அவர் பெற்றுக் கொண்டார். நரேந்திர மோதி அவர்கள், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல், உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், இந்திய மக்களின் மனித வளத்தை துரிதப்படுத்துதல், உலகிலேயே அதிவேகத்தில் வளர்ந்து வரும் பெரும் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றியது, ஊழல் தடுப்பு மற்றும் சமுதாய இணக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் ஜனநாயகப் பண்புகளைப் பேணுதல் போன்ற சாதனைகளைப் படைத்தமைக்காக, அவருக்கு சியோல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது என்று, இந்திய வெளியுறவு அமைச்சகக் குறிப்பு தெரிவிக்கிறது.

பிரதமரின் இப்பயணத்தின்போது, ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஒரு ஒப்பந்தத்தின்படி, தென்கொரியாவின் தொழில் துவக்க மையம் ஒன்று இந்தியாவில் நிறுவப்படும். தென்கொரியா, நவீன தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவின் முக்கிய பொருளாதாரக் கூட்டாளி நாடாகவும் தென்கொரியா விளங்குகிறது. 2013-14 ஆம் ஆண்டில், 1667 கோடி டாலர் அளவில் இருந்த இருதரப்பு வர்த்தகம், 2017-18 ஆம் ஆண்டில் 2082 கோடி டாலர் அளவை எட்டியது. ’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் துவக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் தென்கொரிய முதலீடுகள் ஏறுமுகத்தைக் கொண்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், தென்கொரியா, இந்தியாவில் 25,000 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், 2015 ஆம் ஆண்டில் தென்கொரியாவுக்குப் பயணித்தபோது, இருநாடுகளுக்கிடையிலான சிறப்பு செயலுத்திக் கூட்டாளித்துவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னரும், வரும் மே மாதம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமைந்துள்ள இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுக்கு தென்கொரியாவின் ஆதரவை உறுதி செய்யும் வகையில் இப்பயணம் அமைந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே, உயர்மட்டப் பயணங்கள் அடிக்கடி நிகழ்வது, இருநாட்டு உறவுகளின் வலிமையை எடுத்துரைக்கின்றது.

அனைத்து கிழக்காசிய நாடுகளுடனும் இந்தியா ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே எப்போதும் நட்புறவு மேலோங்கியிருந்துள்ளது. பிரதமருக்கும், சீன அதிபருக்கும் இடையே வூஹானில் நிகழ்ந்த அமைப்புசாரா சந்திப்புக்குப் பின்னர், இந்திய, சீன உறவுகள் மேம்பட்டுள்ளன.

கிழக்காசியப் பகுதியில், ராஜீய ரீதியாகவும், பொருளாதார  ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த சக்திகளுடன் இந்தியாவின் பிணைப்பை அதிகரிக்க, தென்கொரியா போன்ற நாடுகளின் ஆதரவை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம், அப்பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இந்தியா விழைகிறது.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையும், தென்கொரியாவின் புதிய தெற்கு நோக்கிய கொள்கையும் பரஸ்பரம் பலனளிக்கும் விதவாக உள்ளன. இந்தியா முன்னெடுக்கும் தன்னிச்சையான திட்டங்களுக்கு ஏற்றார்போல் தென்கொரியாவும் செயல்படுகிறது. இந்திய, தென்கொரிய உறவுகள், மேலும் ஒரு மைல்கல்லை எட்ட, பிரதமரின் இப்பயணம் உதவியுள்ளது என்றால் அது மிகையல்ல.