(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.)
இந்தியாவிலேயே மிகப்பெரும் பிராந்தியமான உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூரில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், பி.எம். கிசான், அதாவது, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாயிகளுக்கான முதன்மைத் திட்டத்தைத் துவக்கி வைத்தார். அப்போது, முதல் தவணையாக, ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,000/- நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய பிரதமர், இத்திட்டம் மிகவும் வெளிப்படையாக, பாதுகாப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது என்றும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியலை மாநில அரசுகள் விரைந்து அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இத்திட்டத்துக்காக, பட்ஜெட்டில் 75,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தியா, அதிக வேளாண் விளைபொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. அரிசி மற்றும் கோதுமையை அதிக அளவில் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 55 சதவிகிதத்துக்கு வாழ்வாதரமாகத் திகழும் வேளாண்மை, இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதம் பங்களிக்கிறது. எனினும், மற்ற துறைகளைக் காட்டிலும், வளர்ச்சியில் வேளாண்மை பின்தங்கியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக, ஆண்டொன்றுக்கு 3 முதல் 4 சதவிகித வளர்ச்சியை இந்திய வேளாண்மை தொடர்ந்து கண்ணுற்று வருகிறது. விவசாயிகள், தங்கள் விளைபொருட்களுக்குத் தகுந்த விலை பெறவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் அரசு முன்னெடுத்துள்ளது. இதேபோல், பல மாநிலங்களும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் திட்டங்களைக் கையிலெடுத்துள்ளன. விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இத்திட்டம் உதவும். விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கவல்ல இத்திட்டம், கடன் தள்ளுபடி போன்ற திட்டம் அல்ல.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுப்பப் பட்ட போதும், பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையாக விளங்கும் என்ற காரணத்தால், அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. 2008 ஆம் ஆண்டில், விவசாயிகளின் கடன் தொகை 7,50,000 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அதில் 52,000 கோடி ரூபாய் மட்டுமே, அப்போதைய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் அரசு மிகவும் உறுதி பூண்டுள்ளது. உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி, தோட்டப் பயிர்கள் ஆகியவற்றின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் அவதியுறும் விவசாயிகளின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் திட்டங்களில் ஒன்றாக பி.எம். கிசான் திட்டம் விளங்குகிறது. 2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், அறிவிக்கப்பட்ட பி எம் கிசான் திட்டத்தின்படி, ஆண்டொன்றுக்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். 2 ஹெக்டருக்குக் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட, சிறு மற்றும் ஏழை விவசாயிகள் 12 கோடிப் பேர் இத்திட்டத்தில் பயனடைவர். நடப்பு நிதியாண்டிலேயே அமலுக்கு வரும் இத்திட்டத்தின் கீழ், முதல் தவணை இவ்வாண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தப்படும்.
இது 100 சத விகிதம் மத்திய அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் திட்டமாகும். இதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள பி. எம்.கிசான் இணையதளத்தில், மாவட்ட வாரியாக, தகுதி பெற்ற பயனாளிகளின் பட்டியலை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் சான்றிதழ் அளித்துப் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், 2018 டிசம்பர் 1 ஆம் தேதி முதல், தகுதி பெற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நிதி செலுத்தப்படும்.
மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள விவசாயிகளுக்கு, உபரி வருவாய் கிடைக்க இத்திட்டம் வழி செய்வதோடு, அறுவடைக்கு முன்னால் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும். கடன் தள்ளுபடி, அரசுக்கு எளிதாகவும் வசதியாகவும் இருப்பினும், அவ்வாறு செய்யாமல், விவசாயிகளுக்கு சிறந்த வகையில் உதவ வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாக, பிரதமர் மிகச் சரியாக எடுத்துரைத்தார். இயற்கைப் பாதிப்புக்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இத்திட்டம் சிறு மற்றும் ஏழை விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் என்பது உறுதி.