இந்தியாவின் முன்னெச்சரிக்கைத் தாக்குதல் – புல்வாமா தாக்குதலுக்கு சரியான பதிலடி.

(டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.)

இம்மாதம் 26 ஆம் தேதி அதிகாலையில் இந்திய விமானப்படை, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத்  தாண்டி, பாகிஸ்தானிலுள்ள பாலாகோட், சகோடி மற்றும் முஸஃப்ஃபராபாத் ஆகிய இடங்களில் அமைந்திருந்த ஜெய்ஷ்-ஏ-முகமதுவின் பயங்கரவாத முகாம்களை மிகவும் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில், அதிக அளவிலான ஜெயிஷ் பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள், மற்றும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஜிகாதிகள் கொல்லப்பட்டனர் என்று, இந்திய வெளியுறவுத்துறை செயலர் வி கே கோகலே அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

ஜெயிஷ் முகாம்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலானது, ராணுவம் சாராத, முன்னெச்சரிக்கைத் தாக்குதல் என்று விளக்கமளித்த திரு கோகலே, பயங்கரவாதத்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா ஒருபோதும் தயங்காது என்று குறிப்பிட்டார். இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 ரக விமானங்களைக் கொண்டு,  தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 3 இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் துல்லியத் தாக்குதலானது, புல்வாமா மாவட்டத்தில் இம்மாதம் 14 ஆம் தேதி நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, இந்தியா கொடுத்த பதிலடி ஆகும். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பொறுப்பேற்ற பின்னரும், இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்ற திமிரான மறுப்பை பாகிஸ்தான் வெளியிட்டது. ஜெயிஷ் அமைப்பு வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பின்பும் ,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் அந்த பயங்கரவாத அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க, நம்பகமான ஆதாரம் தேவை என்று கூறியுள்ளது வருந்தத் தக்கது.

புல்வாமா தாக்குதலுக்கு ,தக்க பதிலடி சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்து, தேசிய அளவில் உருவாகியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு, இந்தியா கொண்டுள்ள கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தும் விதமாக, சரியான பதிலடி கொடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன.

இந்த பாலாகோட் தாக்குதலை “ துல்லியத் தாக்குதல் 2” என்று இந்தியர்கள் வாழ்த்துகின்றனர். அதே சமயம், வழக்கம்போல், பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது. ஊரி பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற துல்லியத் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்தது போல், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்திய விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை முறியடித்து விட்டதாக பொய்யுரை பரப்ப, பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் முயன்றார்.  இருப்பினும், மூன்று தீவிரவாத முகாம்களிலும்  இந்தியா நடத்திய வான் தாக்குதலை, பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பாலாகோட் இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரடியாகச் சென்ற பிபிசி உருது செய்தி நிறுவனம்,தகவல்களை கேட்டறிந்து தாக்குதலை உறுதி செய்தது.

பாகிஸ்தானின் ஐஎஸ் செய்தித் தொடர்புத் துறை துணை இயக்குனர், தனது விளக்கத்தில், இந்தியாவின் தாக்குதல் மூன்று திசைகளில் நடைபெற்றது என்று கூறியுள்ளார். முதலாவது பஹவால்பூர்  நோக்கியும், இரண்டாவது சியால்கோட் நோக்கியும், மூன்றாவது, முஸஃபராபாத் நோக்கியும் ஏற்பட்டது என்றும், மூன்றாவது தாக்குதலை பாகிஸ்தான் வான்படை எதிர்கொண்டு, நான்கு குண்டுகளை ஏந்தி வந்த இந்திய விமானம், அவற்றை கைபர் பக்டூன்குவாவிலுள்ள பாலாகோட்டில் விழச் செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மக்களுக்காக பாகிஸ்தான் ராணுவம் தனது விளக்கத்தைத் தயார் செய்வது இயற்கையானது என்றாலும், ஊரி தாக்குதலைப் போலன்றி, இந்தியாவின் இத்தாக்குதலை ஒப்புக்கொண்டது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் ஆதரவுடன், எல்லைக்கோட்டுக்கருகே, தீவிரவாதிகளை முடுக்கிவிடுவதை முறியடிக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கைத் தாக்குதலை திறனுடன் இந்தியா நடத்த இயலும் என்பது இத்தாக்குதல் மூலம் நிரூபணமாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம், தனது செயல்பாட்டிற்குத் தயார்நிலையில் இருப்பதாகவும், அணுஆயுத அச்சுறுத்தலை உள்ளடக்கியதாகவும் கூறிவருவது எந்த அளவுக்கு உண்மை என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது,

தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் ஆதரித்து வரும் பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது இந்தியாவின் உரிமை என்று, சர்வதேச சமுதாயம் அங்கீகரித்துள்ளது. இது இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் போர் முழக்கம் எழுப்பி, பிரச்சனையை மேலும் பெரிதுபடுத்த முயலுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைத் தாக்குதலை இந்தியா நடத்தியதன் மூலம், உலகளவில் பாகிஸ்தானின் மதிப்பை சீர்குலைப்பதில் பெருமளவில் வெற்றி கண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.