ரஷ்யா-சீனா-இந்தியா சந்திப்பு – ஒருங்கிணைப்பில் வலுசேர்ப்பு.

(சீன, யூரேஷிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் சனா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

சீனாவிலுள்ள வூசென் நகரில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்களின் 16 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. முன்னதாக, டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுதில்லியில் இம்மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் 15 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. இம்மூன்று நாட்டு வெளியுறவு அமைச்சர்களும், 2018 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பியூனஸ் ஏர்ஸில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கிடையேயும் சந்தித்தனர்.

ஆர்ஐசி எனப்படும் இந்த அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாட்டில், தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் மையக் கருத்தாக விளங்கியது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உருவாகி வருவதையும், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் எந்த முனைப்பும் காட்டுவதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள மறுப்பதாக, பாகிஸ்தான் மீது இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானிலுள்ள பாலாகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் ஏ முகமதுவின் தீவிரவாத முகாம் மீது, இந்தியா முன்னெச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது பற்றி ரஷ்ய, சீன வெளியுறவு அமைச்சர்களிடையே அவர் எடுத்துரைத்தார்.

ஆர்ஐசி விடுத்த கூட்டறிக்கையில், அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதத்துக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் ஆதாயங்களுக்காக, தீவிரவாதம் கையிலெடுக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்ட ஆர்ஐசி, தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பது, தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுவது, தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் பொறுப்பாளிகளாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ரஷ்யாவும், சீனாவும் இந்தியாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. தீவிரவாதிகளை உருவாக்கும் மையங்களை ஒழிப்பதில், மூன்று நாடுகளும் கொள்கை அளவில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.  ஜெய்ஷ் ஏ முகமதுவின் தலைவன் மசூத் அஸரை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், இந்த ஒப்புதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆர்ஐசி வெளியிட்ட கூட்டறிக்கை, இம்மூன்று நாடுகளிடையே, வளர்ந்து வரும் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டுகிறது. 2017 ஆம் ஆண்டில் எழுந்த டோக்லாம் பிரச்சனை, 2018 ஆம் ஆண்டு வூஹானில், பிரதமர் திரு நரேந்திர மோதிக்கும், சீன் அதிபர் ஸீஜின்பிங்கிற்கும் இடையே நடந்த அமைப்புசாரா சந்திப்பு ஆகியவற்றைத் தாண்டி, இந்திய, சீன உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், சீன வெளியுறவு அமைச்சர் வேங் யீ அவர்கள், 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணித்தார். சமீபகாலமாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், அதற்குப் பங்கம் விளைவிக்கும் எந்த செயலும் சரியானதல்ல என்பதை இருநாடுகளும் உணர்ந்துள்ளன.

மற்றெப்போதையும்விட, இப்போது, இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஆர்ஐசி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. யூரேஷியாவின் மூன்று பெரும் பொருளாதார நாடுகள் இதில் இணைந்துள்ளன. பிரிக்ஸ், கிழக்காசிய உச்சி மாநாடு, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு போன்ற மேடைகளில், இம்மூன்று நாடுகளும் தங்கள் பரஸ்பர நலனில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க, ஆர்ஐசி மேடை அமைத்துத் தருகிறது.

சீனாவைப் பொறுத்தவரை, அந்நாட்டின் வெளியுறவில் முக்கிய அம்சமாகத் திகழ்வது, அதன் பிஆர்ஐ எனப்படும் வலையம் மற்றும் சாலை முன்னெடுப்புத் திட்டமேயாகும். கடந்த சில மாதங்களில் இத்திட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. பிஆர்ஐ திட்டம் சந்தித்துவரும் பல எதிர்ப்புக்களுக்கிடையே, தனது நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்வது சீனாவுக்கு முக்கியமானது. ஆசிய பொருளாதாரங்களில், இந்தியாவும் ஜப்பானும் மட்டுமே சீனாவின் பிஆர்ஐ திட்டத்தை ஆதரிக்காமலிருக்கின்றன. சீனாவின் பிஆர்ஐ திட்டத்தில் ரஷ்யா, ஏற்கனவே முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. பிஆர்ஐ திட்டத்திற்கு மற்ற நாடுகளின் ஆதரவையும் பெற, சீனா அனைத்து மேடைகளையும் பயன்படுத்திக் கொள்கிறது.

ரஷ்யா, இந்தியா, சீனாவுக்கிடையே, இருதரப்பு உறவுகள் வலுவான நிலையில் உள்ளன. பரஸ்பர நலன்கள் பற்றிய விஷயங்கள் மீது, இம்மூன்று நாடுகளும் விவாதிக்க ஆர்ஐசி நல்லதொரு மேடையாக அமைந்துள்ளது. இது, யூரேஷியப் பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்த முக்கியத்துவம் வாய்ந்த்தாகவும்  அமைகிறது.