இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அஷோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

2019, பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை வேளையில், பாகிஸ்தானின் பாலாகோட்டில் இருக்கும் ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் என்ற தீவிரவாத இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் ஒன்றை இந்தியா தாக்கியது. பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, 40 இந்திய காவல்துறை வீரர்களின் உயிர்களைப் பறித்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் இயக்கம் பொறுப்பேற்றிருந்தது. ஐ, நா. வின் பாதுகாப்பு ஆணையத்தின் தீர்மானம் 1267-ல் கட்டாயமாக்கப்பட்டபடி, இந்த இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை பல முறை கேட்டும் பலனின்றிப் போகவே, இந்தியா இந்த வலுவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. பயங்கரவாத இயக்கம் என முத்திரையிட்டு ஐ.நா. இந்த இயக்கத்தைத் தடை செய்துள்ளதோடு, 2001 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் மீது தடைகளை விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் இயக்கத்திற்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு உலக வல்லரசு நாடுகள் ஆதரவளித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பாதுகாப்புக் கூட்டணி பற்றியும், இப்பகுதிகளில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் இரு தரப்பிற்கும் உள்ள பொதுவான இலக்கு ஆகியவற்றைப் பற்றியும் மீண்டும் வலியுறுத்தினார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியுடனும் பேசிய அவர், ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, தற்போது இருக்கும் இறுக்கத்தைத் தளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டினார். பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக அந்நாடு நியாயமான நடவடிக்கைகளை எடுக்கு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் இருந்து, எந்த சூழலிலும் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்பதை அவர் தெரியப்படுத்தினார். ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து நேரடித் தொடர்புகளுக்கு முன்னுரிமை அளிக்க அவர் இரு அமைச்சர்களுக்கும் ஊக்கமளித்தார்.

சீனாவின் வூசென்னில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், ‘இந்தியா மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒரு ராணுவ நடவடிக்கை அல்ல. பாகிஸ்தானின் எந்த ராணுவத் தளங்களும் இதில் தாக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கையாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் வரையறுக்கப்பட்ட நோக்கம், ஜெயிஷ்-ஏ-மொஹம்மத்தின் பயங்கரவாத கட்டமைப்புகளுக்கு எதிராக ஒரு திடமான நடவடிக்கையை எடுப்பதே ஆகும். இந்தியா மீது மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.’ எனக் கூறினார். சந்திப்பிற்குப் பிறகு மூன்று வெளியுறவுத் துறை அமைச்சர்களும் வழங்கிய கூட்டறிக்கை, நாடுகள், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளித்து, அவர்களை, அரசியல் மற்றும் புவிசார் அரசியல் இலக்குகளை அடைய பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியது.

ராணுவ நடவடிக்கைகளைத் தடுக்குமாறு வந்த அறிவுறுத்தல்களுக்கு செவி மடுக்காத பாகிஸ்தான், பிப்ரவரி 27 ஆம் தேதி, முகாந்திரமற்ற ஒரு ஆக்ரோஷத் தாக்குதலை மேற்கொள்ள முடிவெடுத்தது. இந்திய வான் எல்லையைக் கடந்து வந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், இந்திய ராணுவத் தளங்களைக் குறி வைத்தன. எனினும், இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் இந்த விமானங்களை இடைமறித்து, பாகிஸ்தானின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கின. இதில் நடந்த வான்வழிச் சண்டையில், இந்திய விமானப் படையின் மிக்-21 பைசன், பாகிஸ்தான் விமானப் படையின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இந்தச் சண்டையில் இந்திய விமானப் படை ஒரு மிக்-21 விமானத்தை இழந்தது. இந்த விமானத்தின் பைலட் பாதுகாப்பாக விமானத்திகிருந்து வெளிவந்தாலும், அவரது பாராசூட், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் சென்றதால், போர்க் கைதியாக அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். ஜெனீவா உடன்படிக்கையின் படி, பாகிஸ்தானால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப் படையின் கமாண்டர், இன்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசப் போருக்குப் பிறகு, போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட சுமார் 93,000 பாகிஸ்தான் வீரர்களை இந்தியா எந்த நிபந்தனையுமின்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சட்டத்தின் கீழ், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தனது கடமைகளை பாகிஸ்தான் எப்போதும் நிறைவேற்றியது இல்லை. இந்தியா மீது பாகிஸ்தான் மேற்கொண்ட தேவையற்ற ராணுவ நடவடிக்கை, இதை மூடி மறைக்கும் ஒரு முயற்சியாகவே  பார்க்கப்படுகின்றது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களிலிருந்து கிளம்பும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் காட்டும் மெத்தனத்தைக் குறித்து, இந்தியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய  பாகிஸ்தானின் மூன்று அண்டை நாடுகளும் கடந்த சில வாரங்களில் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து வெளிப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மீதான ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் நிலைப்பாடு நிலையானதாகவும் ஒரே கருத்துள்ளதாகவும் இருந்து வருகிறது. இது தொடர்பான அனைத்து வழக்குகளிலும், கண்டிக்கத்தக்க இந்த பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள், சூத்திரதாரிகள், நிதி உதவி செய்தவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் என அனைவரையும் இதற்குப் பொறுப்பேற்க வைத்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் கோடிட்டுக் காட்டினர். அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் தகுந்த பாதுகாப்பு ஆணைய தீர்மானங்களின் கீழ், இந்த மூன்று நாடுகளின் அரசாங்கங்களுடனும் இதற்கான மற்ற அதிகாரிகளுடனும் துடிப்புடன் சேர்ந்து உழைக்குமாறும் பாதுகாப்பு ஆணையம் மற்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இனி, பாதுகாப்பு ஆணையம், ஐ.நா சாசனத்தின் 41 ஆவது ஷரத்தின் விதிகளின் படி தனது முடிவுகளை செயல்படுத்தத் தேவையான அரசியல் முனைப்பைக் காட்டி, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விஷயங்களில்  பாகிஸ்தான் தனது கடமைகளை நிறைவேற்ற அந்நாட்டை வலியுறுத்த வேண்டும்.