இந்திய சவுதி உறவுகளில் ஒரு புதிய போக்கு

 

 

மேற்கு ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முஹம்மத் முடாசிர் குவாமர் அவர்களின் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்.
சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல் ஜூபெயர் அவர்கள் புதுதில்லிக்குப் பயணம் மேற்கொண்டு இருப்பது, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையே உள்ள இருதரப்பு உறவுகளுக்கு ஒரு முக்கியத்துவமாக அமைந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் படி, சவுதி அமைச்சரின் இந்தப் பயணமானது, போன மாதம் சவுதி இளவரசர் பின் சல்மான் அவர்கள் புது தில்லிக்கு பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முக்கிய விபரங்களைப் பின்பற்றுவதற்கான அலுவல் சார் பயணமாக இது அமைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அல் ஜுபெயர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும்  வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுஷ்மா சுவராஜ் அவர்கள் சமீபத்தில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC ) வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சபை உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்ட பொழுது அல் ஜுபெயர் அவர்களைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில், இந்தியாவிற்கு கௌரவ விருந்தினர் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியா மற்றும் சவுதி அரேபியத் தலைவர்கள் இவ்வாறு அடிக்கடி இரு நாடுகளுக்கிடையே பயணம் மேற்கொண்டு வருவது, இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள, இருபக்க உறவுகளின் சாத்தியக்கூறுகளை உணர்ந்து வருகின்றன என்பதற்கான அடையாளமாகும். இந்தியா மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையே உள்ள பொருளாதாரம் வர்த்தகம் 2017-18 ஆம் வருடத்தில் 2750 டாலர் அளவை எட்டியுள்ளது. இருதரப்பிலும், இந்த வர்த்தகத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஆர்வமாக உள்ளனர், மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்தவும் தயாராக உள்ளனர். இந்தியாவின் முதல் ஐந்து வர்த்தகக் கூட்டாளி நாடுகளில் சவுதி அரேபியாவும் உள்ளது, கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் முதலீடு செய்வதில், முன்னணி வெளிநாட்டு முதலீட்டாளர் நாடாகவும், சவுதி அரேபியா திகழ்கிறது. சவுதி இளவரசர் பின் சல்மான் அவர்களின் சமீபத்திய பயணத்தின் பொழுது, சவுதி அரேபியா இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்றும், அடுத்த சில வருடங்களில், 10000 கோடி டாலர் அளவிலான பல்வேறு முதலீடுகளை இந்தியாவில் செய்யவிருப்பதாகவும் ரியாத் குறிப்பிட்டிருந்தது.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதிலும், சவுதி அரேபியா முன்னணி கூட்டாளி நாடாகத் திகழ்கிறது. 2008 ஆம் வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற மும்பைத் தாக்குதலில் ஒரு சூத்திரதாரியாக விளங்கிய ஃபாஸிஹ் முஹம்மத், பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை உபயோகித்து சவுதி அரேபியாவில் வசித்து வந்த பொழுது, அவரை DNA சரிபார்ப்பு விசாரணைக்காக, அனுப்பும்படி ரியாத் இடம் புது தில்லி கேட்டுக் கொண்ட பொழுது, சவுதி அரேபியா அவரை இந்தியாவிடம் ஒப்படைத்தது. கடந்த சில வருடங்களில், ஹவாலா பரிவர்த்தனை மூலமாக பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் பலரைக் கண்டறிந்து, அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்தல் செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒத்துழைப்பில் உளவுத்துறை பகிர்வு ஒரு முக்கிய துறையாகத் திகழ்ந்து வருகின்றது.

கடந்த சில வருடங்களில் இந்தியாவும் சவுதி அரேபியாவும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையே, ராணுவப் படையின் மூன்று துறைகளிலும், கூட்டு ராணுவப் பயிற்சியைத் துவங்குவதற்கும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். பயிற்சிக்காகப் பணியாளர்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு ராணுவத் தயாரிப்பு போன்ற துறைகளில் இரு நாடுகளும் உறவுகளை மேம்படுத்த உள்ளன.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டம் மற்றும் இந்தியாவின் வலுவான பதிலடி, மற்றும் அதைத் தொடர்ந்து போன வாரம் அல் ஜுபெயர் அவர்கள் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொண்டது, இவற்றால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சவுதி அரேபியா சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்ற யூகங்கள் எழுந்தன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி மற்றும் காஷ்மீர் பிரச்சனை என்பது ஒரு உள்நாட்டு விஷயம் என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் கொடுக்கும் நிதி உதவி மற்றும் ஆதரவு தொடரும் வரை, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்த ஒரு மூன்றாம் நபர் தலையீட்டிற்கும் இடமே இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா தனது சொந்தப் பிராந்தியம் மட்டுமல்லாமல் ,தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவின் பல பிராந்தியங்களில் , பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதில் சவுதி அரேபியாவின் பங்கை இந்தியா பாராட்டியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், சரியான, மாற்ற முடியாத, நம்பகமான வழிமுறைகளுக்கு இணைந்து பணிபுரிய இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த ஐந்து வருடங்களில் இருபக்க உறவுகள் தழைத்தோங்கிய அதே வேளையில், இந்திய – சவுதி உறவுகளுக்கிடையே, பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதில், ஒரு புதிய பயணப் போக்கு ஏற்பட்டு உள்ளது.