புதுப்பிக்கப்பட்ட, துடிப்புமிக்க இந்தியா, மாலத்தீவு உறவுகள்.

(இட்ஸா ஆய்வாளர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ .வெங்கடேசன்.)

மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹீத் அவர்களின் அழைப்பை ஏற்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே மற்றும் மூத்த அலுவலர்களுடன் மாலத்தீவிற்கு இந்த வாரம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மாலத் தீவுகளுக்கு சுஷ்மா சுவராஜ் அவர்கள் பயணம் மேற்கொள்வது, 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இரண்டாவது முறையாகும். 2018 ஆம் வருடம் மாலத்தீவு அதிபர் இப்ரஹிம் சோலி அவர்கள் அதிபராகப் பதவி ஏற்ற பிறகு அவர் அந்நாட்டிற்கு  மேற்கொள்ளும் முதல் பயணமாகும் இது.

இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை உறுதிப்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இந்திய வெளியுறவு துறை அமைச்சர், மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர், நிதி அமைச்சர் ,தேசிய திட்ட மட்டும் உட்கட்டமைப்புத் துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், மற்றும் மூத்த அமைச்சர்களுடன் கூட்டு அமைச்சர்கள் சந்திப்பை நடத்தினார். அதிபர் இப்ராஹிம் சோலி, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் மாலத்தீவின் உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சுஷ்மா ஸ்வாராஜ் அவர்கள் சந்தித்துப் பேசினார். முன்னாள் அதிபர் முகமது நஷீத் அவர்களையும் அவர் சந்தித்தார்.

.2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அதிபர் சோலி அவர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளின் செயல்முறைகள் அனைத்தும், ஸ்வாராஜ் – ஷாஹீத் இடையிலான நேருக்கு நேர் சந்திப்பின்போது புதுப்பிக்கப்பட்டன. இந்தியாவின் செயலுத்தி ரீதியிலான, பாதுகாப்பு  அம்சங்களுக்கு மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அதிக முக்கியத்துவம் அளித்தார்.

கூட்டு அமைச்சர்கள் சந்திப்பின்போது, துணைத் தூதரக பிரச்சனைகள், திறன் மேம்பாடு, சுகாதாரம், வர்த்தகம்,முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற துறைகளில் உள்ள இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாலத்தீவு கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஆற்று மணல் மற்றும் கல் உள்பட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒதுக்கீட்டை, 2019 ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 3 வருடத்திற்குப் புதுப்பிப்பது என்ற இந்தியாவின் முடிவை சுஷ்மா சுவராஜ் அவர்கள் அறிவித்தார். மாலத்தீவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்றை நிறுவ உதவி கோரிய அந்நாட்டிற்கு, அதனை சாதகமாகப் பரிசீலிப்பதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மாலத்தீவின் உள்துறை அமைச்சர் இம்ரான் அப்துல்லா ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும்  இடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைதி, முன்னேற்றம், செழிப்பு மற்றும் ஜனநாயகம் போன்றவற்றிற்கு மாலத்தீவிற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று, மாலத்தீவின் நாடாளுமன்ற சபாநாயகர் காசிம் இப்ராஹிம் அவர்களுடனான சந்திப்பின் போது இந்திய அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதிபர் இப்ராஹிம் சோலி அவர்களுடனான சந்திப்பின் போது, அவரது இந்தியப் பயணத்தின் தொடர்ச்சியாக, பல அம்சங்களின் முன்னேற்றம் குறித்து, ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

இரு நாடுகளுக்கிடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அலுவலக மற்றும் ராஜீய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையில் விலக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம், உள்ளூர் அமைப்புகளுடன், அதிக தாக்கம் உடைய சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவின் உதவி சம்பந்தமாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் எரியாற்றல் திறன் போன்ற துறைகளில் இணைந்து பணிபுரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை கையெழுத்திடப்பட்டன.

1995 ஆம் வருடம் இந்தியா பரிசாக அளித்த, மாலே நகரில் நிறுவப்பட்டுள்ள இந்திராகாந்தி நினைவு மருத்துவமனைக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜயம் செய்தார்.

யாமின் அவர்களின் நிர்வாகத்தின்போது மோசமடைந்த இருதரப்பு உறவுகள், தற்பொழுது ,இந்தப் பயணத்தின் மூலம் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஆம் வருடம் நடைபெற்ற மாலத்தீவு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இப்ராஹிம் சோலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இரு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு உறவுகளுக்கு துடிப்பான ஊக்கம் கிடைத்துள்ளது.

இருப்பினும், முன்னாள் தலைவரின் தலைமையில், ஒரு குறிப்பிட்ட குழு இந்தியாவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முயற்சித்தது. இந்தியா பரிசளித்த 2 ஹெலிகாப்டர்களைப் பராமரிக்க, இந்திய ராணுவத்தினர் மாலத்தீவுகளில் இருப்பதை எதிர்த்து அக்குழு ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டது. தற்போதைய அரசு இதனைக் கடுமையாகக் கண்டித்ததோடு, அதனைத் தடையும் செய்துள்ளது.

அந்த ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்ததுடன், ’இந்தியா முதலில்’ என்ற கொள்கையை மாலத்தீவு அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ’அண்டை நாடு முதலில்’ என்ற இந்தியாவின் கொள்கையுடன் இது ஒத்துப் போகிறது. இந்த ஒன்றுபட்ட கொள்கைகளின் மூலம், தங்களது இருதரப்பு உறவுகளை மேலும் வலிமைப்படுத்த இந்தியாவும், மாலத்தீவும் உறுதிப்பாட்டுடன் உள்ளன. சுஷ்மா சுவராஜ் அவர்களின்  இந்த மாலத்தீவு பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இரு நாடுகளும் தங்களது தற்போதைய நட்புறவுகளை மேலும் விரிவுபடுத்த உறுதியுடன் உள்ளன என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது