வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும் ஆப்பிரிக்காவும் உறுதி.

(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – பி.குருமூர்த்தி)

உலகப் பொருளாதாரத்தில் மிதமான வளர்ச்சி, வர்த்தக, முதலீட்டு மந்த நிலை, வளர்ந்து வரும் பொருளாதாரத் தற்காப்புச் செயல்பாடுகள், இறுக்கமான நிதிநிலை போன்ற சூழலில், இந்திய, ஆப்பிரிக்க கூட்டாளித்துவம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. துடிப்பான வளர்ச்சியைக் கண்டு வரும் ஆப்பிரிக்க நாடுகள், உலக முதலீட்டிற்கு அதிக வசீகரமான வாய்ப்புக்களை வழங்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன. ’முன்னேற்றத்தில் கூட்டாளித்துவம்’ என்ற கொள்கை அடிப்படையில் இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் உறுதியாக உள்ளது. அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற, 14 ஆவது மூன்றுநாள் இந்திய, ஆப்பிரிக்க திட்ட கூட்டாளித்துவ உச்சிமாநாட்டில், 41 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 33 அமைச்சர்கள் மற்றும் அரசு உயர்மட்டத் தலைவர்களும் இதில் அடங்குவர்.

உச்சிமாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய மத்திய வர்த்தக, தொழில் மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்கள், முதலீடுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்க விரும்பும் நாடுகளாக ஆப்பிரிக்க நாடுகள் விளங்குகின்றன என்று கூறினார். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்குமிடையே டிஜிட்டல் தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம், அதிக செலவுள்ள நேரிடைத் தொடர்பு கட்டமைப்புக்கு அவசியம் குறையும் என்றார் அவர். இருப்பினும், இருநாடுகளுக்குமிடையே நேரிடைத் தொடர்புகளை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவும் ஆப்பிரிக்காவும் தடையற்ற வர்த்தகம் அல்லது விருப்பமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்கள் கூறினார். இம்மாதம் 31 ஆம் தேதி வரையிலான நிதியாண்டில் வரலாறு காணாத அளவை இந்திய சேவை மற்றும் பொருட்களின் ஏற்றுமதி எட்டும் என்று அவர் கூறினார். இது இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அடிப்படை நிலையைப் பிரதிபலிப்பதாக விளங்கும் என்று அவர் கூறினார். இன்னும் சில ஆண்டுகளில் 5 லட்சம் கோடி, பின்னர் 10 லட்சம் கோடி என்ற பொருளாதார உச்சத்தை இந்தியா எட்டாவுள்ள நிலையில், ஆப்பிரிக்கப் பொருளாதாரத்திலும் சீரான வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள இந்தியா உதவ விரும்புகிறது. உலக வரைபடத்தில் நடுப்பகுதியில் தென்படும் ஆப்பிரிக்க நாடுகளுடன் வலுவான போக்குவரத்துத் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா உதவும். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே, வேளாண்மை, உணவு பதனிடல், மின்திட்டங்கள், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் மேம்பாடு, திறன் வளர்ப்பு ஆகியவை உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாளித்துவ வாய்ப்புக்கள் மலிந்துள்ளன. ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களை சரிவர உபயோகிப்பதில் இந்திய நிறுவனங்கள் தேவையான உதவிகளை வழங்கும் என இந்தியா உறுதியளித்துள்ளது. வர்த்தகம், முதலீடு, மனிதவளத்தில் முதலீடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை முக்கியத்துவம் பெற்றவை என்றும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் திறன், கானா நாட்டின் இலக்குகளை எட்ட உதவி புரியும் என்றும் அந்நாட்டு துணை அதிபர் மஹமுது பவூமியா கூறியுள்ளார்.

கினி உள்ளிட்ட 18 ஆப்பிரிக்க நாடுகளில் புதிய தூதரகங்களை இந்தியா அமைத்ததற்கு, கினி நாட்டின் பிரதமர் டாக்டர் இப்ராஹிமா கஸ்ஸோரி ஃபோஃபானா பாராட்டு தெரிவித்தார். ஆப்பிரிக்காவில் விரிந்த வலையம் போன்ற திட்டங்களை இந்தியா முன்னெடுத்ததால், கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்கக் கண்டம் பெருமளவில் பயன்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். லெஸோதோ நாட்டு துணைப் பிரதமர் மோன்யானே மொலேலேகி அவர்கள், வேளாண்மை, தொழில்நுட்பம், எரியாற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் போன்ற துறைகளில் இருதரப்பும் பயன்பெறும் வகையில் ஒத்துழைப்பு வளர வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்திய வர்த்தகத்துறை செயலர் அனூப் வாத்வான் அவர்கள், வர்த்தக சமநிலை ஆப்பிரிக்காவுக்கு சாதகமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு உதாரணமாக, 2017-18 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்க நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி, 2,400 கோடி டாலர் அளவிலும், இறக்குமதி, 3,800 கோடி டாலர் அளவிலும் இருந்ததைக் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி இறக்குமதி வங்கி, இந்தியாவின் ராஜீய ரீதியிலான பொருளாதாரத் தொடர்புகளை விரிவடையச் செய்ய உதவுகிறது. ஆப்பிரிக்காவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு சலுகை வட்டியுடன் கடனுதவியை இவ்வங்கி வழங்குகிறது. இந்திய, ஆப்பிரிக்க வர்த்தகம் 6200 கோடி டாலர் என்ற அளவில் தற்போது உள்ளது. இந்தியா, 40 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மருந்துப் பொருட்கள், பொறியியல் மற்றும் மின்னணுப் பொருட்களை ஏற்றுமதியும், இயற்கை வளங்கள், வைரம் போன்றவற்றை இறக்குமதியும் செய்கிறது. ஆப்பிரிக்காவின் மிகவும் பின்தங்கிய பொருளாதார நாடுகளுக்கு இந்தியா வரிகளற்ற சந்தையை வழங்குகிறது. 137 திட்டங்களை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு, 750 கோடி டாலர் முதலீடு செய்ய இந்தியா உறுதியளித்துள்ளது.

சாலைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பலதுறைகளில் ஆப்பிரிக்காவில் 17,000 கோடி டாலர் அளவிற்கு முதலீடு தேவைப்படுகிறது. வளர்ச்சி ஊக்கம் பெற்ற உள்நாட்டுப் பொருளாதாரமும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் தேவைகளை அதிகரித்துள்ளது. உலக வங்கியின் கணிப்பின்படி, அடுத்த இரு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் பொருளாதார வளர்ச்சி 3.6 சதம் என்ற நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.