பயங்கரவாதத்திற்கு எதிராக, ஃபிரான்ஸ்  உறுதியான நடவடிக்கை.

(அரசியல் விமர்சகர் எம் .கே .டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.)

பாகிஸ்தானை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-ஏ-முகமது வின்  தலைவன் மசூத் அஸரை, சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்க ஃபிரான்ஸ் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. இதனால் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் இந்தியாவிற்கு ஊக்கம் கிடைத்துள்ளது. ஐ நா பாதுகாப்புச் சபை, இந்த முடிவை எடுப்பதில் தோல்வி அடைந்துள்ளதால், ஃபிரான்ஸ் தனது முடிவை அறிவித்துள்ளது. இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதில், ஐ.நா. பாதுகாப்புச் சபை தோல்வியடைந்ததற்கான காரணம், மசூத் அஸர் மற்றும் ஜெய்ஷ் ஏ முகமது மீது நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டுக் கோரிக்கையை, சீனா தனது வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து மீண்டும் தடுத்து நிறுத்தியதுதான். 40 இந்திய பாதுகாப்பு வீரர்களின் உயிர் சேதத்துக்குக் காரணமாய் இருந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு, ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாதக் குழுவே பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்த பின்பு, சர்வதேச அளவில் கடும் கோபம் நிலவி வருவதைத் தொடர்ந்து, இவை அனைத்தும் அரங்கேறியுள்ளது  குறிப்பிடத்தக்கது..

இந்தக் கடுமையான சூழலின் பின்னணியில், ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் அவர்கள், மசூத் அஸர் மற்றும் பயங்கரவாத நிதித் திட்டம் தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் முடக்குவதாக அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நீண்ட போராட்டத்தில் இது முதல் படி ஆகும். பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ நிறுவனம் உள்பட, மற்ற அமைப்புகளின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் மசூத் அஸரின் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வருவது, ஃபிரான்ஸின் இந்த அறிவிப்பினால் அதிகம் பாதிக்கப்படப் போவதில்லை என்றாலும், செயலுத்தி ரீதியாக, ஃபிரான்ஸின் இந்த முடிவுக்கு உள்ள முக்கியத்துவம் குறையப் போவதில்லை. சர்வதேச சமுதாயத்தில் முன்னணி உறுப்பினராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருமாக உள்ள ஃபிரான்ஸின்  உறுதியான இந்தத் தீர்மானம்,  பாகிஸ்தானின் அனைத்துப் பருவ நட்பு நாடாகக் கருதப்படும் சீனா போடும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து, தனது நிலைப்பட்டை ஒட்டி சர்வதேச ஆதரவைப் பெறும் ஃபிரான்ஸின் முயற்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சர்வதேச மேடையில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போடுவது இது முதல் முறையல்ல என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்திய பாதுகாப்பு சபை கூட்டத்தில், சீனா தனது வீட்டோ சக்தியை உபயோகித்தது, உலக பயங்கரவாத ஆய்வாளர்களுக்கு எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த பத்து வருட காலத்தில், பாகிஸ்தானைச் சார்ந்த பயங்கரவாதக் குழுவைப் பாதுகாப்பதற்காக, சீனா நான்காவது முறையாக வீட்டோ சக்தியை உபயோகித்துள்ளது. இதற்கு முன்னால் இது போன்ற தீர்மானத்தை, 2009, 2016 மற்றும் 2017 ஆம் வருடங்களில், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்துள்ளது.

தனது தரப்பு வாதங்கள் எடுபடாத நிலையில் சீனா ஒருபுறம் இருக்க, ஃபிரான்ஸ் எந்தவிதக் குழப்பமும் இன்றி, பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதில் எப்பொழுதும் இந்தியாவின் பக்கம் இருப்போம்  என்று தீர்க்கமாக அறிவித்துள்ளது. பிரான்ஸின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராகத் தாம் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு, ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் பிரான்ஸ் ஆதரவு திரட்டுவதாக அறிவித்துள்ளது. பிரான்ஸின், இந்த முடிவு ஏற்கனவே பலனளிக்கத் துவங்கியுள்ளது.. பிரான்சின் இந்த முயற்சியைத் தொடர்ந்து, ஜெர்மனியும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடுவதற்குத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

சர்வதேச அமைப்பு கூட்டாக எடுக்கத் தவறிய முடிவை, சர்வதேச சமுதாயத்தில் மிக முக்கிய உறுப்பினராகவும், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினருமாக உள்ள ஃபிரான்ஸ், தனித்து எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் சீர்திருத்தங்கள், குறிப்பாக, பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் உலக நாடுகளின் போக்கிற்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்ப்பது போன்றவை நடைமுறைக்கு வரும் வரை, முக்கிய உறுப்பினரின் தன்னிச்சையான முடிவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்பது தெள்ளத் தெளிவு.

சில மாற்றங்கள் உருவாவதற்கு சாத்தியக் கூறுகள் நிலவக்கூடும். யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத தனது தர்க்கத்தை சீனாவும் கவனிக்கத் தவறாமல் இருக்கலாம். பாதுகாப்பு சபையில் தாம் மேற்கொண்ட  நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட சீனாவின் வெளியுறவுத் துறை அறிவிப்பு, சப்பைக்கட்டு போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தியது எனலாம். இந்த விஷயத்தை  ஆழ்ந்து பரிசீலிக்க அதிக கால அவகாசம் பாதுகாப்புச் சபைக்கு தேவைப்படுவாதாக சீனா கூறியுள்ளது. சர்வதேச பயங்கரவாதத்தைக் கையாள்வதில், ஃபிரான்ஸின் இந்த முன்முயற்சி, வரப்பிரசாதம் போல் அமைந்துள்ளது. வருங்காலத்தில் ஃபிரான்ஸின் இந்த முயற்சி மேலும் வலுவடையும் என நம்புவோம்.