பாகிஸ்தானில் தீவிரவாத ஒழிப்புக்கு அமெரிக்கா தரும் அழுத்தம்

 

ஆகாஷவாணியின் செயலுத்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி

பாகிஸ்தான் அரசு நம்பத்தகுந்த வகையில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டிருப்பதுடன் அந்நாட்டில் உலவி வௌம் தீவிரவாதக் குழுக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உறுதியாகக் கூறியுள்ளது.

மீண்டும் ஒரு முறை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அரசு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. ஜெய்ஷ் ஏ முகமது, லஷ்கர் ஏ தொய்பா ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் எதிரான நிலையான நம்பத்தகுந்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலாகோட் வான் தாக்குதல்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் நம்பத்தகுந்தவையாக இல்லை எனவும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் உறுதியாக எடுத்தால் மட்டுமே  சர்வதேச நாடுகளின் நம்பிக்கையைப் பெற இயலும் என அமெரிக்க அதிகாரி கூறினார்.

சில தீவிரவாதிகளின் சொத்துக்களை முடக்குதல், சில தீவிரவாத்களைக் கைது செய்தல், ஜெய்ஷ் ஏ முகமது குழுக்களைக் கட்டுப்படுத்துதல் என துவக்க வேலைகளை மட்டுமே பாகிச்தான் அரசு செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

முன்னர், எப்போதெல்லாம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டாலும் சில மாதங்களில் அவர்களை விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. மேலும் தீவிரவாதிகள் நாட்டில் சுதந்தரமாக நடமாடவும் தர்ணா போராட்டங்களை நடத்தவும்  பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்து வருகிறது. ஆனால் அமெரிக்க அரசு நம்பத்தகுந்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நீண்ட காலமாகவே சுதந்தரமாக இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நிலையான நம்பத்தகுந்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் அரசுக்கு அனைத்து உலக நாடுகளின் அழுத்தம் கொடுக்கப்பட்டாக வேண்டும் எனவும் அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் பொருளாதார வளர்ச்சியும் அதல பாதாளத்தை நோக்கிச் சரிந்து வருவதால் தீவிரவாதத்தைக்  கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் பாகிஸ்தான் பொருளாதாரம் ஆப்பிரிக்கா நாடுகளை விட மோசமாகும் நிலை ஏற்படும்.

தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நிலையான நம்பத்தகுந்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சிக்கான உதவிகளைப் பெற இயலும் என்பதோடு நாட்டின் மரியாதையும் இறையாண்மையும் பாதிக்கப்படும் அல்லது தனிமைப்படுத்தப்படும் கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அண்டை நாடுகளின் ராணுவமும் தயார் நிலைய்ல் உள்ளது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. மீண்டும்  தீவிரவாதத் தாக்குதல் இந்தியாவில் தொடர்ந்தால், நிலைமை மோசமாகிவிடும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை இனி துளியும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என அந்நாடு அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி இந்தியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்திற்கு அடைக்கலம் தந்ததன் விளைவாக ஏற்பட்டது என்கிறது அமெரிக்க அரசின் செய்திக் குறிப்பு.

இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும் வேளையில் அமெரிக்க அரசு இரு நாடுகளுடன் சமரசம் செய்ய முனைப்பு காட்டியதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் தந்தது.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசு தவறினால், உலக நாடுகளால் அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் என்று கூறினால் அது மிகையாகாது.