(ஜேஎன்யூ பேராசிரியர் சிந்தாமனி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)
அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப் அவர்கள், கோலான் ஹைட்ஸ் குறித்த அமெரிக்காவின் கொள்கையில், அடிப்படை அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின், இஸ்ரேல் ஆக்கிரமித்த 500 சதுர மைல் பரப்பிலான சிரியப் பகுதியை, அவர், இஸ்ரேலின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளார். இதுகுறித்து 50 ஆண்டு காலமாக அமெரிக்கா எடுத்து வந்த நிலைப்பாட்டிற்கு இது முரணாக உள்ளது. இதுகுறித்து, அதிபர் திரு டிரம்ப் அவர்கள் டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்.
எனினும், ஏற்கனவே, 50 ஆண்டு காலமாக, இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள இப்பகுதிக்கான உரிமை குறித்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட, அமெரிக்கா திட்டமிட்டதை உறுதி செய்யும் விதமாக அவரது டுவிட்டர் செய்தி அமைந்துள்ளது போல் தோன்றுகிறது.
கோலான் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேலுக்கான உரிமையை நிலைநாட்டும் தீர்மானத்தை 3 செனட் மற்றும் ஒரு காங்கிரஸ் உறுப்பினர், அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தனர். மனித உரிமைக்கான தனது அறிக்கையில், அமெரிக்க உள்துறை, ஆக்கிரமிப்பு கோலான் ஹைட்ஸ் பகுதியை, இஸ்ரேல் நிர்வாக கோலான் ஹைட்ஸ் பகுதி என அழைத்திருந்தது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலுக்குப் பயணித்துள்ள சமயம் பார்த்து, அதிபர் டிரம்ப் இந்த டுவிட்டர் செய்தி வெளியிட்டது, இது குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் செயலுத்தியில் பிரதிபலிப்பாக அமைகிறது. அவரது இந்த செய்தி வெளியிட்ட சமயமும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ அவர்கள் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ள நிலையில் இந்த செய்தி வெளியானது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல.
அமெரிக்காவின் இந்த மாறுபட்ட கொள்கை, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாஹூ அவர்களுக்கு சாதகமாக அமைவதற்காக எடுக்கப்பட்டதாக சிலர் கருதுகின்றனர். எனினும், இதுவரை அமெரிக்க அதிபர்கள் எடுத்த நிலைப்பட்டிலிருந்து மாறுபட்ட ஒன்றைத் தாம் கையாளப் போவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார். 2017 ஆம் ஆண்டில், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அவர் அங்கீகாரம் செய்தார்.
எதிர்பார்த்தபடி, இஸ்ரேல், டிரம்ப் அவர்களின் அறிவிப்பை வரவேற்றுள்ளது. பல ஆண்டுகளாக, இஸ்ரேல் தலைவர்கள், இது குறித்து அமெரிக்காவை வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், பல அமெரிக்க அதிபர்கள், அரபு நாடுகளைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்க்கவும், ஐ.நா.வின் கோலான் ஹைட்ஸ் குறித்த தீர்மானத்துக்கு மதிப்பளிக்கவும் இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர்த்து வந்தனர்.
அரபு நாடுகளில் அரசியல் கொந்தளிப்பு, சிரியாவில் உள்நாட்டுப் போர் போன்றவற்றின் பின்னணியில், இஸ்ரேல் குறித்த மாறுபட்ட கொள்கையை மேற்கொள்ள தாம் எடுத்த உறுதிப்பாட்டை பூர்த்தி செய்யும் விதமாக, இந்த அறிவிப்பை டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் அவர்களின் இந்த அறிவிப்பிற்கு, மேற்காசியாவிலும், ஐரோப்பாவிலும் காட்டமான எதிர்வினை எழுந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு போரின் போது இஸ்ரேல் ஆக்கிரமித்து, பின்னர் 1981 ஆம் ஆண்டு தனது ஆளுமையின் கீழ் கொண்டு வந்த கோலான் ஹைட்ஸ் பகுதியை எப்பாடுபட்டாவது மீட்போம் என சிரியா கூறியுள்ளது. துருக்கி, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளன. அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளான ஃபிரான்ஸும், ஜெர்மனியும் டிரம்ப் அவர்களின் கொள்கையை ஆதரிக்கவில்லை.
அமெரிக்காவின் இந்த கொள்கை மாற்றத்தை, பாலஸ்தீனம் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. அமைதிக்கான வழிமுறைகளுக்கு இது மேலும் தடைக்கல்லாக விளங்கும் என்று அந்நாடு கருதுகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாலஸ்தீன அதிபரை சந்திக்காததும், டிரம்ப் அவர்களின் அறிவிப்பை, துணிகரமான, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக அவர் பாராட்டியதும், பாலஸ்தீனத்துக்கு மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் இத்தீர்மானம் எத்தைகைய தாக்கத்தை உண்டு பண்ணும் என்று தற்போது கூற இயலாது. உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள சிரியா, இஸ்ரேலுடன் போரிட இயலாது. அண்மையில், க்ரிமியா பகுதியை ஆக்கிரமித்துக் கொண்ட ரஷ்யா, தார்மீகமான முறையிலான நிலைப்பாட்டை எடுக்க இயலாது. சவூதி – ஈரான் பனிப்போர், அரபுநாடுகளில் நிலவும் கொந்தளிப்பான உள்நாட்டுச் சூழல் ஆகியவற்றால், அமெரிக்காவுக்கு எதிராக, அரபுநாடுகள் ஒன்றிணைய இயலாது.
எனினும், ஆக்கிரமிப்புப் பகுதியை அமெரிக்கா அங்கீகரித்தது, சர்வதேச நியதிகளின்மேல் தாக்கம் ஏற்படுத்தும். இந்தியா, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன், மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி முயற்சிக்கு ஆதரவளிக்கிறது. இஸ்ரேலுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ள நிலையிலும், இந்தியா, பாலஸ்தீன நாட்டிற்கு அங்கீகாரம் அளிப்பதோடு, இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளுக்கு, அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு ஆதரவும் அளிக்கிறது.