சர்வதேச அழுத்தத்தில் பாகிஸ்தான்.

(ஐ.டி.எஸ்.ஏ – தெற்காசிய மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்.டாக்டர் அஷோக் பெஹுரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர், ஃபெடெரிகா மொகெரினி அவர்கள், பாகிஸ்தானுடன் செயலுத்தி ரீதியான ஒரு புதிய ஈடுபாட்டுத் திட்டத்தைத் துவக்க ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட புல்வாமா தாக்குதல்களை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்த சில வாரங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்டத் தலைவர்கள்  இஸ்லாமாபாதிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பாகிஸ்தான், தெளிவான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்துத் தொடர்ந்து போரிட வேண்டும். ஐ.நா-வால் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதக் குழுக்களை மட்டுமல்லாமல், இப்படிப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கும் தனி நபர்களையும் பாகிஸ்தான் தனது இலக்காகக் கொள்ள வேண்டும்’ என ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜெர்மனி, போலாந்து, இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போன்ற சில ஐரோப்பிய நாடுகளும், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களைப் பற்றிய தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீகோ மாஸ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

இதற்குப் பிறகு, ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் தடைகளுக்கான கமிட்டியில், அமெரிக்கா, ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நிரந்தர உறுப்பினர் நாடுகளும், மசூத் அஸாரை அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியாகவும், ஐ-நா-வால் முத்திரையிடப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாகவும் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்தன. சீனாவைத் தவிர, ரஷ்யா, ஜெர்மனி உட்பட மற்ற 14 உறுப்பு நாடுகளும் இதற்கு ஆதரவளித்தன.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலால் பாகிஸ்தான் சர்வதேச கண்டனத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாத இயக்கங்களைக் கையாள்வதில் பாகிஸ்தான் காண்பிக்கும் மெத்தனமே இந்த சர்வதேச கண்டனத்திற்குக் காரணம். இருப்பினும், ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தில், சீனா, அனைத்து நாடுகளின் முடிவிற்கு எதிராகச் சென்று பாகிஸ்தானைக் காப்பாற்ற முடிவெடுத்தது. எனினும், தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்காக பாகிஸ்தான் தன் அரசியல் முனைப்புகளை வீணாக்குகின்றது என பல விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவருடன் நடத்திய சந்திப்பில், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றியும், உலக சமூகத்திற்காக தனது பொறுப்புகளையும் உறுதிகளையும் நிறைவேற்றத் தான் தயாராக இருப்பதைப் பற்றியும் கூறி, திருமதி. மொகெரினி அவர்களை சமாதானப்படுத்த, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியும் அவரது குழுவும், பெரும் முயற்சியை எடுக்க வேண்டி இருந்தது என பாகிஸ்தான் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களைக் கொண்ட இரு நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் முழு அளவிலான போருக்கு ஆயத்தமாயின. இதைத் தடுக்க, பயங்கரவாதத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் பாகிஸ்தானைக் கட்டாயப்படுத்தின. எனினும், பயங்கரவாத இயக்கங்ககளுக்கு எதிராக பெயரளவிலான நடவடிக்கைகளைத் தாண்டி, பாகிஸ்தான் வேறொன்றும் செய்யாது என்ற கவலையும் உள்ளது. இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ள, பாகிஸ்தான் பல காலமாக, தனது ராணுவத்தின் ஒரு தொடர்ச்சியாகவே இந்த இயக்கங்களைப் பயன்படுத்தி வருகின்றது. எஃப்.ஏ.டி.எஃப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு மூலம் தடை செய்யப்படலாம் என்ற அச்சமும், சில நாட்களாக, பாகிஸ்தான் ஊடக விமர்சகர்களின் மனங்களை ஆட்கொண்டிருக்கும் மிகப் பெரிய விஷயமாகும். பாரீஸிலிருந்து செயல்படும் இந்த அமைப்பு, உலகளவில் பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கான நிதி வழங்கல் ஆகியவற்றை நீக்குவதில் கவனம் செலுத்துகிறது. எஃப்.ஏ.டி.எஃப்-ன் எச்சரிக்கைப் பட்டியலான சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தானை நீக்க, சர்வதேசத் தரத்தை எட்டும் அளவிற்கு, அந்நாடு நடவடிக்கைளை எடுத்துள்ளதா என்பதை இந்த அமைப்பு மதிப்பாய்வு செய்யவுள்ளது. எஃப்.ஏ.டி.எஃப்-ன் எச்சரிக்கைப் பட்டியலில் தொடர்ந்து இருப்பதோ, அல்லது, அடுத்த நிலையான கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதோ, ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தங்கள் நாட்டிற்கு, எதிர்காலத்தில் தீவிரமான சவால்களை முன்னிருத்தும் என்ற அச்சம் பாகிஸ்தானில் உள்ளது.

சர்வதேச அழுத்தம் காரணமாக, பாகிஸ்தானின் நடவடிக்கைகளின் செயல்முறைகள் கவனிக்கத்தக்க முறையில் உள்ளன. அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த இயக்கங்களுக்கு எதிராக பெயரளவிலான நடவடிக்கைகளையவாது எடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தப்படும். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த தாக்குதல்கள், மும்பை தாக்குதல்கள் மற்றும் பதான்கோட் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானிடமிருந்து இப்படிப்பட்ட நடவடிக்கைகளையே காண முடிந்தது.

எனினும், அழுத்தம் சற்று தளர்ந்தவுடன், தனது வெளியுறவுக் கொள்கையின் ஓர் அங்கமாக பயங்கரவாதத்தை மீண்டும் உபயோகிக்கும் பாகிஸ்தானின் பழக்கப்பட்ட கொள்கை மீண்டும் நடைமுறைக்கு வந்துவிடும். தீர்க்கப்படாமால் இருக்கும் அனைத்து விவகாரங்களையும் அமைதியான முறையில் தீர்க்க, ‘இந்தியாவுடன் பேச்சுவார்த்தை’ என்பதை பாகிஸ்தான் தலைவர்கள் எப்போதும் ஒரு முகமூடியாகப் பயன்படுத்திடயுள்ளனர். எனினும், பாகிஸ்தானின் நிழல் அரசாங்கமாக இயங்கும் சக்திகள், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க முயற்சி எடுக்கப்படும் போதெல்லாம், சூழலை சீரழிக்க, பயங்கரவாத இயக்கங்களைத் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இப்பின்னணியில், பாகிஸ்தான் ஆதரவில் இயங்கும் பயங்கரவாதம் என்ற விவகாரத்தில், சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து உழைப்பதற்கான இந்தியாவின் கொள்கை, சரியான ஒன்றாக, நடைமுறைக்கேற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.

தொடர்ச்சியான சர்வதேச அழுத்தம் மற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் மீது சரியான கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம்தான் பாகிஸ்தானில் சரியான திசை நோக்கிய, ஆக்கப்பூர்வமான கொள்கை மாற்றங்களைக் கொண்டு வந்து, அதன் மூலம் பிராந்திய இறுக்கங்களைக் குறைக்க முடியும்.