சிரியாவில் தயேஷ் அமைப்புக்கு முடிவு காலமா?

(மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர்  டாக்டர் மொஹம்மத் முதசிர் க்வாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

இவ்வாண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி, வடகிழக்கு சிரியாவில், இயற்கை எழில் பொருந்திய யுஃப்ரேட்ஸ் பள்ளத்தாக்கின் மத்தியில் இருக்கும் பகௌஸ் என்ற நகரத்தைக் கைப்பற்றி விட்டதாக, அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் எஸ்.டி.எஃப் எனப்படும் சிரிய ஜனநாயகப் படைகள் அறிவித்தன. போரால் பாதிக்கப்பட்ட சிரியாவில், 2017 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தயேஷ் எனப்படும் ஐ.எஸ். இயக்கம், தனது தலைநகர் ராக்காவின்  கட்டுப்பட்டை இழந்தது. பகௌஸ், இந்த இயக்கத்திடம் இருந்த கடைசி புறக்காவல் பகுதியாகும்.

2004 ஆம் ஆண்டு, அல்-கொய்தா என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஓர் கிளையாக தயேஷ் ஈராக்கில் உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு, இந்த இயக்கம் தன்னை சுதந்திரமான ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக்’, அதாவது ஈராகிற்கான இஸ்லாமிய இயக்கமாக’ நிலைநிறுத்திக் கொண்டது. சிரிய எழுச்சி நடவடிக்கைகளால் உருவாகிக் கொண்டிருந்த உள்நாட்டுப் போரைப் பயன்படுத்திக் கொண்ட இந்த பயங்கரவாத இயக்கம், பெரிய பிராந்தியங்களைக் கைப்பற்றி, அந்நாட்டில் தன்னை விரிவுபடுத்திக் கொண்டது. 2014 ஆம் ஆண்டு, மொசூல் நகரம் அதன் கட்டுப்பாட்டிற்கு வந்தபின்னர், தயேஷ் தலைவன் அபு பகர் அல்-பாக்தாதி, தன்னை ஒரு ‘காலிஃப்’ அதாவது, மத மற்றும் அரசியல் தலைவனாக பிரகடனப்படுத்திக் கொண்டதோடு, ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது தயேஷ் எனப்படும், ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசின் உருவாக்கத்தையும் அறிவித்தான். தயேஷ் பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பகுதிகளில் பலர் இந்த இயக்கத்தைப் பின்பற்றத் துவங்கினர்.

பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் போராளிகளைக் கவர்ந்த தயேஷ், உலகின் பல இடங்களில் பலர், தனி நபர்களாகப் பல தாக்குதல்களை நடத்த அவர்களுக்கு ஊக்கமளித்தது. இந்த இயக்கத்தின் அட்டூழியங்களும், பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளும், உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தன. இவ்வியக்கத்தின் விஷத்தனமான உறுதியை உடைக்க நாடுகள் உகந்த செயலுத்தியைப் பற்றி சிந்தித்தன. தயேஷைத் தோற்கடிக்க, சிரியாவில், இரண்டு வெவ்வெறு கூட்டணிகள் தங்களது ராணுவ நடவடிக்கைகளைத் துவக்கின. ஈரான் மற்றும் சிரியாவின் பஷார் அல்-அசாத் ஆட்சிக்கு இடையிலான கூட்டணியில் ரஷ்யா சேர்ந்தது. குர்து படைகளுடன் இணைந்த அமெரிக்கா, எஸ்.டி.எஃப்-இன் உருவாக்கத்திற்கு உதவியது.

2016 ஆம் ஆண்டின் இறுதியில், குர்துகளின் எஸ்.டி.எஃப், தயேஷிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை பல முனைகளின் துவக்கியது. இதற்கு அமெரிக்கப் படைகள், வான் வழித் தாக்குதல்கள் மூலம் பலம் சேர்த்தன. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சிரியாவில், தயேஷின் தலைநகரான ராக்காவை வீழ்த்தியதன் மூலம், இவர்களுக்கு முதல் வெற்றி கிடைத்தது. சில இடையூறுகள் இருந்த போதிலும், இறுதியாக, இந்தப் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடிப்பதில், எஸ்.டி.எஃப் வெற்றி கண்டது.

தயேஷ் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், சிரிய குர்துகளின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கின்றது. தயேஷ் இயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில், தாங்கள் மிகச் சிறந்த போர் வீரர்கள் என்பதை குர்து படைகள் நிரூபித்துள்ளன. தற்போது, ஏறக்குறைய சிரியாவின் வடகிழக்குப் பகுதிகள் முழுவதுமே எஸ்.டி.எஃப் கையில் உள்ளது. தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளில், ரொஜாவா என்கிற ஒரு தன்னாட்சிப் பகுதியை எஸ்.டி.எஃப் உருவாக்கியுள்ளது. சிரிய ஜனநாயக ஆணையத்தின் மூலம், ஜனநாயக ரீதியில் செயல்படுவதற்கான தங்களது திறனையும் குர்துகள் வெளிக்காட்டியுள்ளார்கள். எஸ்.டி.எஃப் என்ற நேர்த்தியான போர்ப் படையையும் உருவாக்கியுள்ளார்கள். இருப்பினும், தயேஷிற்குப் பிறகான சிரியாவில், அரசியல் ரீதியான ஒரு தீர்வைக் காண்பது சவாலாக உள்ளது. சிக்கலான ஒரு சூழ்நிலையில், பல தீவிர சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், சிரியாவின் எதிர்காலத்தைப் பத்திரப்படுத்த, அசாத் ஆட்சியுடன் சேர்ந்து உழைக்க குர்துகள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

எனினும், சிரியா முழுவதிலும் தன்னுடைய இறையாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்றே அசாத் தரப்பு வலியுறுத்துகிறது. இந்த விஷயம், அமெரிக்க ஆதரவு பெற்ற குர்துகளுக்கும், ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற அசாத் தரப்பிற்கும் இடையில் உடன்பாடின்மைக்கான ஒரு விஷயமாக இருக்கலாம். சிரியாவின் முழுக் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்ற சிரிய அரசாட்சியின் நிலைப்பாட்டிற்கான தங்களது ஆதரவை, ரஷ்யாவும் ஈரானும் கோடிட்டுக்காட்டியுள்ளன. ஆனால், குர்துகளுக்கு எந்த வித சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்பதில், ரஷ்யாவைக் காட்டிலும், ஈரான் பிடிவாதமாக உள்ளது.

வடமேற்கு சிரியாவில், போரின் தீவிரத்தைக் குறைக்கும் செயல்முறையிலும், அதற்கான பகுதிகளை ஒழுங்குபடுத்துவதிலும் துருக்கி முக்கியப் பங்காற்றியுள்ளது. ஃப்ரீ சிரியா ஆர்மி எனப்படு சுதந்திர சிரியப் படை உட்பட, அரேபியர்கள் அதிகமுள்ள எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆதரவாளராக துருக்கி இருந்துள்ளது. துருக்கியும் குர்துகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பையே காட்டுகிறது. எஸ்.டி.எஃப்-ஐ, குறிப்பாக இதன் பாகமான மக்கள் பாதுகாப்புப் பிரிவான வொய்-பி.ஜி-ஐ துருக்கிய பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக அந்நாடு பார்க்கின்றது. தடை செய்யப்பட்ட துருக்கியின் பிரிவினைவாதக் குழுவான பி.கே.கே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன்  வொய்-பி.ஜி க்கு இருக்கும் நெருக்கமே, துருக்கியின் அச்சத்திற்குக் காரணமாகும். அமெரிக்க அதிபர்  டிரம்ப், வட சிரியாவில் தனது ராணுவ இருப்பை நீட்டிக்க தயக்கம் காட்டுவது, குர்துகளின் நிலையை இன்னும் சிக்கலாக்கலாம்.

சிரியாவின் நலனில் அக்கறையுள்ள அனைவரின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, சர்வதேச மற்றும் பிராந்திய நிலையில் பொறுப்பில் உள்ளவர்கள், ஒரு சரியான அரசியல் தீர்வைக் காண வேண்டும். தயேஷின் வீழ்ச்சி, சிரியாவின் நன்மைக்கே என்பது தெளிவு. எனினும் சிரியாவில் அரசியல் ரீதியான ஒரு தீர்வைக் காண்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் ஒரு தீர்வு வராத பட்சத்தில், தற்போது உடைக்கப்பட்டிருக்கும் தயேஷ் இயக்கம், மீண்டும் ஒரு முறை தலை தூக்கி பயங்கரவாத நடவடிக்கைகளைத் துவக்க வாய்ப்புள்ளது.