அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சி.

(மூத்த அறிவியல் விமரிசகர் பத்ரன் நாயர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

அண்மைக் காலமாக, அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருகிறது. அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சியிலிருந்து, பயன்பாட்டு ஆராய்ச்சிக்கு இந்தியா மாறியுள்ளது. பரிசோதனைக் கூடங்களில் முடங்காமல், அறிவியல் ஆராய்ச்சியின் பயன்கள், சமுதாயம் எதிர்கொள்ளும் அன்றாட சவால்களைத் தீர்க்க உதவும் வகையில் தற்போது முடுக்கிவிடப்படுகிறது. உணவு மற்றும் தேசியப் பாதுகாப்பில் சுதந்திர இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதனைப் பறைசாற்றும் விதமாக, முன்னாள் பாரதப் பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள், ’ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்ற கோஷத்தை அளித்தார். இக்கோஷத்துடன், ஜெய் விஞ்ஞான் என்ற சொல்லையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இணைத்தார். தற்போது, இந்தியா, ஜெய் அனுசந்தான் என்ற சொல்லையும் இக்கோஷத்துடன் இணைத்து, அறிவியல் ஆராய்ச்சியை தேசியப் பணிகளில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

பிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப, புதுமைப் படைப்பு ஆலோசனைக் கவுன்ஸில் மறுகட்டமைப்புக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், அறிவியல் தொழில்நுட்பத்தில் உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்தும் முயற்சி வெளிப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள், அறிவியல் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இந்தியாவை இடம் பெறச் செய்யும் சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதல்ல என்றாலும், இதனை சாதிக்கக்கூடிய திறன் இந்தியாவிடம் கண்டிப்பாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடு மும்மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், உலகப் புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகளான சர் சி.வி.ராமன், ஜக்தீஷ் சந்திர போஸ், கணித மேதை ஸ்ரீனிவாசன் ராமானுஜம், மேக்நாத் சாஹா போன்றவர்கள் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அளித்த பங்களிப்புக்கு நிகராக, தற்போதைய இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு உயரவில்லை.

பிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப, புதுமைப் படைப்பு ஆலோசனைக் கவுன்ஸிலுக்கு இடப்பட்ட பணிகளில், நீர், எரியாற்றல், சுகாதாரம், சுற்றுச்சூழல், பருவநிலை, வேளாண்மை, உணவு போன்ற துறைகள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

குவாண்டம் எல்லை, செயற்கை அறிவு, தேசிய பன்முகத்தன்மை, மின்சக்தியால் போக்குவரத்து, மனித உடல்நலனில் உயிரி அறிவியல், கழிவுகளிலிருந்து சொத்துக்கள், ஆழ்கடல் ஆராய்ச்சி, புதிய இந்தியாவுக்கான துரித வளர்ச்சி ஆகிய, வருங்கால முக்கியத்துவம் பெற்ற துறைகளில் கொள்கைகளை இயற்றும் பணியை, பிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப, புதுமைப் படைப்பு ஆலோசனைக் கவுன்ஸில் மேற்கொள்ளும். இத்துறைகளில் இந்தியா கண்ணுறும் வளர்ச்சி, உலக அரங்கில் இந்தியாவின் கையை வலுப்படுத்தும்.

அடிப்படை அறிவியலுடன் கூடி, பயன்பாட்டு அறிவியலுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வேளாண் துறையில் அறிவியலின் பங்கினால், ஊரகப் பொருளாதாரத்தில் மிகுந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. வாநிலை அறிக்கையை முன்கூட்டியே அறிவிப்பதன் வாயிலாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50,000 கோடி ரூபாய் அளவிற்கு நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. வாநிலை மற்றும் கடல் பற்றிய முன்கூட்டிய அறிக்கைகளின் தரம் உயர்ந்துள்ளது. வாநிலை மையத்தில், 6.8 பீட்டா ஃப்ளாப்ஸ் திறன் கொண்ட பிரத்யுஷ் மற்றும் மிஹிர் எனப்படும் சூப்பர் கணிணிகள் செயல்பாட்டில் உள்ளன. உலகிலேயே, மிகச்சிறந்த வாநிலை முன்கூட்டி அறியும் கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது.

படிம எரியாற்றல் பயன்பாட்டைக் குறைக்கும் உறுதிப்பாட்டை எடுத்துள்ள இந்தியா, சுத்தமான எரியாற்றல் உற்பத்தியின்பால் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை இந்திய அறிவியல் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், டேராடூனிலிருந்து, தில்லிக்கு முற்றிலும் உயிரி எரியாற்றலுடன் விமானம் பறந்து சென்று சரித்திரம் படைத்தது. இவ்வாண்டு நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது,  இந்திய விமானப் படை, ஏஎன் 32 என்ற சரக்குப் போக்குவரத்து விமானத்தை முற்றிலும் உயிரி  எரியாற்றல் மூலமாகவே ஓட்டி, வரலாறு படைத்தது.

விண்வெளித்துறையில், இந்தியா வலுவான தலைமை இடத்தில் உள்ளது. குறைந்த செலவில் ஒப்பற்ற சேவையை வழங்கும் இந்திய விண்வெளித்துறையை நோக்கி, உலகநாடுகள் அணிவகுக்கின்றன. மொத்தத்தில், இந்தியாவில் தற்போது, அறிவியலுக்கு தேசிய அளவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சரியான வழிகாட்டுதலுடன் இத்துறை மேலும் பல வியக்கத்தக்க சாதனைகளை சாத்தியமாக்கும் என்றால் அது மிகையல்ல.