(மூத்த பத்திரிக்கையாளர் கே.வி.வெங்கடசுப்ரமணியன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி)
மாசுவினாலும், வெப்பமயமாதலாலும் பாதிப்படைந்துள்ள பூமியைப் பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டை உலகநாடுகள் எடுத்துக் கொண்டுள்ளன. உலகம் சந்திக்கும் சுற்றுச் சூழல் சவால்களை எதிர்கொள்ள, புதுமைப் படைப்புக்களின் உதவியுடன், நீடித்த எதிர்காலத்திற்காக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தத் தேவையான அடிப்படைப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
அண்மையில், கென்யாவில், நைரோபியில் முடிவடைந்த ஐந்து நாள் சுற்றுச் சூழல் மாநாட்டில், 179 ஐ.நா. உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் இந்த உறுதிப்பாட்டை எடுத்தனர். ஐ.நா.வின் இந்த நான்காவது சுற்றுச் சூழல் மாநாட்டில், “சுற்றுச் சூழல் சவால்கள் மற்றும் நீடித்த உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான புதுமைத் தீர்வுகள்” என்பது கருப்பொருளாக விளங்கியது. மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள், மாற்றத்திற்கான துணிச்சல்மிக்க திட்டத்தை சமர்ப்பித்தனர். கருப்பொருள் சார்ந்த செயல்திட்டத்தைக் கையாண்டு, உபயோகமற்ற பிளாஸ்டிக் கழிவுகளைக் கணிசமாகக் குறைக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள், தங்கள் நாட்டின் வளங்களை சரிவரக் கையாளும் செயலுத்தியை, முழுமையான சுழற்சி முறைகளில் இணைத்து, குறைந்த கார்பன் பொருளாதாரங்களாகத் தங்கள் நாடுகளை மாற்ற உறுதியளித்துள்ளனர்.
மாநாட்டில் 26 தீர்மானங்களும் முடிவுகளும் அங்கீகரிக்கப்பட்டன. 2030 ஆம் ஆண்டுக்குள், ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்கும் அமைச்சர்கள் பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் சுற்றுச்சூழல் புள்ளி விவர செயலுத்தித் திட்டங்களுக்கு இப்பிரகடனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இப்பிரகடனம், உலகில் நைட்ரஜன் பயன்பாட்டுத் திறன் குறைந்த அளவில் உள்ளது என்றும், அதனால் ஏற்படும் மாசு மக்களின் சுகாதாரத்தைப் பாதிப்பதோடு, பருவநிலை மாற்றத்திற்கும், ஓஸோன் குறைவிற்கும் வழிவகுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைக் கணிசமாக குறைக்கும் தீர்மானத்தை இந்தியா முன்னிலைப்படுத்தியது.
கார்பனுக்கு உள்ளது போன்றே, நைட்ரஜனுக்கும் சர்வதேச ஒருங்கிணைப்பை உருவாக்க இந்தத் தீர்மானங்கள் உதவும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் தலைமையில், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் கழிவுகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், உற்பத்தியாகும் பிளாஸ்டிக்கில், சிறு பங்கே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும், மற்றவை சுற்றுச்சூழல், நீர்நிலைகளின் பல்லுயிர் ஆகியவற்றில் பாதிப்பு உண்டாக்குகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருங்கடல் மற்றும் வலுவற்ற சுற்றுச் சூழல் ஆகியவற்றைக் காக்க வேண்டியதன் அவசியத்துக்கு, இம்மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கடல்பகுதிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து பல தீர்மானங்களை அமைச்சர்கள் அங்கீகரித்தனர்.
ஐந்து உலகநாடுகளின் தலைவர்கள், 157 சுற்றுச் சூழல்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட 5000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். விஞ்ஞானிகள், கல்வித்துறையினர், தொழிலதிபர்கள் ஆகியோர் இதில அடங்குவர்.
நீடித்த உணவு உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு, வலுவான வேளாண் வழிமுறைகளை ஊக்குவிக்க, இம்மாநாடு உறுதி மேற்கொண்டது. நீடித்த வளங்கள் மேலாண்மை மூலம், வறுமையை ஒழிக்கவும் உறுதி மேற்கொள்ளப்பட்டது. மாநாட்டின்போது, ஆறாவது உலக சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. சுற்றுச்சுழலுக்கும் மக்களின் சுகாதரத்திற்கும் உள்ள தொடர்பினை இவ்வறிக்கை வெளிக்கொணர்ந்தது. ஆரோக்கியமான மக்களுக்கு ஆரோக்கியமான பூமி என்ற கருப்பொருளில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை, உலக சுற்றுச்சூழல் குறித்த விரிவான ஆய்வை உள்ளடக்கியுள்ளது.
இதுவரை பின்பற்றிய வழக்கமான செயல்முறை நீடித்தால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதையும், பூமியைக் காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் இவ்வறிக்கை விவரமாக எடுத்துரைக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட வேண்டிய நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான சுற்றுச் சூழல் நடவடிக்கைகள் குறித்து கொள்கை வரைவாளர்கள் முடிவெடுக்க, இந்த அறிக்கை உதவும்.
சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், காற்றும் நீர் மாசினால் லட்சக் கணக்கானோர் 2050 ஆம் ஆண்டில் முன்கூட்டியே உயிரிழப்பர் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை செயல்பாடு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, உலக நாடுகளின் சுற்றுச்சுழல் குறித்த செயல் திட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.