நிதி செயல்பாட்டுக் குழு பாகிஸ்தான் பயணம்.

(செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

பாரீஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி செயல்பாட்டுக் குழுவின் ஓர் அங்கமான, பண மோசடி கண்காணிப்புக்கான ஆசிய பஸிஃபிக் குழு, அண்மையில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டது. நிதிக் குற்றங்களைத் தடுக்க, சர்வதேசத் தர இலக்குகளை எட்டுவதில் பாகிஸ்தான் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்று ஆய்வு செய்து, அதனடிப்படையில், ஏற்கனவே நிதி செயல்பாட்டுக் குழு பாகிஸ்தானை, தனது சாம்பல் பட்டியலில் இணைத்திருந்ததை மறு ஆய்வு செய்ய இக்குழு பாகிஸ்தானுக்குச் சென்றது.

ஆசிய பஸிஃபிக் குழு, பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி, பங்கு வர்த்தக ஆணையம், தேர்தல் ஆணையம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, உள்துறை, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையம் மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றைச் சார்ந்த அதிகாரிகளைச் சந்தித்தது.

சாம்பல் பட்டியலிலிருந்து, கறுப்புப் பட்டியலுக்கு மாற்றப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நிதி செயல்பாட்டுக் குழு விதித்த நடைமுறைகளைப் பின்பற்றி, காலக்கெடு உள்ளிட்ட இலக்குகளை எட்டுவதற்குத் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் கூறிக் கொண்டது. இருப்பினும், உலக நிதிக் கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை என்று, நிதி செயல்பாட்டுக் குழுவினால் கண்டறியப்பட்ட எட்டு அம்சங்களிலும் பாகிஸ்தான் அதிக ஆபத்தான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி செயல்பாட்டுக் குழுவில், பாகிஸ்தானுக்கு எதிராக, உலக நாடுகள் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளன. பத்து அம்சத் திட்டத்தின் கீழ், அக்குழு விதித்துள்ள 27 இலக்குகளையும் எட்டுவது, இம்ரான்கான் அரசின் தலையாயப் பணியாகும். கடந்த மாதம் இக்குழு நடத்திய கூட்டங்களில், ஜமாத் உத் தாவா, ஃபலா இ இன்சானியத் போன்ற அமைப்புக்களைத் தடை செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாக, பாகிஸ்தான், ஆசிய பஸிஃபிக் குழுவிடம் தெரிவித்தது.

ஆறு வங்கிகளுக்கு அபராதம் விதித்த பாகிஸ்தான், போலி வங்கிக் கணக்குகளைத் துவக்கியதற்காக, 108 வங்கியாளர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், 2017 ஆம் ஆண்டு, 5,548 ஆக இருந்த சந்தேகத்துக்கிடமான பணப்பரிவர்த்தனைகள், கடந்த ஆண்டில் 8,707 ஆக அதிகரித்துள்ளதாக, நிதி செயல்பாட்டுக் குழு அறிக்கைகளை வெளியிட்டது.

பிரிட்டன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன், பாகிஸ்தான், உளவுத் தகவலைப் பகிர்ந்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. தனது பலதரப்பட்ட நிர்வாக அமைப்புக்களிடையே ஒருங்கிணைப்பை பாகிஸ்தான் மேம்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், தனது தரக் கட்டுப்பாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில், அனைத்து நிதி நடவடிக்கைகளையும் ஆய்வு செய்யும் நிதி செயல்பாட்டுக் குழு, தனது 10 அம்சத் திட்டத்தின்கீழ், 27 இலக்குகள் குறித்து பாகிஸ்தானைக் கண்காணித்து வருகிறது.

இலக்குகளை எட்டுவதில் பாகிஸ்தான் திருப்திகரமாக செயல்படவில்லை என்று நிதி செயல்பாட்டுக் குழு தனது கூட்டங்களில் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு, மே மாத்த்திற்குள் எட்டப்பட வேண்டிய இலக்குகளை நோக்கி தனது நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு, பாகிஸ்தானை இக்குழு வலியுறுத்தியுள்ளது. ஐஎஸ், அல் கைதா, ஜமாத் உத் தாவா, எஃப் ஐ எஃப், லஷ்கர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகமது, ஹக்கானி வலையம் மற்றும் தாலிபான்களுடன் தொடர்பிலுள்ள தனிநபர்கள் ஆகியோர் மீது, பயங்கரவாத நிதியுதவி ஆபத்து குறித்த சரியான புரிதலை பாகிஸ்தான் வெளிப்படுத்தவில்லை என்று இக்குழு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பயனளிக்கும் வகையிலும், தகுந்த தடைகளை உள்ளடக்கியதாகவும் இருப்பதை பாகிஸ்தான் வெளிப்படுத்த வேண்டும். இத்தடைகளை விதிக்கும் அமைப்புக்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு ஆதரவை அதிகரிக்க வேண்டும். ஐ.நா.வின் தீர்மானங்கள் 1267 மற்றும் 1373 இன் படி, குறிப்பிடப்பட்ட பயங்கரவாதிகள் மீது, பயனுள்ள நிதித் தடைகளை பாகிஸ்தான் அமல்படுத்த வேண்டும்.

பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்த, தனது அடுத்த ஆய்வினை வரும் ஜூன் மாதம், நிதி செயல்பாட்டுக் குழு மேற்கொள்ளவிருக்கிறது. அதற்கு முன்னதாக, கூட்டுக்குழுவுடன் நேருக்கு நேர் சந்திப்பு மே மாதம் நிகழவிருக்கிறது. பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக வெற்றிகரமாக, பாகிஸ்தான் செயல்படுவதுடன், அதனை ஆசிய பசிஃபிக் குழு உறுதி செய்தால்தான், மேற்கொண்டு பாகிஸ்தானை சாம்பல் நிறப் பட்டியலிலிருந்து நீக்குவதா அல்லது கறுப்புப் பட்டியலில் இணைப்பதா என்பது குறித்து, வரும் செப்டம்பர் மாதத்தில் நிதி செயல்பாட்டுக் குழு முடிவெடுக்க இயலும்.