முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு வாக்களிக்க தயாராகும் இந்தியா

தி  நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையின் மூத்த சிறப்பு நிருபர் மனிஷ் ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

  உலகின் மிகப் பெரிய ஜன நாயகம் ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்கவிருக்கும் தேர்தல்களை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது.  ஏப்ரல்-மே இரு மாதங்களிலும் இரு வாரங்களுக்குள் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் தேர்தல்களில் இந்தியாவின் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள்  வாக்களிக்க உள்ளனர்.  முதல் கட்டத்தில், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் ப்ரதேசங்களில் 91 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது.  தேர்தல்களை நடத்துவதற்கு மிக விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய மக்கள் 17வது மக்களவைக்கான தங்களது ப்ரநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.  துடிப்பான உயிர்ப்பான ஜன நாயக அரசியலை கொண்டாடுவதற்காக,  தங்களது அபிலாஷைகளை மக்களவைக்கு சென்று நிறைவேற்றுவார்கள் எனும் நம்பிக்கையோடு இந்தியர்கள் தங்களுக்கு பிரியமான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க உள்ளனர்.  உத்தர ப்ரதேசம், மஹாராஷ்ட்ரா, பிஹார், அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் இதர மானிலங்களில் ஒரு சில தொகுதிகளுக்கான தேர்தல்கள் முதல் கட்டத்தில் நிகழ உள்ளன.

ஸ்ரீநகர், நாக்பூர், கசியாபாத், மதுரா ஆகியவை மக்களவைக்கான முதல் கட்ட தேர்தலில் உள்ள சில முக்கிய தொகுதிகளாகும்.  முதல் கட்ட தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  முதல் கட்ட தேர்தலில் உத்தர ப்ரதேச மாநிலத்தில் 8 தொகுதிகள் தேர்தலை சந்திக்க உள்ளன.  மஹாராஷ்ட்ராவில் ஏழு தொகுதிகள், உத்தராகண்ட் மற்றும் அசாமில் தலா 5 தொகுதிகள்,  பிஹாரிலும், ஒடிசாவிலும் தலா 4 தொகுதிகள்,  ஜம்மு காஸ்மீர், அருணாச்சல் ப்ரதேசம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு தொகுதிகள்,  சட்டிஸ்கர், மனிபூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், அந்தமான் நிகோபார் தீவுகள்  மற்றும் லக்ஷத்வீப் தீவுகள் ஆகியவற்றில் தலா ஒவ்வொரு தொகுதிகளில் தேர்தல்கள் முதல் கட்டத்தில் நிகழ உள்ளன.

வேட்பாளர்கள் செய்யும் தேர்தல் செலவுகளை பருந்து பார்வையாக கண்காணிக்க  தேர்தல் ஆணையம் வலுவான ஏற்பாடுகளை செய்துள்ளது.  வேட்பாளர்கள் விளம்பரங்களுக்காக செய்யும் செலவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரத்திற்கான செலவுகள் கண்காணிக்கப்படுகின்றன.  மேலும் தேர்தல் ப்ரச்சாரத்தின் போது தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் மூலமாக சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்து, சச்சரவுகளை தூண்டும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்புவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.  தேர்தல் ஆணையமானது,  தங்களது தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களில் விஷமத்தனமான கருத்துக்களை களைவது  அந்தந்த சமூக ஊடக தளங்களை பொறுப்பென்றாக்கியுள்ளது.  இந்த நடவடிக்கையானது வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும்.

வாக்கு சாவடிகளில் பதிவு செய்யும் தங்களது வாக்குகள் குறித்த துல்லியம் குறித்து வாக்காளர்காளுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.  வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்குகள் குறித்து சரிபார்க்க கூடிய காகித தணிக்கை சோதனை என்ப்படும் வி.வி.பாட்டை தேர்தல் ஆணையம் விரிவு படுத்த உள்ளது.  வாக்காளர்கள்  தாங்கள் அளித்த வாக்குகள்,  தாங்கள் விரும்பிய கட்சியின் சின்னத்திற்கு சரியாக பொருந்துகிறதா என்று சரிபார்த்து கொள்ள முடியும்.  மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் தேர்தல்களை நடத்துவதில் சுலபத்தையும் வேகத்தையும், கொண்டு வந்துள்ளது என்பதை மறுக்கவே முடியாது.  விவிபாட் பயன்பாடானது திறமையாகவும், வெளிப்படைதன்மையுடனும் நடத்தப்படும் தேர்தல்களில் மற்றுமொரு மயிலிறகாகும். விவிபாட் பயன்பாடு குறித்து வாக்காளர்களுகு புரியவைப்பதற்காக தேர்தல் ஆணையமானது ப்ரச்சாரம் செய்து வருவது மிகவும் சரியான நடவடிக்கையாகும்.   அளிக்கும் வாக்குகள் குறித்து அறிந்து கொள்ளும் காகித சோதனை பயன்பாடு உபயோகப்படுத்தப்போவது இதுவே முதன்முறையாகும்.   இந்த அம்சமானது  தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க உதவும்.  சர்ச்சையுள்ள பகுதிகளில்,  வாக்குகள் எண்ணப்படும் நேரம்   நீளக்கூடும்,  ஆனால் இந்த காகித சோதனை முறையானது வெளிப்படைதன்மையை அதிகரிப்பதில் பெரும்பங்கு வகிக்கும்.

இந்தியாவின் மாறிவரும் மக்கள் தொகையானது,  சமீபகாலங்களாக,  தேர்தல்களில் மிகவும் ஆவலோடு வாக்களிக்க வரும் வாக்காளர்களை கண்டு வருகிறது.  இரண்டாயிரத்தில் பிறந்த வாக்காளர்கள் தங்களது ப்ரதி நிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான முதல் வாய்ப்பை பெறப்போகிறார்கள்;  2019 மக்களவை தேர்தலின் ப்ரத்யேக அம்சமாகும் இது.  2000-யிரமாவது ஆண்டிலும் அதற்கு பிறகும் பிறந்த 15 லட்சம் வாக்காளர்கள் இந்தியாவின்  21ஆம் நூற்றாண்டின் கனவை நனவாக்குவதற்கான தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தங்களது வாக்குகளை முதன்முதலாக அளிக்க உள்ளனர்.

மக்கள்தொகை பங்கீடானது நம் நாட்டின் மிகப்பெரிய சொத்தாகும்.    30 வயதிற்கும் கீழிருக்கும் இந்திய ஜனத்தொகையானது மிகப்பெரும் மக்கள் தொகை பங்கீடாகும், இது தேர்தல்களின் போது  மிகத்தெளிவாக  விளங்குகிறது.  இளம் வாக்காளர்கள்,  ஒரு கணிசமான பாகமாக விளங்குகிறார்கள்.   அதன் விளைவாக பெருமளவில் வாக்களிப்பது என்பது இந்திய தேர்தல்களின் போக்காக விளங்குகிறது.

இந்த குறிப்பிடத்தக்க கணிசமான பாகமாக விளங்கும் வாக்காளர்கள் நாட்டின் ஜன நாயகத்தை கொண்டாடும் அதி துடிப்புள்ள பங்கேற்பாளர்களாக செயல்படுகிறார்கள்.  வாக்காளர்கள் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையென்றால்   நோட்டா எனப்படும் இவர்களில் யாருக்கும் இல்லை எனும் கட்டத்தில் தங்களது வாக்குகளை அளிப்பதற்கான வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளாது.