ஆக்கபூர்வமான நல்லுறவுகளுக்கு இந்தியாவும், ரஷ்யாவும் மீண்டும் உறுதி.

(ரஷ்யாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே அவர்கள், ரஷ்யாவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ரஷ்ய வெளியுறவுத் துணை அமைச்சர் இகோர் மார்குலோவ், துணை அமைச்சர் செர்ஜி ரையப்கோவ், துணைப் பிரதமரும், ரஷியாவின் தூர கிழக்குப் பகுதி அதிபரின் பிரதிநிதியுமான யூரி ட்ரூட்னேவ் ஆகியோரைச் சந்தித்து பயனுள்ள பேச்சு நடத்தினார்.

ரஷிய அமைச்சர்களுடன் கோகலே அவர்கள் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தார். 2018 ஆம் ஆண்டின், வருடாந்திர இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அமலாக்கம் குறித்து, ரஷ்ய வெளியுறவுத் துணை அமைச்சர் இகோர் மார்குலோவ் அவர்களுடன் ஆய்வு செய்தார். இவ்வாண்டு, விளாடிவாஸ்டாக்கில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கிழக்கு பொருளாதார மேடையில் இந்தியா பங்கு கொள்வது குறித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். கிழக்கு பொருளாதார மேடையில் பங்கேற்குமாறு, பிரதமர் திரு நரேந்திர மோதிக்கு ரஷ்ய அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சீனா-இந்தியா-ரஷ்யா முத்தரப்புக் குழு, ஐ.நா., ஜி-20 ஆகிய அமைப்புக்களில் இருநாட்டு ஒதுழைப்பு குறித்தும் இருவரும் விவாதித்தனர். ஆஃப்கானிஸ்தானில் உருவாகி வரும் நிலைமை குறித்து இருதரப்பிலும் விவாதித்தனர்.

ஆயுதக் குறைப்பு, பரவாமை, சர்வதேச மேடைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல பிராந்திய, சர்வதேச விஷயங்கள் குறித்து, துணை அமைச்சர் ரையப்கோவ் அவர்களுடன் திரு கோகலே விவாதித்தார். குறிப்பாக, அணுப்பொருள் வினியோகக் குழுவில் இந்தியா உறுப்பினராவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதற்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பேச்சுக்கள் மிகவும் பயனளிப்பவையாக இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக, பிராந்திய, இருதரப்பு நிகழ்வுகளின் பின்னணியில், இருநாட்டு வெளியுறவு அலுவலகங்களுக்கு இடையிலான ஆலோசனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரஷ்ய அதிபர் புடின் அவர்கள் கூறியதுபோல், இருநாட்டு உறவுகள் ஆக்கபூர்வமாகவும், துடிப்புடனும் வளர்ந்து வருகின்றன. சவாலான தருணங்களில் இருதரப்பு உறவுகள் இருநாடுகளுக்கும் கைகொடுத்துள்ளன.

கடந்த ஆண்டு, அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, இந்தியா, ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்மூலம், முன்னாள் பனிப்போர் எதிரிகளான அமெரிக்கா, ரஷ்யா உள்பட, உலகநாடுகளுக்கிடையே, தெளிவான, நடுநிலையான தனது முன்னுரிமைகளை இந்தியா பறைசாற்றியுள்ளது. பாகிஸ்தானிடம் நெருக்கத்தை அதிகரித்தாலும், ரஷ்யா இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. உதாரணமாக, ஜெய்ஷ் ஏ முகமதுவின் தலைவன் மசூத் அஸரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியா விடுத்துள்ள கோரிக்கைக்கு ரஷ்யா ஆதரவளிப்பதோடு, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்தும் ஆதரவு பெற முயற்சிக்கிறது.

பலதரப்பட்ட இருதரப்பு விஷயங்களில், இருநாடுகளும் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இதன் எதிரொலியாக, இருதரப்பு வர்த்தகமும் பெருகி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள், இருதரப்பு வர்த்தகத்தை 5,000 கோடி டாலர் அளவிற்கு எடுத்துச் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இருதரப்பு வர்த்தகம், 3000 கோடி டாலர் அளவை எட்டி சாதனை படைத்துள்ளது. பலநாடுகளிலிருந்தும் தனது பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா முற்பட்டாலும், ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி உற்பத்திக்காக, இருநாடுகளுக்குமிடையே கூட்டு நிறுவனம் ஏற்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வேலைவாய்ப்புக்களும், வருவாயும் அதிகரிக்கும்.

இந்தியாவும், ரஷ்யாவும் பழைய, புதிய துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் முனைப்பாக உள்ளன. மொத்தத்தில், இருநாடுகளும் சந்தித்து வரும் சவால்களையும் தாண்டி, இருநாட்டு உறவுகள் வலுத்து வருகின்றன. யூரேஷியாவில் புதிய வாய்ப்புக்கள் உருவாகி வரும் நிலையில், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகளின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்றால் அது மிகையல்ல.